சஊதி அரபிய்யா ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பில், 13.03.2011 அன்று, “புற்றுக்கு வைப்போம் முற்று!” என்ற தலைப்பிலான ஆவணப்படம் வெளியீட்டு விழாவும், புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கமும் காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடத்தப்பட்டது.
கருத்தரங்கின் இறுதியில் புற்றுநோய் பரவலுக்கெதிராக பொதுமக்களால் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை ஜித்தா காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் அப்துல் பாஸித் முன்மொழிய, பொதுமக்கள் தக்பீர் முழக்கத்துடன் அதை ஆமோதித்தனர்.
தீர்மானங்கள் பின்வருமாறு:-
(1) காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறங்களில் பொதுமக்களின் உடல் நலன், சுகாதாரக் கட்டமைப்பு, சுற்றுப்புறச் சூழல் பராமரிப்பு ஆகியவற்றை நன்முறையில் பாதுகாப்போம்.
(2) காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புக்கான மூல காரணிகளைக் கண்டறிந்து அவற்றை வேரறுப்போம்.
(3) காயல்பட்டினம் நகருக்கு அருகிலுள்ள தொழிற்சாலைகளின் மாசுகளுக்கெதிராக சட்டப் பூர்வமாகவும், மக்கள் சக்தியைத் திரட்டியும் போராடுவோம்.
(4) காயல்பட்டினத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்றளவுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.
(5) பொதுமக்கள் சமச்சீரான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்போம்.
(6) சிகரெட், புகையிலை, மது மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தால் விலக்கப்பட்ட (ஹராமாக்கப்பட்ட) அனைத்து தீய பழக்கங்களை விட்டும் எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம்.
(7) புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பூரண குணமடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
(8) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணித்துவிட்ட மக்களின் மறுமை நல்வாழ்விற்காக பிரார்த்திப்பதோடு, அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்போம்.
(9) உடநல் நலம், பொது சுகாதாரத்தை வலியுறுத்திட வலுவான அமைப்பை உருவாக்கிட முயற்சிகள் மேற்கொள்ளுமாறு ஜித்தா காயல் நற்பணி மன்றத்தை வலியுறுத்துவோம்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. |