பயணிகளின் வசதிக்காக செந்தூர், முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்பட பல்வேறு ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கப்படும் என்று, தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வேயின் மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பயணிகளின் வசதிக்காக நெரிசலை சமாளிக்கும் வகையில் செந்தூர், முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்பட சில ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை நிரந்தரமாக இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி சென்னை எழும்பூர்-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரசில், 2ம் வகுப்பு படுக்கை வசதி உள்ள ஒரு பெட்டியும், 3ம் வகுப்பு ஏ.சி. வசதியுள்ள ஒரு பெட்டியும் வருகிற 12ம் தேதி முதல் இணைக்கப்படும்.
சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2ம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள 2 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. திருச்செந்தூரில் இருந்து வருகிற 10ம் தேதி புறப்படும் ரெயிலில் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.
நெல்லையில் இருந்து பிலாஸ்பூர் வரை இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2ம் வகுப்பு தூங்கும் வசதி உள்ள 2 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. நெல்லையில் இருந்து வருகிற 13ம் தேதி புறப்படும் ரெயிலில் இது அறிமுகப்படுத்தப்படுகிறது.
சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தூங்கும் வசதி பெட்டி 1 மட்டும் இணைக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து 10ம் தேதி புறப்படும் ரெயிலில் இந்த பெட்டி இணைக்கப்படும். சென்னை எழும்பூர் - ராமேசுவரம் எக்ஸ்பிரசில் 2ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி ஒன்றும், 3ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்றும் சேர்க்கப்படும்.
ராமேசுவரத்தில் இருந்து வருகிற 14ம் தேதி முதல் இது செயல்படுத்தப்படும். அதேபோல சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2ம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள ஒரு பெட்டியும், 3ம் வகுப்பு ஏ.சி.ஒரு பெட்டியும் இணைக்கப்படுகின்றன. சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 15ம் தேதி புறப்படும் ரெயிலில் இந்த புதிய பெட்டிகள் இணைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தகவல்:
www.tutyonline.net |