திருச்செந்தூர் பேருந்து நிலையம் எதிரில் மேற்கு திசையில் அமைந்துள்ளது முஹ்யித்தீன் பள்ளிவாசல்.
காயல்பட்டினம் - தூத்துக்குடி நெடுஞ்சாலையில், பேயன்விளையையடுத்து - காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்திற்கு எதிரில் வடகிழக்கில் அமைந்துள்ளது ஷாஹுல் ஹமீதிய்யா பள்ளிவாசல் என்ற ஸ்டேஷன் பள்ளி.
காயல்பட்டினத்திலிருந்து பணி நிமிர்த்தமாக திருச்செந்தூர் செல்வோரும், தொடர்வண்டியில் பயணிப்பதற்காக நிலையம் செல்வோரம் தொழுகை நேரம் வந்தவுடன் தமது கடமையை குறித்த நேரத்தில் நிறைவு செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்ற நன்னோக்கத்தில், இலங்கை மலையக பகுதியில் வணிகம் செய்து வந்த - காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த ஷாஹுல் ஹமீத் ஹாஜியார் என்பவர், தன் பங்களிப்பையும் செலுத்தி, பொதுமக்களிடமும் நன்கொடை வசூலித்து 1960களில் இப்பள்ளிகளைக் கட்டியிருக்கிறார். இதன் காரணமாகவே, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்திற்கருகிலுள்ள ஸ்டேஷன் பள்ளி - ஷாஹுல் ஹமீதிய்யா பள்ளி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இவ்விரு பள்ளிகளுக்கும், அக்காலத்தில் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதை உருவாக்கிய - காயல்பட்டினத்தின் பெரியவர்களை உள்ளடக்கிய ஜனநாயக சபையைச் சேர்ந்த 15 பேர் துவக்க உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இந்த உறுப்பினர்கள் செயல்பட இயலாமற்போனாலோ அல்லது காலமானாலோ, எஞ்சிய நிர்வாகக் குழுவினர் கலந்தாலோசித்து, வெற்றிடத்திற்கு பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்ற - இப்பள்ளிகளின் வக்ஃப் நாமா படி, தற்போது இப்பள்ளிவாசலை, சென்னை பாரிமுனை எல்.கே.எஸ்.ஜுவல்லர்ஸ் அதிபர்களுள் ஒருவரான ஹாஜி எல்.கே.கே.லெப்பைத் தம்பி பள்ளியின் தலைவராகவும், பொறியாளர் ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், எஸ்.எச்.ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.எஸ்.) ஆகியோர் செயலாளர்களாகவும் பொறுப்பேற்று நிர்வகித்து வருகின்றனர்.
திருச்செந்தூர் முஹ்யித்தீன் பள்ளிவாசலில், காயல்பட்டினத்திலிருந்து வந்து செல்வோர் தவிர, அப்பகுதியிலேயே தொழில் செய்யும் - உடன்குடி, பரமன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், காயாமொழி ஆகிய சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்களும் தினமும் ஐவேளை தொழுகையிலும், ரமழான் சிறப்பு செயல்பாடுகளிலும் பங்கேற்று வருகின்றனர்.
தற்காலத்தில் இப்பள்ளிக்கு வருகை தரும் தொழுகையாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், பள்ளியின் கட்டிடம் பழுதடைந்து வருவதைக் கருத்திற்கொண்டும், பள்ளியின் பழைய கட்டிடத்தை முழுமையாக அகற்றிவிட்டு, 20 முதல் 25 லட்சம் ரூபாய் செலவு மதிப்பீட்டில் விசாலமான புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சில நிர்வாக காரணங்களுக்காக கட்டிடப் பணிகள் துவங்க தாமதமாகி வருவதாகவும், விரைவில் கட்டிடப்பணிகள் துவக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பள்ளிவாசலில் தினமும் ஐவேளைத் தொழுகை, வாரந்தோறும் ஜும்ஆ தொழுகை நடைபெற்று வருகிறது. இது தவிர, ரமழான் காலங்களில் கியாமுல் லைல் - இரவுத் தொழுகையும் நடத்தப்பட்டு வருகிறது. உடன்குடியைச் சேர்ந்த ஹிலாலுத்தீன் என்பவர் பள்ளியின் இமாமாகப் பணியாற்றி, இவ்வனைத்து வணக்க வழிபாடுகளையும் வழிநடத்தி வருகிறார். பள்ளியின் பிலால் பொறுப்பையும் அவரே செய்து வருகிறார்.
ரமழானை முன்னிட்டு, தினமும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி இப்பள்ளியில் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - ஐ.ஐ.எம். நிர்வாகத்திலிருந்து கட்டணம் செலுத்தி நோன்புக் கஞ்சி பெறப்பட்டு வருகிறது.
இஃப்தார் நிகழ்ச்சியில் தினமும் 20 முதல் 40 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், கஞ்சி, தண்ணீர் பாக்கெட், வடை வகைகள், அவ்வப்போது குளிர்பானம் பரிமாறப்படுகிறது.
11.08.2012 அன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவுசெய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
களத்தொகுப்பில் உதவி:
Y.M.முஹம்மத் தம்பி
A.K.M.ஜுவல்லர்ஸ்,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |