ரியாத் காஹிர் பைத்துல்மால், தம்மாம் காயல் நற்பணி மன்றம், ஜித்தா காயல் நற்பணி மன்றம் ஆகிய சஊதி அரபிய்ய காயல் நல மன்றங்களின் கூட்டு முயற்சியில், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது காயல்பட்டினத்தில் புற்றுநோய் பாதிப்பு குறித்த கணக்கெடுப்புப் பணி (கேன்சர் சர்வே).
இக்கணக்கெடுப்புப் பணியில் தன்னார்வத்துடன் தமது பெயர்களைப் பதிவு செய்து, நகரின் அனைத்து தெருக்களிலும் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் காயல்பட்டினம் நகரின் அனைத்து சமுதாயங்களைச் சார்ந்த பெண்கள் ஈடுபட்டு, சேகரிக்கப்பட்ட படிவங்கள் அனைத்தையும் இக்ராஃவில் முறைப்படி ஒப்படைத்துள்ளனர்.
அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, 06.03.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவரும், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளருமான அ.வஹீதா தலைமையில் இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்ராஃ செயலர் (பொறுப்பு) கே.எம்.டி.சுலைமான், ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி சோனா ஷாஹுல் ஹமீத், இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் எஸ்.ஐ.புகாரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
பின்னர், கணக்கெடுப்பில் ஈடுபட்ட மகளிர் தன்னார்வலர்கள், தகவல் சேகரிப்பின்போது தமக்கேற்பட்ட நல்ல மற்றும் கசப்பான அனுபவங்களை ஏற்பாட்டுக் குழுவினரிடம் தெரிவித்ததுடன், இனி வருங்காலங்களில் இதுபோன்ற கணக்கெடுப்புப் பணிகள் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினர். அத்துடன், கணக்கெடுப்பின்போது பொதுமக்கள் சிலர் எழுப்பிய சந்தேகங்களுக்கு அவர்கள் ஏற்பாட்டுக் குழுவினரிடம் விளக்கம் கேட்டனர்.
புற்றுநோய் தடுப்பு செயல்திட்டம்:
பல்வேறு சிரமங்களுக்கிடையில் குறித்த காலத்தில் கணக்கெடுப்புப் பணியை செய்து முடித்துள்ள தன்னார்வலர்களைப் பாராட்டிப் பேசிய இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ்,
புற்றுநோயால் தற்சமயம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக இக்கணக்கெடுப்புப் பணி நடத்தப்படவில்லை... அவர்கள் தரும் இந்த அரிய தகவல்களின் அடிப்படையில் எந்தெந்த வயதில், தரத்தில் உள்ளவர்களுக்கு எந்தெந்த விதமான புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பனவற்றை, அதுகுறித்த மருத்துவ நிபுணர்கள் குழு ஆய்ந்தறிந்து, தடுப்பு செயல்திட்டங்களை வகுக்கும் என்றார்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு:
கணக்கெடுப்பிற்காக பெண்கள் சென்ற இடங்களிலெல்லாம் போதிய ஒத்துழைப்புகள் நிறைவாகக் கிடைத்துள்ளபோதிலும், ஒரு சில இடங்களில் பொதுமக்கள் சிலர் அறியாமையால் விரும்பத்தகாத விதங்களில் நடந்துகொள்வது வழமைதான் என்றும், அந்த சூழ்நிலையில் நாம் இருந்தால் எவ்வாறு நடந்துகொள்வோம் என்பதைச் சிந்தித்துக் கொள்ளுமாறு தெரிவித்த அவர், தன்னார்வலர்கள் இதனால் மனச்சோர்வடைந்து விடக்கூடாது என்பதற்காகவே அதுகுறித்து முற்கூட்டியே அவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டது என்றார்.
ரகசிய பாதுகாப்பு:
இக்கணக்கெடுப்பின்போது, தன்னார்வலர்களிடம் தகவல்கள் தெரிவிக்க விரும்பாத பலர் கூட பொதுமக்கள் நலன் கருதி, இக்ராஃவில் நேரடியாக தமது கருத்துப் படிவங்களைத் தந்துள்ளதாக தெரிவித்த அவர், பெறப்பட்ட தகவல்கள் எதுவும் இக்ராஃ நிர்வாகத்தில் ஒரேயொருவரைத் தவிர வேறெவருக்கும் தெரியாது எனவும், அனைத்து தகவல்களும் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தன்னார்வலர்கள் வரவேற்பு:
இனி வருங்காலங்களில் இக்ராஃ நடத்தும் பொதுநல செயல்திட்டங்களுக்கு, தேவைப்படும்போது தன்னார்வலர்கள் தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு அப்போது தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட மகளிர் தமது பெயர்களைப் பதிவு செய்துகொண்டனர்.
தன்னார்வலர் குழுவில் இனியும் இணைய விரும்பும் ஆண் - பெண் காயலர்கள் தமது பெயர் மற்றும் தொடர்பு விபரங்களை, +91 4639 285650 என்ற இக்ராஃ அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் அப்போது கேட்டுக் கொண்டார்.
சான்றிதழ் வழங்கல்:
பின்னர், புற்றுநோய் பாதிப்பு குறித்த தகவல் சேகரிப்புப் பணியில் (கேன்சர் சர்வே) ஈடுபட்ட அனைத்து மகளிர் தன்னார்வலர்களுக்கும், கூட்டத் தலைவர் அ.வஹீதா சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் அமைப்பு குறித்து அவர்களிடம் அறிமுகப்படுத்திப் பேசிய அவர், பெண்கள் தமது மனித வளத்தை வீணாக்கிவிடாமல் இதுபோன்ற பொதுநல காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் சமுதாயத்திற்கு ஏதோ ஒரு வகையில் சிறந்த பங்களிப்பாற்றலாம் என்று அவர் தனதுரையில் தெரிவித்தார்.
பஹ்ரைன் காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதியும், கேன்சர் சர்வே ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான ஆசிரியர் எஸ்.எம்.அஹ்மத் சுலைமான் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. |