தூத்துக்குடி மாவட்டத்தில் 433 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது என நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் மகேஸ்வரன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து கட்சியினர் மற்றும் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். எஸ்பி செந்தில்வேலன், டிஆர்ஓ துரை.ரவிச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுக சார்பில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கணேசன், அதிமுக சார்பில் மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன், மாவட்ட பஞ்சாயத் தலைவர் சின்னதுரை, காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் ஜஸ்டின், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் அர்சுணன், தேமுதிக மாவட்ட செயலாளர் சண்முகராஜா, பாமக சார்பில் மாரிச்செல்வம், பாஜ சார்பில் கனகராஜ் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கலெக்டர் மகேஸ்வரன், தேர்தல் நடத்தை விதிமுறைகள், பிரசார முறைகள் குறித்து விளக்கினார்.
மேலும் அவரிடம் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த கலெக்டர், ‘வாக்காளர்களுக்கு கட்சியினர் பணம் கொடுப்பதை தடுக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இது தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 433 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக 0461 2340099 மாவட்ட தேர்தல் அலுவலக எண்ணுக்கோ அல்லது 1965 என்ற டோல் ப்ரி எண்ணுக்கோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்’ என்றார்.
கூட்டத்தில் பேசிய எஸ்பி செந்தில்வேலன், ‘தேர்தலை முன் னிட்டு பாதுகாப்பிற்காக 5 கம்பெனி துணை ராணுவம் வரவழைக்கப்படுகிறது. இவர்கள் அடுத்த வாரம் வரும் வாய்ப்பு உள்ளது’ என்றார்.
கூட்டத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள், அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
தகவல்:
தினகரன் |