(தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தல் பணி முடிவடையும் நாள் வரையிலான) தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளால் பின்பற்றப்பட வேண்டிய நன்னடத்தை நெறிமுறைகள் (Model Code of Conduct) பின்வருமாறு:-
(01) தேர்தல் பிரச்சாரத்தின்போது எந்த ஓர் அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பல்வேறு சாதியையோ, மதத்தையோ அல்லது பல்வேறு மொழி பேசுபவர்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டும் வகையிலோ அல்லது வேறுபாட்டை, பகைமையை வளர்க்கும் அல்லது தூண்டும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
மற்ற அரசியல் கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யும்போது கட்சியின் கொள்கை குறித்தோ அல்லது கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தோ இருக்க வேண்டுமேயன்றி தலைவர்களின் பொதுவாழ்க்கை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருத்தல் கூடாது.
(02) வழிபாட்டுத் தலங்களான கோயில், மசூதி மற்றும் கிறித்துவ தேவாலயங்களில் தேர்தல் குறித்த பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. வாக்குகள் சேகரிப்பதற்கு மதம் ஒரு தடையல்ல. எந்த மதத்தைச் சேர்ந்தவர்களிடத்திலும் வாக்கு சேகரிக்கலாம்.
(03) வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் வேட்பாளர் அதிகபட்சமாக 3 கார்கள்தான் உபயோகப்படுத்தலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளரையும் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
(04) வேட்ப மனு பரிசீலனையின்போது வேட்பாளர், அவரது தேர்தல் முகவர், வேட்பாளரது பெயரை முன்மொழிந்தவர் மற்றும் ஒரு நபர் (இவர் வழக்கறிஞராகவும் இருக்கலாம்) ஆக மொத்தம் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
(05) தேர்தல் பணிக்காக வேட்பாளர்கள் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு பெறப்பட்ட அனுமதியின் அசல் நகலை வாகனத்தின் முன் கண்ணாடியில் பார்வையில் படும்படி ஒட்ட வேண்டும். அனுமதியில் வாகன எண் மற்றும் எந்த வேட்பாளருக்கு வழங்கப்பட்டதோ அந்த வேட்பாளரின் பெயர் குறிக்க வேண்டும். ஒரு வேட்பாளருக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதியை வேறு வேட்பாளர் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 171 Hஇன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
(06) தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெறாமல் வாகனங்களைப் பயன்படுத்துவது விதிமுறைகளுக்குப் புறம்பாக வேட்பாளர் தேர்தல் பணி மேற்கொண்டதாக கருதப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
(07) கல்வி நிலையங்களையோ அல்லது கல்வி நிலையங்களிலுள்ள விளையாட்டு மைதானத்தையோ (அரசு, அரசு உதவி பெறும் அல்லது தனியார் கல்வி நிறுவனங்கள்) அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது.
(08) தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனத்தில் வெளிப்புற மாற்றங்களோ அல்லது ஒலிபெருக்கி பொருத்துவதாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அலுவலரிடமிருந்து அனுமதி பெற்ற பிறகே மேற்கொள்ள வேண்டும்.
(09) வேட்பாளர்கள் பொது கட்டிடங்களில் தேர்தல் குறித்த சுவரொட்டி ஒட்டுவதோ, விளம்பரங்கள் எழுதுவதோ கூடாது.
(10) தனியார் கட்டிடங்களில் தேர்தல் விளம்பரம் எழுதுவதற்கு கட்டிட உரிமையாளரிடம் எழுத்து மூலமாக அனுமதி பெற வேண்டும். அவ்வாறு பெற்ற அனுமதியின் புகைப்பட நகலை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
(11) சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் ப்ளாஸ்டிக் அல்லது பாலிதீன் கொண்டு விளம்பர சுவரொட்டி மற்றும் பேனர்கள் தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(12) அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்படாமல் தேர்தல் சம்பந்தப்பட்ட துண்டு பிரசுரம், நோட்டீஸ் எதையும் அரசியல் கட்சிகள் அச்சடிக்கக் கூடாது.
(13) வேட்பாளர் சார்பாக வாக்காளருக்கு புடவை, சட்டை போன்ற உடைகளை வழங்கக்கூடாது.
(14) தேர்தல் பிரச்சாரம் முடிந்து வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திற்கு இடைப்பட்ட 48 மணி நேரத்தில் வேட்பாளர் தேர்தல் சம்பந்தப்பட்ட விவரங்களை வாக்காளர்களுக்கு திரைப்படம், வீடியோ மூலம் திரையிட்டு ஒளிபரப்பக்கூடாது.
(15) வேட்பாளர் தனது படம் அச்சடிக்கப்பட்ட டைரி, காலண்டர் மற்றும் ஸ்டிக்கர்களை வாக்காளர்களுக்கு வழங்கக்கூடாது.
