வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கப்போவதாக தேர்தல் கமிஷனால் அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுக்க தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியிலுள்ள நியாயவிலைக் கடையொன்றில் நிறுவப்பட்டிருந்த அரசு விளம்பரம் அப்புறப்படுத்தப் படாததால் அக்கடையின் பட்டியல் எழுத்தர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரனால் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் 03.03.2011 அன்று அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பின்னா; அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மாவட்டம் முழுமைக்கும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் நடத்தை விதிகளைக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுத்த நிலையில், தூத்துக்குடி மாநகரம், சுப்பையா முதலியார்புரத்தில் உள்ள அமுதம் நியாயவிலைக் கடையில் உள்ள அரசு விளம்பரத்தினை அப்புறப்படுத்தாமல் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளது இன்று (05.03.2011) கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேற்கண்ட நியாயவிலைக்கடையின் பட்டியல் எழுத்தர் திரு.ஆர்.காந்தி என்பவர் இன்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். எனவே. மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் கண்டிப்புடன் தேர்தல் நடத்தை விதிகளைக் கடைப்பிடித்திட வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என மாவட்ட தேர்தல் அலுவலராகிய மாவட்ட ஆட்சியர் முனைவர் சி.நா.மகேஷ்வரன் அவர்கள் இன்று தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |