எழும்பூர் ரயில் நிலையம் அருகே இன்ஜின் தடம் புரண்டதால் இன்று அதிகாலை வரவேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 05.00 மணிக்கு மேல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழும்பூர் கோபால்சாமி நகர் ரயில் இன்ஜின் பணிமனையில் இருந்து நேற்று மாலை 2 மின்சார ரயில் இன்ஜின்கள், ராயபுரம் பணிமனைக்கு புறப்பட்டு சென்றன. இரண்டு இன்ஜின்களும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. எழும்பூர் ரயில் நிலையம் அருகில் மாலை 06.20 மணிக்கு வரும்போது, இன்ஜின் டிரைவர் சிவப்பு சிக்னலை கவனிக்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால், இரண்டு இன்ஜின்களும் தடம் புரண்டது. தகவல் அறிந்ததும், கோட்ட ரயில்வே மேலாளர் அனந்தராமன், முதன்மை தலைமை பொறியாளர் சதீஷ் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்தை பார்வையிட்ட பிறகு மீட்பு பணிகள் தொடங்கின. பேசின் பணிமனையில் இருந்து விபத்து மீட்பு ரயில் கொண்டு வரப்பட்டது. இன்ஜின் தடம் புரண்டதால் 4, 5 நடைமேடைகளில் இருந்த ரயில்களை இயக்க முடியவில்லை.
புதுச்சேரி எக்ஸ்பிரஸ் 06.10க்கு பதிலாக 07.50க்கு புறப்பட்டது. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரவு 09.15 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. பொதிகை எக்ஸ்பிரஸ் இரவு 08.45க்கு புறப்பட்டுச் சென்றது. அதேபோல், ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 09.15 மணிக்கு புறப்பட்டது. மும்பை தாதரில் இருந்து எழும்பூர் வரும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில் ராயபுரத்திலே நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.
எழும்பூர் செல்ல வேண்டிய பயணிகள் வாகனம் மூலம் அனுப்பப்பட்டனர். கோபால்சாமி நகர் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முத்துநகர், நெல்லை, பாண்டியன், ராமேஸ்வரம், மங்களூர், ராக்போர்ட், சேலம், காரைக்கால், நாகூர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் பணிமனையில் இருந்து கொண்டுவர முடியாத காரணத்தால், ஒவ்வொன்றாக வரவழைக்கப்பட்டு இரவு 10.00 மணிக்கு மேல் புறப்பட்டுச் சென்றன. தடம் புரண்ட இன்ஜின்களை மீட்கும் பணி இரவு 10.00 மணி வரை நீடித்தது.
தென்மாவட்ட ரயில்கள் மணிக்கணக்கில் தாமதமாக புறப்பட்டது. முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 01.00 மணிக்கு புறப்பட்டது. இன்று மாலை 05.00 மணியளவில் அது தூத்துக்குடியை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் வழக்கமாக காலை 07.00 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |