காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் இரண்டாம் கட்டப் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
காயல்பட்டினத்தில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்த, கடந்த ஜனவரி மாதம் 06ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 03ஆம் தேதியன்று, திருச்செந்தூர் சாலையிலிருந்து பெரிய நெசவுத் தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார் வழியாக பேருந்து நிலையம் வரையிலும் ஒரு வழியாகவும், பேருந்து நிலையத்திலிருந்து ஹாஜியப்பா தைக்கா தெரு, பிரதான வீதி, கே.டி.எம். தெரு ஒரு வழியாகவும் என நகரில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டது.
பேருந்து போக்குவரத்திற்காக வரையறுக்கப்பட்ட இவ்வீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்தகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில், பிப்ரவரி 26 அன்று, காயல்பட்டினம் தாயிம்பள்ளி திருப்பம் வழியாக பெரிய நெசவுத் தெருவிற்குள் திரும்பும் வளைவில், தென்புறமிருந்த வீடு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலையிலிருந்த ஒரு வீடு உள்ளிட்டவை, ஆக்கிரமிப்புகள் என பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது.
இரண்டாம் கட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று காலையில் துவங்கியது. காலை 10.30 மணிக்கு, அகற்றப்பட வேண்டிய கட்டிடப் பகுதிகளை அதிகாரிகள் அளந்து குறிகளிட்டனர். இணைப்பிலிருந்த மின் கம்பி வடங்கள் துண்டிக்கப்பட்டன. கட்டிடங்களின் பூட்டுகள் உடைத்து திறக்கப்பட்டன. உட்புறமிருந்த - அகற்றவியலும் பொருட்கள் பாதுகாப்பாக வெளியில் எடுத்து வைக்கப்பட்டது.
11.00 மணிக்கு, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் பகுதிக்குள் பொதுமக்கள் செல்லாதிருக்கும் பொருட்டு, பெரிய நெசவுத் தெருவிலிருந்து எல்.கே.லெப்பைத்தம்பி சாலைக்குள் செல்லும் நுழைவுப்பகுதி, பிரதான வீதியிலிருந்து பெரிய தெருவிற்குள் செல்லும் நுழைவுப்பகுதி, கூலக்கடை பஜார் ஆகிய இடங்களில் சிவப்புக் கொடியுடன் தடுப்புக் கயிறு கட்டப்பட்டிருந்தது.
எல்.கே.லெப்பைத்தம்பி சாலையிலுள்ள எஸ்.எம்.காம்ப்ளக்ஸ் கட்டிடம், இரண்டு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு தற்போது அகற்றப்பட்டு வருகிறது.
எஸ்.எம்.காம்ப்ளக்ஸ் கட்டிடத்திற்கு மேற்புறத்தில் அதே அளவில் அமைந்துள்ள எல்.கே.துவக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரும் ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் வருவதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சுற்றுச்சுவருக்குள் இருந்த மிதிவண்டி நிறுத்துமிடம், பிரதான வாயிற்கதவுகள் உள்ளிட்டவை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் சுற்றுச்சுவரும் அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்புலக்ஷ்மி, பணி மேற்பார்வையாளர் செல்வலிங்கம், தொழில்நுட்ப உதவியாளர் செந்தில் குமார், சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ், சுகாதார துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் வட்டாட்சியர் வீராசாமி, வருவாய் ஆய்வாளர்களான சுரேஷ், சங்கர நாராயணன், கிராம நிர்வாக அதிகாரிகளான செல்வலிங்கம், பால்பாண்டி, வெங்கட சுப்பிரமணியம், நில அளவையர் கந்தப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஞானசேகரன், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் உள்ளிட்ட காவல்துறையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை நகர பொதுமக்கள் திரண்டு நின்றவாறு பார்வையிட்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிக்காக, இன்று காலை 10.00 மணி முதல் தற்காலிகமாக ஒருவழிப்பாதை நடைமுறை நீக்கப்பட்டு, கே.டி.எம். தெரு - பிரதான வீதி - ஹாஜியப்பா தைக்கா தெரு வழியே இருவழிப்பாதையாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. |