துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.12.2010) புனித ஜார்ஜ் கோட்டையில், சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி / தொழில் நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு 2010-11ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகைகளை வழங்கி துவக்கி வைத்தார்.
நடப்பு 2010-11 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 643 மாணவ, மாணவியர்கள் பயன் பெறும் வகையில், பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூபாய் 19.02 கோடியும், 30 ஆயிரத்து 79 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி மேற்படிப்பு
உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூபாய் 8.66 கோடியும், 1809 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூபாய் 4.73 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மொத்தம் ரூபாய் 32.41 கோடி கல்வி உதவித்தொகையாக 2 இலட்சத்து 3 ஆயிரத்து 531 சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு பயனடையவுள்ளார்கள். இது கடந்த ஆண்டை விட ரூபாய் 5.91 கோடி கூடுதல் ஆகும்.
சிறுபான்மையின மக்களை கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்படுத்தவும், சிறுபான்மையின மக்களுக்கான நலத்திட்டங்களை செம்மையாக நிறைவேற்றிடவும், தமிழக முதலமைச்சர் 2007-08 ஆம் ஆண்டு முதல் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் என்ற அமைப்பை தனியே இயங்க உத்தரவிட்டுள்ளார்.
இத்துறையின் கீழ் மத்திய அரசின் நிதியுதவியுடன் பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைகள் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு கடந்த 2007-08 ஆம் ஆண்டிலிருந்து தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
ஓன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பு பயிலுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 1000/- முதல் ரூபாய் 5000/- வரையிலும், விடுதியில் தங்கி பயில்பவராக இருப்பின் அதிகபட்சமாக ரூபாய் 10,000/- வரையிலும், 11 ஆம் வகுப்பு முதல்
ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், இளங்கலை-முதுகலை பட்டபடிப்பு வரை, ஆசிரியர் பயிற்சிகள் உட்பட) பள்ளி மேற்படிப்பு பயிலுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 12,350/- வரை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையாகவும், நான்காண்டு மற்றும் அதற்கு மேல் தொழிற் கல்வி-தொழில்நுட்ப கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 30,000/- வரை தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2007-08 முதல் 2009-10 ஆம் ஆண்டு வரை பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ் ரூபாய் 21.96 கோடியும், பள்ளி மேற்படிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூபாய் 14.50 கோடியும் மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூபாய் 13.16 கோடியும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு, இதன் மூலம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 27 சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயலாளர் து.நா.இராமநாதன், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் அருட்தந்தை சேவியர் அருள்ராஜ், சிறுபான்மையினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் ஆணையர்
(பொ) பெ.மு.பஷீர் அஹமது, மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நலத்துறையின் ஆணையர் பா.அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்:
செய்தி மக்கள் தொடர்புத்துறை, தமிழ் நாடு அரசு.
|