தமிழகத்தில் பெட்ரோல் விலையில் விற்பனை வரி குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கருணாநிதி இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவிதிருப்பதாது:-
உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவதால், எண்ணெய் நிறுவனங்கள் அதற்கேற்ப பெட்ரோலின் விலையினை உயர்த்தி
அறிவிக்கின்றன. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை மனதிலே கொண்டு தமிழக அரசு தன்னால் இயன்ற அளவிற்கு அவ்வப்போது அதற்குரிய விற்பனை வரியினை குறைத்து அறிவிப்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள். உதாரணமாக 2006ஆம் ஆண்டில் மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தியபோது - தமிழகத்திலே டீசலின் மீதான விற்பனை வரியை 25 சதவிகிதத்திலிருந்து 23.43 சதவிகிதமாகக் குறைத்து அறிவித்தோம். அதுபோலவே, 2008ஆம் ஆண்டு மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போது தமிழக அரசு 23.43 சதவிகிதத்திலிருந்து 21.43 சதவிகிதமாக தனது விற்பனை வரியைக் குறைத்துக் கொண்டது.
பெட்ரோலிய பொருள்களின் விலையை மத்திய அரசு உயர்த்தும் போது, மாநில அரசுக்கான நிர்வாகச் செலவும் அதிகமாகிறது. மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உயர்த்துவதால், நடுத்தர மக்கள் குறிப்பாக இரு சக்கர வாகனங்களைப்
பயன்படுத்துவோர் பெரிதும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு பெட்ரோல் மூலம் தனக்குக் கிடைக்கக் கூடிய விற்பனை வரியை ஓரளவுக்கு குறைத்துக் கொள்ள வேண்டுமென்பதை மனதிலே கொண்டு - தற்போது பெட்ரோல் மீது தமிழக அரசு விதித்துள்ள விற்பனை வரி 30 சதவிகிதத்திலிருந்து மூன்று சதவிகிதம் குறைத்து 27 சதவிகிதம் மட்டுமே வசூலிப்பதென்று முடிவு செய்துள்ளது. இதனால் ஆண்டு ஒன்றுக்கு தமிழக அரசுக்கு 210 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும். பெட்ரோலைப் பயன்படுத்து வோருக்கு லிட்டர் ஒன்றுக்கு இவ்வாறு விற்பனை வரியைக் குறைப்பதின் காரணமாக ரூ. 1.38 காசு குறையும்.
இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும். இவ்வாறு விற்பனை வரி குறைக்கப்பட்ட பின்பு தமிழகத்தில் உள்ள 27 சதவிகிதம் பெட்ரோல் மீதான விற்பனை வரி என்பது தென் மாநிலங்களிலேயே மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தகவல்:
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம்,
சென்னை. |