தகுதி குறைவான மதிப்பெண்களைப் பெற்று, தேவையற்ற நன்கொடைகளை கல்லூரிகளுக்களித்து மாணாக்கர் மேற்படிப்புகளில் சேர்வதைத் தவிர்த்து, சிறப்புத் தேர்ச்சி (கட்-ஆஃப்) மதிப்பெண் பெற்று மேற்படிப்பைத் தொடர்வது குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கூட்டுமாறு நகரின் கல்விச் சேவை அமைப்புகளை, சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்ற செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உலகமெல்லாம் படைத்து அரசாட்சி புரிகின்ற எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பெருங்கருணையினால் எமது ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 29ஆவது செயற்குழுக் கூட்டம் அல்ஹாபிழ் ஷைக் தாவூத் இத்ரீஸ் அவர்கள் இல்லத்தில், 09.03.2012 வெள்ளிக்கிழமை புனித ஜும்ஆ தொழுகைக்குப் பின், பொறியாளர் முஹ்யித்தீன் சதக்கதுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அல்ஹாபிழ் பி.எஸ்.ஜே.ஜைனுல் ஆப்தீன் இறைமறை ஓதி துவங்கி வைத்தார்கள்.
காயல் மாநகர நகரின் பல்வேறு விசயங்கள் அலசி ஆராயப்பட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது:-
தீர்மானம் 1 - கட்-ஆஃப் மார்க்:
மேல் நிலை +2 தேர்வில் தேர்வு எழுதும் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் கட் ஆப் மார்க் 195 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் பெரும் மாணவ, மாணவியர் காயல் நகருக்குட்பட்டவர்களுக்கு மட்டும் ரூபாய் 2000/- வெகுமதி இக்ராவின் ஒத்துழைப்போடு வழங்குவது என்று முடிவுசெய்யப்பட்டது.
இக்ராஃ, தி காயல் ஃபஸ்ட் ட்ரஸ்ட் மற்றும் காயல் மாநகர ஆசிரியர்கள் தமது பள்ளி மாணவர்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி, நன்கொடை இல்லாமல் பொறியியல், மருத்துவம் படிக்க கட்-ஆஃப் மார்க் விசயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறது.
பெற்றோர்கள் அவசரப்பட்டு நன்கொடைகளைக் கொடுத்து விடாமல் விழிப்போடு இருக்குமாறு எம் மன்றம் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2 - மருத்துவ விழிப்புணர்வு முகாம்:
கத்தார் காயல் நற்பணி மன்றம் நமதூரில் நடத்த இருக்கிற மருத்துவ விழிப்புணர்வு முகாமில் எமது மன்றமும் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - புரவலர் சந்தா:
எமது மன்றத்தில் இணைந்து பணியாற்றி, தற்போது ஊரில் அல்லது இன்ன பிற ஊர்களின் வசிக்கும் நமது முன்னாள் அங்கத்தினர்கள் மற்றும் நமது அமைப்பின் அபிமானிகளின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க புரவலர் சந்தா என்ற ஒரு முறையை ஏற்படுத்தி வருடம் ஒன்றுக்கு ரூபாய் 1200 /= அல்லது தாங்கள் விரும்பும் பணத்தை சந்தாவாகவோ அல்லது நன்கொடையாகவோ வழங்கலாம் என்று எமது செயற்குழு மெத்த மகிழ்வுடன் தெரிவிக்கிறது.
தீர்மானம் 4 - மைக்ரோ காயல்:
மருத்துவ உதவிகள் ஒரு சேர எல்லா மன்றங்களும் ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் தேவை உடையவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கும் எண்ணத்தோடு சில சமூக நல விரும்பிகளால் துவங்கி இருக்கும் மைக்ரோ காயல் அமைப்பு மிக நல்ல பயனுள்ள மெச்ச தகுந்த அமைப்பு என்று எமது மன்றம் வாழ்த்தி வரவேற்கிறது.
இவ்வமைப்பில் எமது மன்றமும் இணையவேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை அதன் ஒருங்கிணைப்பாளர் முன் வைத்துள்ளார். எமது செயற்குழு அது பற்றி தீர ஆராய்ந்து, இது (இக்ராஃ போன்ற) ஒரு அமைப்பு போல் செயல்படும் பட்சத்தில் எங்களின் முழு ஒத்துழைப்பும் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் : 5 - நலத்திட்ட உதவிகள்:
நமதூர் வறிய மக்களிடம் இருந்து வந்த கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்டவாறு உதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இறைவனுக்கு பொருத்தமான இவ்வுயர் துயர் துடைக்கும் சீரிய பணிக்கு தாரளமாக உதவிய அன்பு உள்ளங்களுக்கு மனபூர்வமான வாழ்த்துகளையும் துவாவையும் தெரிவிக்கிறது.
1) ஒன்பது நபர்களுக்கு மருத்துவ வகைக்கு ரூபாய் 1,52,500/- தொகையும்,
2) ஒரு நபருக்கு சிறுதொழில் வகைக்கு ரூபாய் 8,000/- தொகையும்
ஆக மொத்தம் ரூபாய் 1,60,500/- வழங்க தீர்மானிக்கபட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மன்ற செயலாளர் கூஸ் அபூபக்கர் அவர்களால் நன்றி நவிலப்பட்டு, பிரபு செய்குனா ஆலிம் அவர்களால் துஆ ஓதி, ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்து கூறி, வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் செயற்குழுக் கூட்டம் நனி சிறப்போடு நிறைவுபெற்றது. கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர், அல்ஹம்து லில்லாஹ்!
இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.M.முஹம்மத் லெப்பை,
செய்தித் தொடர்பாளர்,
காயல் நற்பணி மன்றம்,
ரியாத், சஊதி அரபிய்யா. |