காயல்பட்டினம் நகரில் பொதுமக்களிடையே புற்றுநோய் பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் “புற்றுக்கு வைப்போம் முற்று” என்ற தலைப்பில் குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.
முறைப்படி அக்குறுந்தடை வெளியிடும் பொருட்டு, “புற்றுக்கு வைப்போம் முற்று” குறுந்தகடு வெளியீட்டு விழா 13.03.2011 அன்று காலை 10.00 மணிக்கு காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் விழாவிற்குத் தலைமை தாங்கினார். தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர் காதிர் ஸாஹிப் ஜாஸிம் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். இலங்கை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் “புற்றுக்கு வைப்போம் முற்று” ஆவனப்படம் அசைபட உருப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.
தேனீர் இடைவேளையைத் தொடர்ந்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பில் எஸ்.ஓ.பி.ஆயிஷா உருக்கமாக உரையாற்றினார். பின்னர், “புற்றுக்கு வைப்போம் முற்று” ஆவனப்படம் குறித்து, அதை முன்னின்று தயாரித்த ஜித்தா காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ விளக்கிப் பேசினார்.
பின்னர் விழா தலைவர் குறுந்தகடை வெளியிட, சென்னை கேன்சர் கேர் சென்டரின் நிறுவனர் தலைவர் டாக்டர் அலெக்ஸ் எஸ்.ப்ரசாத், சென்னை ஹிபா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் சுலைஹா உள்ளிட்டோர் துவக்கப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
பின்னர். சஊதி அரபிய்ய காயல் நல மன்றங்களான ரியாத் காஹிர் பைத்துல்மால் தம்மாம் காயல் நற்பணி மன்றம், ஜித்தா காயல் நற்பணி மன்றம் அமைப்புகளின் ஏற்பாட்டில், இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் அண்மையில் காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று சேகரிக்கப்பட்ட புற்றுநோய் பாதிப்பு குறித்த தகவல் சேகரிப்பின் (கேன்சர் சர்வே) மூலம் பெறப்பட்டுள்ள சில முக்கிய தகவல்கள் குறித்து இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் பொதுமக்களுக்கு விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து, புற்றுநோய் காரணிகளைக் கண்டறிவதற்காக, ஜித்தா காயல் நற்பணி மன்றம் உள்ளிட்ட உலக காயல் நல மன்றங்களின் பொருளாதார அனுசரணையுடன் இயங்கி வரும் தற்காலிகக் குழுவினரான Cancer Fact Finding Committee - CFFC குறித்து, தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் விளக்கிப் பேசினார்.
பின்னர் DCW தொழிற்சாலை மூலம் வெளியாகும் மாசுக்களை கண்காணிக்கும் பொருட்டு கட்டமைக்கப் பட்டுள்ள வலைதளம் www.dcwmonitor.com துவக்கப்பட்டது. சமூக சுற்றுச் சூழல் கண்காணிப்பு அமைப்பின் சென்னை ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா நாராயன் வலைதளத்தை துவக்கி வைத்தார்.
பின்னர் மருத்துவ கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. புற்றுநோய் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு, இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட சென்னை கேன்சர் கேர் சென்டரின் நிறுவனர் தலைவர் டாக்டர் அலெக்ஸ் எஸ்.ப்ரசாத், சென்னை ஹிபா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் சுலைஹா, குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் காயல் டாக்டர் டி.முஹம்மத் கிஷார் ஆகியோர் விளக்கமளித்தனர். பி.எஸ்.அப்துல் காதிர் நெய்னா மருத்துவ கேள்வி-பதில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முன்னதாக மருத்துவர்கள் துவக்கவுரையாற்றினர்.
பின்னர், சிறப்பு விருந்தினர்களுக்கு ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், செயற்குழு உறுப்பினர்கள் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, அப்துல் பாஸித் ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீயின் தமிழ் மொழிபெயர்ப்புடனான துஆ பிரார்த்தனையுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பெண்களும், ஆண்களும் திரளாகக் கலந்துகொண்டனர். ஆண்கள் பகுதியில் காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தினரும், பெண்கள் பகுதியில் இக்ராஃவின் பெண் தன்னார்வலர்களும் ஏற்பாட்டுப் பணிகளைக் கவனித்துக் கொண்டனர்.
செய்தி திருத்தப்பட்டுள்ளது. |