இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மாநாடு 11.12.2010 அன்று நடைபெற்றது. இம்மாநாட்டில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையிலான நல்லரசுக்கு என்றும் துணை நிற்போம்!
டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தி.மு.க அரசு தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அடிப்படை வசதிகளை பெருக்கவும் பாடுபட்டு வருகிறது.
உயிர்காக்கும் உயர் சிகிட்சைக்கான கலைஞர் காப்பீடு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், அவசர ஊர்தி 108 சேவை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் இந்தியாவிற்கே முன்மாதிரியாக அமைந்துள்ளன.
இந்த அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டுமென இம்மாநாடு வேண்டுவதோடு இந்த நல்லரசு மீண்டும் தொடர பாடுபடுவது என இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இந்த மாநில மாநாடு உறுதி ஏற்கிறது.
தீர்மானம் 02 - முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு உயர்த்தி தர வேண்டுதல்:
கல்வி வேலைவாய்ப்பு மட்டுமின்றி பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு தேவை என்பது பல்லாண்டு கால கோரிக்கையாக இருந்து வந்தது.
தமிழ்நாட்டில் 1971-ல் தி.மு.க அரசில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 49 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு மீண்டும் தி.மு.க. ஆட்சியில் 69 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பிற்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்கள் இடம் பெற்றனர். பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத ஒதுக்கீட்டில் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்காக உள் ஒதுக்கீடு செய்யப்பட்டதுபோக, மீதமுள்ள 30 சதவீதத்தில் 3.5 சதவீதம் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கி 15.09.2007 ல் முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அவசர சட்டம் பிறப்பித்தார். அதற்கு நாங்கள் என்றைக்கும் நன்றி பாராட்ட கடமைப் பட்டுள்ளோம்.
முஸ்லிம் சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் இந்த இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்திதர முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 03 - சமச்சீர் கல்வியில் உர்து மொழிக்கு உரிய பாதுகாப்பு:
சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டுள்ளதை அனைவரும் வரவேற்கின்றனர். உர்து மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள மக்கள் தமிழை பாடமாக படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.
அதே சமயம் தங்களின் தாய் மொழியான உர்துவை கட்டாயமாகப் பயிலவும் தேர்வு எழுதவும் அரசு வழிகாட்ட வேண்டும் என கோரி ஓமியத் மற்றும் உர்து ஆசிரியர் நிறுவனங்கள் அரசுக்கு திட்டவரைவுகளும் சமர்ப்பித்துள்ளன.
எனவே உர்துவை தாய்மொழியாக கொண்ட தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று அதற்கு ஆவன செய்யுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 04 - சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதி:
தமிழ்நாட்டில் 1991 முதல் சிறுபான்மையினர் நடத்தும் சுயநிதி தொடக்கப்பள்ளிகள் 56; நடுநிலைப் பள்ளிகள் 84; உயர் நிலைப் பள்ளிகள் 208; மேல்நிலைப் பள்ளிகள் 216; ஆக 567 பள்ளிகள் உள்ளன.
இவற்றில் 2500 ஆசிரியர்களும் 1 லட்சம் மாணவர்களும் கல்வி பயில்கின்றனர். இப் பள்ளிகளுக்கு அரசு ஊதியம் வழங்கப்படுவதில்லை.
இந்த ஊதியம் ரூபாய் 200 கோடியை தாண்டும் என காரணம் காட்டி கடந்த காலங்களில் மறுக்கப்பட்டது. ஆனால் இந்த தொகை ரூபாய் 70 கோடி மட்டும்தான் என தெரிய வருகிறது.
எனவே சுயநிதி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசு ஊதியம் வழங்க தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 05 - நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டுதல்:
நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா கமிஷன் அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்று சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
ரங்கனாத் மிஸ்ரா பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்றுவதற்கு தனது பொதுக்குழு, செயற்குழுக்களிலும், தேர்தல் அறிக்கையிலும் கோரிக்கை எழுப்பி, இந்திய முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ஆதரவளித்து வரும் தி.மு.கழகத்திற்கும், அதன் தனிப்பெரும் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் இந்த மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 06 - புனித ஹஜ் பயணம்:
தமிழகத்தில் இருந்து எந்த வருடமும் இல்லாத அளவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தந்த தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இம்மாநாடு மிகுந்த நன்றியை தெரிவிக்கிறது.
வருங்காலங்களிலும் ஹஜ் புனித பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்த்துவதற்கு தமிழக முதல்வர் அவர்கள் தொடர்ந்து துணை நிற்க வேண்டுமெனவும், அதோடு, புனித ஹஜ் பயணம் சென்னையிலிருந்து செல்வது போல் மதுரை, திருச்சியிலிருந்தும் செல்வதற்கான போக்குவரத்து மற்றும் தங்கும் இடவசதிகளை உருவாக்கித் தரவும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 07 - முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்திற்கு மான்யம் உயர்த்தி தர வேண்டுதல்:
தமிழக அரசின் அரசாணை 14/2007 -ன் படி மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் “முஸ்லிம் மகளிர் உதவி சங்கம்” அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கு இம்மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
அதிகபட்சம் ரூபாய் 10 லட்சம் வரை திரட்டப்படும் நிதிக்கு அதே அளவு நிதி அரசு மான்யமாக வழங்குகிறது. மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம் பெண்களால் இந்த நிதியை திரட்ட முடியவில்லை.
