காயல்பட்டினம் நகர்மன்றத்தின் காசோலையைப் பயன்படுத்தி சுமார் 14 லட்சம் ரூபாய் தொகையை மோசடியாகப் பெற்றிட மேற்கொள்ளப்பட்ட முயற்சி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் கஸ்ஸாலி மரைக்காரின் தம்பி செய்யித் முஹம்மத் குஜராத்தில் கைது செய்யப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, பின்னர் திருச்செந்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, நகர்மன்ற துணைத்தலைவர் பொறுப்பிலிருந்தும், நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகிக் கொள்வதாக நகர்மன்றத் தலைவருக்கு கஸ்ஸாலி மரைக்கார் கடிதம் அனுப்பியிருந்தார். பின்னர், சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சரணடைந்த அவர், திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, பின்னர் திருச்செந்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், காவல்துறை விசாரணைக்காக ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ள அவரிடம் நேற்றும், இன்றும் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும்,
இவ்விவகாரத்தில் தனது தம்பிக்கு எவ்வித தொடர்பும் இல்லையென்றும், அனைத்திற்கும் தானே பொறுப்பு என்றும் கஸ்ஸாலி மரைக்கார் காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |