சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், “மனமே ஒன்றுபடு!” என்ற தலைப்பில் மனவியல் ஆலோசனை நிகழ்ச்சி 13.03.2011 அன்று மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்றது.
காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளி ஆட்சிக்குழு தலைவர் நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.
ஜித்தா காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். எம்.ஏ.இப்றாஹீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரையைத் தொடர்ந்து, “இறைவனை நெருங்குவோம்” என்ற தலைப்பில் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ சிறப்புரையாற்றினார்.
பின்னர் உளவியல் ஆலோசனை நிகழ்ச்சி துவங்கியது. “மனித மனம்” எனும் தலைப்பில் முன்னுரை வழங்கிய தூத்துக்குடி ரெங்கசாமி நர்ஸிங் ஹோம் மனநல மருத்துவர் டாக்டர் விஜயரங்கன், குழந்தைகளின் மனநிலைகளை விளங்கிச் செயல்படல், மாணவர் மனநலம், பெற்றோர் நடந்துகொள்ள வேண்டிய முறை, குடும்ப உறுப்பினர்களின் பலதரப்பட்ட உளவியல் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் எழுத்து மூலம் கேட்டிருந்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
அனைத்துக் கேள்விகளுக்கான தனது விளக்கத்திலும் அவர் இறைமறை குர்ஆனிலிருந்தும், இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கைச் சரிதங்களிலிருந்தும் மேற்கோள் காட்டி உளவியல் ஆலோசனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான டாக்டர் விஜயரங்கன், தலைவர் நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் ஆகியோருக்கு ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பில் அதன் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், செயற்குழு உறுப்பினர் அப்துல் பாஸித் ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியிலும், அன்று காலையில் நடைபெற்ற “புற்றுக்கு வைப்போம் முற்று” நிகழ்ச்சியிலும் ஏற்பாட்டுப் பணிகளில் அமைப்பு ரீதியாக அங்கம் வகித்த காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தினருக்கு நிகழ்ச்சியின் இறுதியில் பரிசு வழங்கப்பட்டது.
இறுதியாக, இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. |