காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா குர்ஆன் மனனப் பிரிவின் (ஹிஃப்ழு மத்ரஸா) துவக்க ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ யூஸுஃப் முனீரீ 21.02.2011 அன்று காலமானார்.
அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஹாமிதிய்யா நிர்வாகம் சார்பில் 24.02.2011 அன்று இரவு 07.00 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஹாமிதிய்யா மார்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ தலைமை தாங்கினார்.
துவக்கமாக, கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மறைந்த ஆசிரியர் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மறைந்த ஆசிரியருக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.
பின்னர், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் மற்றும் திருக்குர்ஆன் மனனப் பிரிவின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர், ஆசிரியரின் சேவைகளை நினைவுகூர்ந்து இரங்கல் உரையாற்றினர். துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த 02.03.2011 அன்று, மறைந்த ஆசிரியரின் சொந்த ஊரான கடையநல்லூரிலுள்ள அவரது இல்லத்திற்கு, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ, மஹ்ழரா அரபிக்கல்லூரி குர்ஆன் மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் காரீ சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் குழு நேரில் சென்று கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்து பிரார்த்தனை செய்ததுடன், அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர், அவர்கள் கடையநல்லூர் அல்லிமூப்பன் தெரு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்திலுள்ள ஆசிரியரின் மண்ணறையை ஜியாரத் செய்த பின் ஊர் திரும்பினர்.
தகவல்:
J.A.செய்யித் அஹ்மத் புகாரீ, M.A.,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |