குமரி மாவட்டத்தில் கன மழையால் பள்ளியாடி அருகே தண்டவாளத்தில் கடந்த 9ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த 4 நாட்களாக சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்தன. ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் ரயில் பாதையில் மண் அகற்றும் பணி இரவு பகலாக நடந்தது. பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிஷன் பார்வையிட்டார்.
சீரமைப்பு பணிகளை வேகமாக முடிக்க உத்தரவிட்ட தீபக் கிஷன், திங்கட்கிழமை முதல் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, நேற்று அதிகாலை மண் சரிவு அகற்றப்பட்டதால், சோதனை ஓட்டமாக இன்ஜின் இயக்கப்பட்டது. பின்னர், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் (சென்னை - திருவனந்தபுரம்) இயக்க முடிவு செய்தனர். காலை 9 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நேற்று 1 மணி நேரம் தாமதமாக காலை 10.10 மணிக்கு வந்தது. அரை மணி நேரத்துக்கு பின்னர் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றது. பள்ளியாடி அருகே தண்டவாளத்தை கடக்கும்போது குறைந்த வேகத்தில் கடக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, ரயில் 10 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டது. பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மேலும் சில நாட்களுக்கும் - அம்மார்க்கத்தில் ரயில்கள் மெதுவாகவே செல்லும்.
இதுபற்றி திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் ராஜீவ்தத் சர்மா கூறுகையில், மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் முதல்கட்ட பணிகள் முடிவடைந்து ரயில் இயக்கம் தொடங்கி இருக்கிறது. மண் சரிவை நிரந்தரமாக தடுக்கும் வகையில் சர்வே எடுக்கப்படுகிறது. அதன்படி, சுற்றுசுவர்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு, ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
தகவல்:
தினகரன் |