எனவே முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்திற்கு மூன்று மடங்கு 25 சதவீதம் சங்கநிதி 75 சதவீதம் அரசு மான்யம் என்ற அளவில் உயர்த்தி வழங்கவும்,
நிர்வாகச் செலவினங்களுக்கு வருடம் ரூபாய் 1 லட்சம் மான்யம் வழங்கவும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 08 - அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழக கிளை தமிழகத்தில் அமைக்கப்பட வேண்டுதல்:
உலகப் புகழ் பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளைகள் மேற்கு வங்கம், கேரள மாநிலங்களில் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பீகார் மாநிலத்தில் இக்கிளை அமைப்பதற்கு அம்மாநில அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் இக்கிளையை அமைப்பதற்கும் அதற்கு தேவைப்படும் நிலத்தினை வழங்குவதற்கும் ஆவன செய்யுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 09 - காயிதெ மில்லத் மணிமண்டபத்தில் நூலகம்:
அண்மையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டப்படும் மக்கள் குறை தீர்க்கும் அரங்கிற்கு கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் பெயர் சூட்டப்படும் என அறிவித்த முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இம்மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ்தான் வரவேண்டும் என 1949 -ம் ஆண்டிலேயே இந்திய அரசியல் நிர்ணய சபையில் வாதமிட்ட காயிதெ மில்லத் அவர்களுக்கு, 2001 -ல் அடிக்கல் நாட்டி மணி மண்டபம் அமைத்துதந்தவரும் பெருமைக்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள்தான்.
அந்த மணி மண்டபத்தில் ஒரு நூலகம் அமைத்து மக்கள் பயன்படுத்தவும், அதை நிர்வகிக்கவும், “முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை”க்கு அனுமதி வழங்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 10 - முஸ்லிம் அறிஞர்களின் படைப்பு இலக்கியங்களை நாட்டுடைமையாக்க வேண்டுதல்:
தமிழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரும்பணி புரிந்து, படைப்பிலக்கியங்களை உருவாக்கியுள்ள முஸ்லிம் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆன்மீக அறிஞர்கள் ஆகியோரின் படைப்புகளையெல்லாம் தொகுப்பதற்கும் அவற்றில் சிறந்தோங்கி நிற்கும் அறிஞர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவதற்கும் முத்தமிழ் அறிஞர் தமிழக முதல்வர் அவர்களிடம் இம்மாநாடு கோரிக்கை வைக்கிறது.
தீர்மானம் 11 - பள்ளிவாசல்களுக்கான அனுமதி:
தமிழகத்தில் புதிய புதிய குடியேற்றங்கள் உருவாகி வரும் இக்கால கட்டத்தில் முஸ்லிம்கள் நிலம் வாங்கி பள்ளிவாசல் கட்டவும், பழம் பெரும் பள்ளிவாசல்களை புதுப்பிக்கவும் முயற்சிக்கின்ற போது அதற்காக மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறுவதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன.
எனவே இவைகளுக்கான அனுமதியை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்களே வழங்கவும், பழைய பள்ளிகளை புதுப்பித்துகட்ட உடனடி அனுமதி கிடைக்க ஆவன செய்யுமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 12 - வெளிநாடு வாழ் இந்தியர் நலன்:
தமிழ்நாட்டிலிருந்து ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்களின் நலனுக்காவும், வெளிநாடுகளில் பணிபுரிகின்ற போது அவர்களுக்கு அந்நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும். மத்தியிலும் கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் இருப்பது போல் வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்காக தனித்துறையை தமிழ்நாட்டில் ஏற்படுத்த தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 13 - தாம்பரம் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம்:
தாம்பரம் மேம்பாலம் சாலை விரிவாக்கம் என்ற பேரால் அனைத்து சிறுகடைகளையும் அப்புறப்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சிறுகடை வியாபாரிகளுக்கு நலவாரியம் அமைத்து பேருதவி புரிந்த மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் இதில் தலையிட்டு இவர்களுக்கு மாற்று இடம் வழங்கி சாலையோர, சிறுகடை வியாபாரிகள் வாழ்வில் ஒளியேற்ற இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 14 - ஆயுள் சிறைவாசிகள் விடுதலை:
தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் சிறைவாசிகளாக உள்ளவர்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
ஆயுள் சிறைவாசிகள் விடுதலை குறித்து பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இம்மாநாட்டில் தனிப்பட்ட முறையில் தமிழக முதல்வரிடம் மேடையிலேயே உருக்கத்துடன் கோரிக்கை வைத்தார்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்து உதவுமாறும், அவர்களால் இனி வருங்காலங்களில் எவ்வித இடரும் ஏற்படாது என்பதற்கு தான் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், தமிழக முதல்வர் இக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்றும் அப்போது அவர் முதல்வரிடம் கேட்டுக் கொண்டார்.
நன்றி:
முஸ்லிம் லீக் வலைதளம் |