பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 2ம் தேதி தொடங்கியது. 25ம் தேதியுடன் முடிகிறது. தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும்.
கடந்த ஆண்டு வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த அடுத்த நாளே பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு தேர்தல் நடப்பதால் பிளஸ் 2 விடைத்தாளை முன்னதாக திருத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து, பிளஸ் 2 தேர்வுகள் இறுதிக் கட்டத்தை நெருங்கும்போதே தமிழ், ஆங்கில பாடங்களுக்கான விடைத்தாள்களை திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கு தலா 2 தாள்கள் உள்ளன. மேலும் இந்த இரண்டு மொழிப் பாடங்களைத்தான் அனைத்து மாணவர்களும் எழுத வேண்டும். இதனால் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவியரின் விடைத்தாள்களை திருத்த காலஅவகாசம் தேவைப்படும். இதனால் மேற்கண்ட விடைத்தாள்கள் மட்டும் முன்னதாகவே திருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் பாடங்களான இயற்பியல், விலங்கியல், தாவரவியல், உயிரியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள்களுக்கு டம்மி எண் போடப்பட்டு திருத்தப்படும். மற்ற பாடங்களுக்கு டம்மி எண்கள் கிடையாது. டம்மி எண்கள் போடுவதற்கு ஒரு வாரம் ஆகும். அதற்கு பிறகுதான் அந்த பாடங்களின் விடைத்தாள் திருத்தத் தொடங்குவார்கள்.
இதனால் தமிழ், ஆங்கிலம் பாடங்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 5ம் தேதி முதல் திருத்தத் தொடங்குவார்கள். ஏப்ரல் 20ம் தேதி திருத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்:
தினகரன்
|