வரும் மார்ச் 19 அன்று சூப்பர் மூன் (Super Moon) நிகழ்வு நடைபெற உள்ளது. அன்று வழமையைவிட சந்திரன் ஏறத்தாழ 14 சதவீதம் வரை பெரியதாகவும், 30
சதவீதம் வரை பிரகாசமாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சந்திரன் பூமியை சுமார் 29 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இந்த சுற்றானது வட்ட (Circle) வடிவில் இல்லாமல், முட்டை வடிவில் (Elliptical) இருக்கும். ஆகவே பூமிக்கும், சந்திரனுக்கும் உள்ள தூரம் சீராக இல்லாமல், சில நாட்களில் கூடியும், சில நாட்களில் குறைந்தும் இருக்கும். பூமியும்,
சந்திரனும் அருகில் இருக்கும் வேளையை Perigee என்றும், தூரம் இருக்கும் வேளையை Apogee என்றும் கூறுவர்.
மேலும் - அருகில் இருக்கும் வேளைக்கும், தூரத்தில் இருக்கும் வேளைக்கும் - அமாவாசை, பௌர்ணமி நிகழ்வுகளுக்கும் பொதுவாக தொடர்பு
இருப்பதில்லை.
உதாரணமாக இவ்வருடம் ஜனவரி 22 அன்று சந்திரன் - பூமி தூரம் 3,62,792 கிலோ மீட்டராக இருந்தது. இதுவே அம்மாத சுழற்சியில் சந்திரன் -
பூமி இடையே மிக அருகாமை (Perigee) தூரமாகும். இது பௌர்ணமிக்கு இரு தினங்கள் கழித்தே நடந்தது. அதுபோல பிப்ரவரி 6 அன்று சந்திரன் -
பூமி தூரம் 4,02,792 கிலோ மீட்டராக இருந்தது. இதுவே அம்மாத சுழற்சியில் சந்திரன் - பூமி இடையே மிக விலகிய (Apogee) தூரமாகும். இது
அமாவாசைக்கு மூன்று தினங்கள் கழித்து நடந்தது.
மார்ச் 19 அன்று என்ன நடைபெறபோகிறது? மார்ச் 19 அன்று பூமிக்கும் - சந்திரனுக்கும் உள்ள தூரம் 3,56,577 கிலோ மீட்டராக இருக்கும்.
இதுபோன்ற அருகாமை தூரம் கடைசியாக 1983 இல் நடந்தது. அது மட்டும் அன்றி - மார்ச் 19 பௌர்ணமி தினமும் ஆகும். இந்த இரு
விஷயங்களும் சேர்ந்து வருவதால் சந்திரன் ஏறத்தாழ 14 சதவீதம் வரை பெரியதாகவும், 30 சதவீதம் வரை பிரகாசமாகவும் இருக்கும் என
விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிகழ்விற்கும் பூகம்பம் போன்ற இயற்க்கை சீற்றங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல்:
www.kayalsky.com
|