செய்தி எண் (ID #) 5790 | | |
சனி, மார்ச் 12, 2011 |
சட்டமன்றத் தேர்தல் 2011: இ.யூ.முஸ்லிம் லீகிற்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்குமா? |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4832 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (36) <> கருத்து பதிவு செய்ய |
|
வரும் ஏப்ரல் 13ஆம் தேதியன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தம் கட்சிக்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டுமென காங்கிரஸ் பிடிவாதமாக இருந்தது.
இதனால், கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று அஞ்சப்பட்டதாகவும், எனவே மதச்சார்பற்ற இக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு தம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மூன்றிடங்களில் ஒன்றைத் தருவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான இ.அஹ்மத் தலைமையில் அக்கட்சி வாக்களித்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், அண்மையில் நாகூரில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழுவில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிப்பதெனவும், தம் கட்சியின் சார்பில் 8 தொகுதிகளைக் கேட்பதெனவும், குறைந்தபட்சம் 3 தொகுதிகளிலாவது போட்டியிடுவதெனவும், தனி சின்னத்திலேயே போட்டியிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டதாகவும்,
பொதுக்குழு தீர்மானத்தை மதியாமல், ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளில் ஒன்றை மாநில தலைமை தன்னிச்சையாக விட்டுக்கொடுத்துள்ளது பெரும் தவறு என்றும், அத்தவறுக்கு பொறுப்பேற்று மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமேனவும், அவ்வாறு விலகாவிடில் தாங்களே ஒரு தலைவரை ஏற்படுத்த வேண்டி வரும் என்றும் அக்கட்சியின் மகளிரணி மாநில அமைப்பாளரும், மறைந்த மாநில தலைவர் அ.கா.அப்துஸ்ஸமதின் மகளுமான ஃபாத்திமா முஸஃப்ஃபர் செய்தியாளர் நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மதச்சார்பற்ற கூட்டணி பிளவுற்று விடக்கூடாது என்பதற்காக தனக்குக் கூட தெரியாமல் கிடைத்த மூன்று தொகுதிகளில் ஒன்றை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விட்டுக்கொடுக்க முன்வந்தது திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதியை மிகவும் நெகிழச் செய்ததாகவும், அதற்கு பரிசாக தந்ததையும், தர வேண்டியதையும், தம்பியையும் தலைவர் தந்துள்ளார் எனவும், ஓரிரு நாட்களில் அந்த நற்செய்தி முழுமையாகத் தெரிய வரும் என்றும் தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ வலைதளம் தெரிவிக்கிறது.
தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளபடி “தந்ததை” என்பது தரப்பட்ட 3 தொகுதிகள் எனவும், “தர வேண்டியதை” என்பது கூடுதல் தொகுதிகளாக இருக்கலாம் எனவும், “தம்பியை” என்பது, தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் தலைவர் திருப்பூர் அல்தாஃபிடம் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசி, அவரது கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீகுடன் இணைய மேற்கொண்ட முயற்சி என்றும் பொருளறியப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த சரியான விளக்கம் ஓரிரு நாட்களுக்குள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. |