இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 11.12.2010 அன்று மாநில மாநாட்டு நடைபெற்றது. அன்று காலையில் நடைபெற்ற மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு கருத்தரங்க நிகழ்வுகளின் இறுதியில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - மஹல்லா ஜமாஅத் மாண்பை காப்போம்!
இஸ்லாத்தின் சிறப்பம்சமாகிய மஹல்லா ஜமாஅத் வலிமையாக இருந்தால்தான் சமுதாயம் சிறப்படையும். பள்ளிவாசலை நிர்வகிப்பது, கபரஸ்தானை பராமரிப்பது என்ற அளவில் மட்டும் ஜமாஅத் கடமையை முடித்து விடாமல் முன்மாதிரி மஹல்லா ஜமாஅத்தாக திகழச் செய்ய பாடுபட வேண்டும்.
இதற்காக, பைத்துல்மால், ஷரீஅத் பஞ்சாயத், மத்ரஸா, கல்வி - தொழிற்பயிற்சி நிலையங்கள், நூலகங்கள், முஸ்லிம் பெண்களுக்கான உதவும் சங்கங்கள், ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவி, ஏழை குமர் திருமண உதவி, ஆதரவற்றோர்/ முதியோர் பராமரிப்பு, வட்டியில்லா கடனுதவி, இலவச மருத்துவ உதவி, திருமண பதிவேடு, பிறப்பு - இறப்பு பதிவேடு பராமரித்தல் உள்ளிட்டவைகள் ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் செயல்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
மத்திய மாநில அரசுகள் வழங்குகின்ற உதவி களை சலுகைகளை சமுதாயத்திற்கு முழுமையாக சென்றடையும் வகையில் ஜும்ஆக்களில் அறிவிப்பு செய்வதும் மஹல்லா ஜமாஅத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் கடமையாகிறது.
மீலாது விழாக்கள், பெருநாள் சகோதரத்துவ சந்திப்புக்களான ஈது மிலன்கள் ஆண்டு தோறும் நடத்தி அதில் அனைத்து சமய பெருமக்களையும் பங்கேற்கச் செய்து சமய நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டும்.
மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாடு என்பது நம் மார்க்க கடமை. இந்த கட்டுப்பாடு சீர்குலைய நாம் ஒருபோதும் இடமளித்து விடக்கூடாது.
ரமளான் தலைப்பிறை, ரமளான், பக்ரீத் பெருநாட்களை தலைமை காஜியின் அறிவிப்பை ஏற்று அந்த நாளில் மட்டுமே பெருநாள் தொழுகை நடத்தப்பட வேண்டும்.
தேவையற்ற வாதங்களும், விதண்டாவாதங்களும் நடத்தப்படுவதை ஆதரிக்கவோ ஊக்கப்படுத்தவோ முயற்சிக்க கூடாது. ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்தும் இவைகளை பின்ப ற்றி நடந்தால் முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட்ட வலிமையான சமுதாயமாகத் திகழும்; அதனால் எண்ணற்ற நலன்கள் விளையும்.
