சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தால் தயாரிக்கப்பட்டு வரும் “புற்றுக்கு வைப்போம் முற்று” என்ற தலைப்பிலான புற்றுநோய் குறித்த குறும்படத்தை (documentary) இம்மாதம் 13ஆம் தேதியன்று வெளியிடுவதென, இக்ராஃவில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் பின்வருமாறு:-
சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், புற்றுநோய் மருத்துவ நிபுணர்களைக் கொண்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துவது குறித்தும், அவ்வமைப்பால் தயாரிக்கப்பட்டு வரும் “புற்றுக்கு வைப்போம் முற்று” என்ற தலைப்பிலான புற்றுநோய் குறித்த குறும்படத்தை (documentary) வெளியிடுவது குறித்தும் ஆலோசிப்பதற்காக, 03.03.2011 அன்று (நேற்று) இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க கூட்டரங்கில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஹாஜி எஸ்.ஐ.புகாரீ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார்.
13.03.2011 அன்று காலை 10.00 மணிக்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் புற்றுநோய் குறித்த மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துவதென்றும், சென்னை கேன்சர் கேர் சென்டரின் நிறுவனர் தலைவர் டாக்டர் அலெக்ஸ் எஸ்.ப்ரசாத், சென்னை ஹிபா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் சுலைஹா, குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் காயல் டாகடர் கிஸார் ஆகியோருடன், நகர பொதுமக்களைக் கலந்துரையாடச் செய்து, புற்றுநோய் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறச் செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.
அத்துடன், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் “புற்றுக்கு வைப்போம் முற்று” என்ற தலைப்பிலான குறும்படத்தின் குறுந்தகடை இக்கருத்தரங்கில் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், நகர மக்களிடம் பொதுவாகக் காணப்படும் குறைபாடான மன உளைச்சலைக் களைந்திடும் பொருட்டு, “மனமே ஒன்றுபடு!” என்ற தலைப்பில் அன்று மாலையில், தூத்துக்குடி ரெங்கசாமி நர்ஸிங் ஹோம் மருத்துவமனையின் மனோதத்துவ நிபுணர் டாக்டர் விஜயரங்கன் நடத்தும் கேள்வி-பதில் நிகழ்ச்சியை நடத்திடவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கருத்தரங்க ஏற்பாடுகள் குறித்த பொறுப்புகள், கூட்டத்தில் கலந்துகொண்டோரிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
|