மார்ச் 12 (சனிக்கிழமை) அன்று சுற்றுப்புற சூழல் மாசு குறித்த பயிற்சி வகுப்பு தூத்துக்குடி நகரிலுள்ள டி.எம்.எஸ்.எஸ்.எஸ். (TMSSS) அரங்கில் நடைபெற்றது.
பயிற்சி வகுப்புகளை சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு Community Environmental Monitoring (CEM) அங்கத்தினரான நித்யானந்த் ஜெயராமன் (அதன் ஆலோசகர்), ஸ்வேதா நாராயணன், ஸ்ரீநிதி (சென்னை) மற்றும் அருள் செல்வம் (கடலூர்) ஆகியோர் நடத்தினர். முழு நாள் நடந்த இவ்வகுப்பில் தூத்துக்குடி மற்றும் கன்னியாக்குமரி மாவட்டத்திலிருந்து மைகேல் கோமஸ் (புன்னக்காயல்), புஷ்பா ராயன் (East Coast Research and Development) ஆகியோர் உட்பட சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் திரளாகக் கலந்துக்கொண்டனர். காயல்பட்டினத்தில் இருந்து ஆறு பேர் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து, காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் காரணிகளை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள CFFC குழுவின் அழைப்பின் பேரில் நேற்று காலை (மார்ச் 13) நித்யானந்த் ஜெயராமன், ஸ்வேதா நாராயணன், ஸ்ரீநிதி மற்றும் அருள் செல்வம் (கடலூர்) ஆகியோர் காயல்பட்டினத்திற்கு வருகை தந்தனர். நகரம் எதிர்நோக்கியுள்ள தொழிற்சாலை மாசு குறித்த கலந்தாலோசனை அன்று காலை 08:00 முதல் 09:30 மணி வரை நடைபெற்றது.
பின்னர் ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பில், அன்று காலை 10.00 மணிக்கு, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புற்றுநோய் குறித்த குறுந்தகுடு வெளியீடு மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியின்போது, காயல்பட்டினத்தின் வட எல்லையில் உள்ள DCW தொழிற்சாலை குறித்த (சுற்றுப்புற சூழல் மாசு உட்பட) அனைத்து தகவல்களையும் தாங்கிய இணையதளம் www.dcwmonitor.com துவக்கப்பட்டது. CEM அமைப்பின் சென்னை ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா நாராயணன் www.dcwmonitor.com இணையதளத்தைத் துவக்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து நித்யானந்த் ஜெயராமன் சுற்றுப்புறச் சூழல் மாசு குறித்து சிறுது நேரம் விளக்கிப் பேசினார்.
அந்நிகழ்ச்சியின் மருத்துவ கேள்வி-பதில் நேரத்தின்போது பொதுமக்களால் கேட்கப்பட்ட சுற்றுச்சூழல் குறித்த கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்தார். முன்னதாக அவரை பல்லாக் சுலைமான் அனைவருக்கும் அறிமுகப்படுத்திப் பேசினார்.
நித்யானந்த் ஜெயராமன் பிரபல சுற்றுப்புற சூழல் ஆய்வாளர். போபால், ஸ்டெர்லைட், சிப்காட் கடலூர் போன்ற இடங்களில் மாசுக்கு எதிராக போராடி வருபவர். புலானாய்வு எழுத்தாளருமான இவரின் கட்டுரைகளில் பல தெஹல்கா போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன.
CFFC சார்பாக நித்யானந் ஜெயராமன் மற்றும் ஸ்வேதா நாராயணுக்கு, பல்லாக் சுலைமான் மற்றும் சாளை நவாஸ் ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர்.
செய்தி திருத்தப்பட்டுள்ளது. |