எனவே இவைகளில் கவனம் செலுத்துமாறு அனைத்து மஹல்லா ஜமாஅத்தையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இந்த மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 02 - குத்பா சொற்பொழிவுகள்:
வெள்ளிதோறும் நடைபெறும் ஜும்ஆ குத்பா சொற்பொழிவுகள், வளர்ந்து வரும் இளைய தலை முறையினருக்கு இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் பற்றிய விளக்கமும் தெளிவும் ஏற்படுத்தும் வகையில் அமையுமாறு மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உலமாகளை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 03 - உலமாகளுக்கு உரிய ஊதியம்:
மஸ்ஜிதுகளிலும் அரபி மதரஸாகளிலும் பணியாற்றும் உலமாகளுக்கு உரியதும் போதியதும் கண்ணியமானதுமான ஊதியங்கள் வழங்குவதற்கு மஹல்லா ஜமாஅத் நிர்வாகங்கள் மகிழ்ச்சியோடு முன்வர வேண்டுமென இந்த மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 04 - தமிழ்நாடு ஃபத்வா கவுன்சில்:
நோன்பு காலங்களில் பிறை பிறக்கும் தேதி, ஈது பெருநாட்கள் பற்றிய அறிவிப்பு போன்றவற்றில் குழப்பம் ஏற்படாதிருக்கவும், மார்க்கச் சட்ட விஷயங்களில் முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமையாகச் செயல்படுவதற்கு வழிகாட்டுவதற்கும் தமிழக அரசின் தலைமை காஜி அவர்களின் தலைமையில் மாவட்ட காஜிகள், ஜமாத்துல் உலமா சபை பிரதிநிதிகள், மஹல்லா ஜமாஅத் பிரதிநிதிகள் இடம் பெறும் தமிழ்நாடு ஃபத்வா கவுன்சில் உருவாக்குவது என்று இந்த மாநில மாநாடு தீர்மானிக்கிறது.
தீர்மானம் 05 - தமிழ்நாடு மஹல்லா ஜமாஅத் உதவிநிதி:
தமிழகத்தில் உள்ள குக்கிராமங்களிலும், மிகவும் பின்தங்கிய நகர்ப்புறப் பகுதிகளிலும் உருவாகி வரும் மஸ்ஜிதுகளைப் பராமரிப்பதற்குச் சிரமப்படும் மஹல்லா ஜமாஅத்துகளுக்கு உதவிகரமாக இருப்பதற்கு தமிழ்நாடு மஹல்லா ஜமாஅத் உதவி நிதி (Mahalla Jamaat Fund) உருவாக்குவது என இந்த மாநில மாநாடு தீர்மானிக்கிறது.
தீர்மானம் 06 - மஹல்லா ஜமாஅத் ஆலோசனை குழு:
மஹல்லா ஜமாஅத்துகளை வலிமைமிக்கதாகவும் தன்னிறைவு பெற்றதாகவும் உருவாக்கும் திட்டங்களையும், தீர்மானங்களையும் நடை முறைப்படுத்துவதற்கு தமிழக உமராக்கள், உலமாக்கள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைப்பது என்றும், அந்த குழுவின் கன்வீனராக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செயல்படுவார் எனவும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது.
தீர்மானம் 07 - மக்கள் தொகை கணக்கெடுப்பு:
நம் நாட்டில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது நடைபெறுகிறது. இதில் நம் சமுதாய மக்கள் எவரது பெயரும் விடுபடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்யப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
மக்கள்தொகை அடிப்படையில்தான் இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து உரிமை களையும் நிலைநாட்ட வேண்டியுள்ளது. அத்துடன் அனைத்து காரியங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் ஒவ்வொருவருக்கும் பயோமெட்ரிக் கார்டு வழங்கப்பட உள்ளது.
எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பில் நம் சமுதாய மக்கள் ஒவ்வொருவர் பெயரும் விடுபடாமல் பதிவுசெய்ய மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுமாறு மஹல்லா ஜமாஅத்துகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 08 - அரசின் சலுகைகளை பெறுவதில் விழிப்புணர்வு:
மத்திய மாநில அரசுகள் சிறுபான்மை சமுதாய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக ஏழை எளிய மாணவ மாணவியருக்கான கல்வி உதவித் தொகை திருமண உதவி தொகை உள்ளிட்ட அரசு வழங்குகின்ற அனைத்து உதவிகளும் நம் மக்களை முழுமையாக சென்றடைய மஹல்லாக்கள் தோறும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்வதோடு அத்தகைய உதவிகள் பற்றி பள்ளிவாசல்களில் அறிவிப்பு செய்து விழிப்பு ஏற்படுத்தவும் அனைத்து மஹல்லா ஜமாஅத்துக்களையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி:
முஸ்லிம் லீக் வலைதளம் |