(16) தேர்தல் சமயத்தில் கட்சிகள் தற்காலிக அலுவலகங்களை அமைக்கலாம். ஆனால் அவ்வலுவலகங்கள்,
(அ) தனியார் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமிக்கக் கூடாது.
(ஆ) மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அதனை ஒட்டி அமையக் கூடாது.
(இ) பள்ளிகள், மருத்துவமனைகளைச் சுற்றி அமைக்கக் கூடாது.
(ஈ) வாக்குச்சாவடி எல்லையிலிருந்து 200 மீட்டர் சுற்றளவிற்கு அமைத்தல் கூடாது.
(17) வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் வேட்பாளர் மற்றும் அவரது ஏஜெண்ட் தவிர மற்ற அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறி விடவும். ஆனால் இந்தக் கட்டுப்பாடு அரசியல் கட்சியில் தேர்தல் பணி செய்ய நியமிக்கப்பட்டு இருக்கும் பொறுப்பு அலுவலருக்கு (office bearer) பொருந்தாது.
(18) தேர்தல் சம்பந்தமாக பொதுக்கூட்டங்கள் நடத்துவதோ அல்லது ஊர்வலங்கள் போகவோ காவல்துறையிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். ஒலிபெருக்கி அமைப்பதற்கும் காவல்துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.
(19) ஒலிபெருக்கிகளை இரவு 10.00 மணிக்குப் பிறகும், அதிகாலை 06.00 மணிக்கு முன்பும் பயன்படுத்தக் கூடாது.
(20) பொதுக்கூட்டங்கள் இரவு 10.00 மணிக்குப் பிறகும், காலை 06.00 மணிக்கு முன்பும் நடத்தக் கூடாது. வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு 48 மணிக்கு முன்பு வாக்கு சேகரிப்பு முடிந்த பிறகு, பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
(21) வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லிப்பில் வாக்காளர் பெயர், வரிசை எண், பாகம் எண், வாக்குச் சாவடி எண் மற்றும் வாக்குப்பதிவு நாள் ஆகியவற்றை மட்டுமே குறிப்பிட்டிருக்க வேண்டும். வேட்பாளரின் பெயர், சின்னம், மற்றும் அவரது புகைப்படம் ஆகியவை இருத்தல் கூடாது.
(22) வாக்குச் சாவடிகளில் ஏஜெண்டுகளாக நியமிக்கப்படுபவர்கள் அந்த வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் வாக்காளராக இருத்தல் வேண்டும். வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிக்கு வெளியில் வாக்காளராக இருப்பின் முகவர்களாக நியமிக்கப்படக் கூடாது. இருப்பினும் பெண்களுக்கென பிரத்தியேகமாக இயங்கும் வாக்குச் சாவடிகளுக்கு இந்த விதி பொருந்தாது.
(23) வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்திலிருந்து 300 மீட்டர் தள்ளி கட்சிகள் பூத் அமைக்கலாம். ஒரு டேபிள், 2 நாற்காலிகள், ஒரு குடை அல்லது தார்பாலின் போன்றவை மட்டுமே அனுமதிக்கப்படும். இவற்றை அமைப்பதற்கு முன் உரிய அலுவலரிடமிருந்து எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டும்.
(24) வாக்குச் சாவடியில் தலைமை அலுவலர், பார்வையாளர் மற்றும் மைக்ரோ அப்சர்வர் (Micro Observer), பாதுகாப்பு அலுவலர் தவிர மற்றவர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது.
(25) வாக்குச் சாவடிக்கு அருகில் ஆயுதங்களுடன் போகக் கூடாது. நாடாளுமன்ற தேர்தலாக இருப்பின் பின்வருமாறு வாகனங்களை பயன்படுத்தலாம்:-
(அ) வேட்பாளருக்கு ஒரு கார் (நாடாளுமன்றத் தொகுதி முழுவதற்கும்)
(ஆ) வேட்பாளரின் முகவருக்கு ஒரு கார் (நாடாளுமன்றத் தொகுதி முழுவதற்கும்)
(இ) வேட்பாளரின் கட்சியைச் சார்ந்தவர்கள் பயன்படுத்துவதற்காக (நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு கார் மட்டும்.)
(26) வேட்பாளருக்காக அனுமதிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட வாகனத்தை வேறு நபர் பயன்படுத்தக் கூடாது.
(27) வேட்பாளரோ அல்லது அவரது கட்சியைச் சார்ந்தவர்களோ வாக்குப்பதிவு நாளன்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாக்காளர்களை வசிப்பிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கோ அல்லது வாக்குச் சாவடியிலிருந்து வசிப்பிடங்களுக்கோ வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லக் கூடாது. இவ்வாறு செய்வது க்ரிமினல் குற்றமாகும். |