இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தமிழகத்தில், தொடர் மின்தடைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், தென் மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் லீகினரை இணைத்து, தமிழக அரசுக்கெதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காயல்பட்டினம் துளிர் பள்ளி வளாகத்தில், 09.03.2012 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு:-
மார்ச் 10ஆம் தேதியன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 65ஆவது நிறுவன தினமாகும். அதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் பிறைக்கொடி ஏற்றப்படவுள்ளது.
முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழகத்தில் 65 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட இளைஞரணி, மாணவரணி, சுதந்திர தொழிலாளர் யூனியன் ஆகிய அணிகளுக்கு, தூத்துக்குடி மாவட்ட அளவில் அமைப்புக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று மாலையில் காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்களில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அமைப்புக்குழு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அணிகளான இளைஞரணிக்கு (Youth League) திரேஸ்புரம் மீராசா அவர்களை அமைப்பாளராகக் கொண்டும், மாணவரணிக்கு (MSF) காயல்பட்டினம் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் அவர்களை அமைப்பாளராகக் கொண்டும், சுதந்திர தொழிலாளர் யூனியனுக்கு (STU) காயல்பட்டினம் ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன் அவர்களை அமைப்பாளராகக் கொண்டும், தலா ஒவ்வோர் அணிக்கும் 11 அமைப்புக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தும், இன்று வரை அதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில், ஏற்கனவே திமுக ஆட்சியின்போது முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கியதற்காகவும், சிறுபான்மை நல வாரியத்திற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கியமைக்காகவும், உலமாக்கள் - பணியாளர் நல வாரியம் அமைத்து, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்கச் செய்தமைக்காகவும், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலாளராகிய நான் பிரச்சாரம் செய்து வந்துள்ளேன். அங்குள்ள முஸ்லிம் லீகினர் தொடர்ந்து களப்பணியாற்றி வருகின்றனர்.
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில், ரூபாய் 70 லட்சம் தொகை ஒதுக்கப்பட்டு, செய்யப்பட்டு வந்த புனரமைப்புப் பணிகளில், செய்யப்படாமல் நிலுவையிலுள்ள பணிகளை நிறைவேற்றுவது குறித்து ஏப்ரல் மாத இறுதிக்குள் தொடர்வண்டித் துறையிடமிருந்து பதில் எதிர்பார்க்கப்படுகிறது. சாதகமான பதில் கிடைக்கப்பெறாவிடில், காயல்பட்டினத்திலுள்ள அனைத்து ஜமாஅத்துகளையும் திரட்டி, மே மாத முதல் வாரத்தில் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மணி நேரம் முறையற்று மின்தடை செய்யப்பட்டு வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. மின் பற்றாக்குறையை சமாளிக்க, கூடங்குளம் அணுமின் நிலையத்தை - பொதுமக்களின் அச்சத்தைப் போக்கி விரைந்து செயல்படுத்திட அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தான் ஆட்சிக்கு வந்தால், மின்வெட்டை முற்றிலுமாக நீக்குவதாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, ஏற்கனவே இருந்த மின்வெட்டை விட பல மணி நேரங்கள் அதிகமாக மின்வெட்டு செய்து வருகிறது. இதன் காரணமாக பலதரப்பட்ட பொதுமக்களும், வணிகர்களும், மாணவ-மாணவியரும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மின்தடையை விரைந்து போக்க மாநில அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெதிராக ஒரு சிறு கூட்டம் நடத்தி வரும் போராட்டத்தை சில குறுகிய எண்ணம் கொண்டவர்கள் ஊதிப் பெரிதாக்க முனைகின்றனர். மத்திய - மாநில அரசுகள் அவர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு பிரச்சினையை தமிழக அரசு விரைந்து தீர்க்காவிட்டால், தென் மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளைக் கலந்தாலோசித்து, மிகப்பெரிய அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறோம்.
காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.அப்துல் காதிர் மன்ஸில் கட்டிட திறப்பு விழா மற்றும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தை, வரும் மே மாதம் 23ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடத்திடவும், அப்பொதுக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய செயலாளரும் - கேரள சட்டமன்ற உறுப்பினரும் - பன்மொழிப்புலவருமான அப்துஸ்ஸமது ஸமதானீ ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து உரையாற்றச் செய்வதென்றும் தீர்மானித்திருக்கிறோம்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், முஸ்லிம் லீக் சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில அமைப்பாளர் கே.எம்.நிஜாமுத்தீன், இளைஞரணி மாநில செயலாளர் பள்ளப்பட்டி முஹம்மத் யூனுஸ், இணைச் செயலாளர் தென்காசி முஹம்மத் அலீ, மாணவரணி மாநில அமைப்பாளர் பாம்புக்கோவில்சந்தை செய்யது பட்டாணி, முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். |