உடல் ஊனமுற்றோருக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF), காக்கும் கரங்கள் அமைப்புகளின் இணைந்தேற்பாட்டில், 13.03.2012 செவ்வாய்க்கிழமையன்று (நேற்று) காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை, இளைஞர் ஐக்கிய முன்னணி வளாகத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலி SCAD தொண்டு நிறுவனம் நடத்திய இம்முகாமில், உடல் ஊனமுற்ற - மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு, SCAD தொண்டு நிறுவனத்தின் சேவைப்பணிகளில் இணைந்து செயல்படுவதற்காக, பெல்ஜியம் நாட்டிலிருந்து தன்னார்வத்துடன் கலந்துகொண்டுள்ள மேரியஸ், ஃபீத்ரா, லீசே ஆகிய occupational therapist-கள் பரிசோதனை செய்து, உடல் மற்றும் மன நல ஆலோசனைகளை வழங்கினர்.
மன வளர்ச்சி குன்றியோருக்கு - மூளைக்கு தூண்டுதலளிக்கும் வகையிலான - கலைந்த உருவங்களை சேர்த்தல், வடிவங்களை அதற்கான துளைகளில் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பொருட்களை அளித்து சோதனை செய்தனர். அப்பொருட்களை அவர்கள் பயன்படுத்தும் விதத்தைக் கூர்ந்து கவனித்து, அவர்களிடமுள்ள பலம் - பலவீனங்களை பெற்றோருக்குத் தெரிவித்த தன்னார்வ சேவையாளர்கள், மன வளர்ச்சி குன்றிய அவர்களை வீட்டில் நடத்த வேண்டிய விதம் குறித்து தீர்க்கமான ஆலோசனைகளை வழங்கினர்.
ஆங்கிலத்தில் அவர்கள் அளித்த ஆலோசனைகளை பெற்றோருக்கு தமிழிலும், தமிழில் பெற்றோர் தெரிவித்த கருத்துக்களை தன்னார்வ சேவையாளர்களுக்கு ஆங்கிலத்திலும், SCAD தொண்டு நிறுவனத்தின் மூத்த ஒருங்கிணைப்பாளர் ப்ரின்ஸ் மோல் மொழிபெயர்த்தார்.
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, இளைஞர் ஐக்கிய முன்னணியின் வெளி வளாகத்தில் ஒருபுறம் இந்த ஆலோசனை நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், மறுபுறம் புகாரி நினைவு நூலக அரங்கில், முகாமில் கலந்துகொள்வோரின் பெயர் பதிவு, அரசு சலுகைகளைப் பெற்றிடுவதற்கான வழிகாட்டல், செவித்திறன், பேச்சுத்திறன் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை, பிசியோதெரபிஸ்ட் அருணா, ப்ரேம் குமார், பேச்சுப் பயிற்சியாளர் ப்ரிஸில்லா, ஆர்த்தோ நிபுணர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை ஆலோசகர் மல்லிகா ராஜ் ஆகிய SCAD தொண்டு நிறுவன குழுவினர் செய்தனர்.
விளையாட்டுத் துறை ஆலோசகர் மல்லிகா ராஜ் என்பவர், அண்மையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில், தனது பொறுப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சியளித்து, பரிசுகளைப் பெறச் செய்வதர் என்பது குறிப்பிடத்தக்கது.
முகாம் நடவடிக்கைகளை, இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், பொறுப்பாளர்களான ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக், காக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் தலைமையில் அதன் உறுப்பினர்கள், ஐக்கிய சமாதானப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் புகாரீ, பொதுநல ஆர்வலர்களான முஹம்மத் நூஹ், செய்கு சுலைமான், ஏ.எல்.நிஜார் அஹ்மத், SCAD தொண்டு நிறுவன தலைமை ஒருங்கிணைப்பாளர்களான மனோகரன், மில்கி ஸ்டீஃபன், தொழிற்பயிற்சியாளர் தப்ரேஜ் மற்றும் SCAD தொண்டு நிறுவன அங்கத்தினரான மாடத்தி, லதா, சண்முகத்தாய், சந்தன செல்வி, அம்சவல்லி, சமூக ஆர்வலர் ஏ.பி.ஹஸீனா தர்வேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இம்முகாமில், 14 குழந்தைகள் உட்பட 21 பெண்கள், 32 ஆண்கள் என மொத்தம் 53 பேருக்கு மன மற்றும் உடல் நல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மன வளர்ச்சி குன்றியவர்கள் வளர வளர, அவர்களின் ஊனம் குறைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதுபோன்ற பயிற்சி மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில், வாரந்தோறும் குறைந்தது இரண்டு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இயன்றளவுக்கு அறுவை சிகிச்சைகளைத் தவிர்த்திடும் வகையில் பயிற்சிகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், அறுவை சிகிச்சை அவசியப்படுவோருக்கு சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சையைப் பெற்றிட வழிவகை செய்யப்பட்டு வருவதாகவும், SCAD தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். |