தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணைத்தால் 01.03.2011 அன்று வெளியிடப்பட்டதையடுத்து அன்றைய தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டிற்கு வந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 07.03.2011 அன்று காலை 11.00 மணிக்கு, அரசுத்துறையின் அனைத்து அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சி.நா.மகேஷ்வரன் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலக அனைத்து கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் கட்சியினரால் அமைக்கப்பட்டுள்ள விளம்பரங்கள் - சுவரொட்டிகள் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் தாமாகவே முன்வந்து அகற்றிட 04.03.2011 வரை அவகாசம் வழங்கப்பட்டு, மேற்படி காலக்கெடு முடிவுற்றமையால் அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பொது இடங்களில் உள்ள அனைத்து அரசியல் விளம்பரங்களையும், சம்பந்தப்பட்ட அரசுத் துறையினர் அவர்களது செலவில் உடன் அகற்றிட கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேற்படி விளம்பரங்களை அகற்றும்போது புகைப்படம் எடுத்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட செலவின் தொகையினை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரிடம் வசூலித்திடவும், மேற்படி தொகையினை வேட்பாளரின் செலவுக்கணக்கில் சேர்த்திடவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அரசுத் துறைகளைச் சார்ந்த அனைத்து அலுவலர்களும் தேர்தல் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள தெரிவிக்கப்பட்டது. மேலும், தேர்தல் பணி என்பது தேசிய பணி என்பதால் அதை மறுக்காமலும், தேர்தல் பணியினை தவிர்த்திடும் பொருட்டு விடுப்பில் இருந்திடவும் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தக்க அறிவுரை வழங்கிட தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசின் அனைத்துத் துறை அலுவலர்கள் தேர்தல் முடியும் வரை இன்றியமையாக் காரணங்கள் தவிர தற்செயல் விடுப்பு மற்றும் அனுமதி விடுப்பு ஏதும் எடுத்திடாமல் தலைமையிடத்தில் தங்கி பணிபுரிய கேட்டுக்கொள்ளப்பட்டனர். தலைமையிடத்தை விட்டும் வெளியே செல்லும்பட்சத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் உரிய முன்னனுமதி பெற்றுச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
அரசின் அனைத்துத் துறைகளிலுமுள்ள அரசு வாகனங்களை உடனடியாக மாவட்ட தேர்தல் பிரிவில் ஒப்படைத்து, நியமனம் செய்யப்படும் அலுவலகத்தில் உடன் ஒப்படைத்திட அனைத்துத் துறை அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
தகவல்:
செய்தி மக்கள் தொடர்புத் துறை,
மாவட்ட ஆட்சியரகம், தூத்துக்குடி. |