காயல்பட்டின நகர்மன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இது குறித்து MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
வரலாற்றுச் சிறப்புமிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கான தேர்தலில் பெரும்வாரியான மக்களின் அமோக ஆதரவைப் பெற்று, நமது நகர்மன்ற தலைவியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள சகோதரி பி.எம்.ஐ.ஆபிதா ஷேக் அவர்களுக்கு MEGA குழு சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உங்களின் பதவிக்காலம் அனைவரும் போற்றும் விதமாக அமைந்திட வல்லோன் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
வெற்றி பெற்றுள்ள 18 வார்ட் உறுப்பினர்களுக்கும் MEGA தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. தேர்வு செய்யப்பட்டுள்ள - 18 வார்ட் உறுப்பினர்களுக்கும் MEGAவின் ஓர் அன்பான வேண்டுகோள்:- ஜனநாயக முறையில், உங்கள் 18 பேர்களில் ஒருவரை, நீங்கள் நகர்மன்றத்திற்கான துணைத் தலைவராகத் தேர்வு செய்து - மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவரின் தலைமையில், சிறந்ததொரு நிர்வாகத்தை மக்களுக்குத் தரும்படி அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
எந்த விருப்பு-வெறுப்புமின்றி, தங்களின் பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தேர்வு செய்துள்ள நம் நகர வாக்காளப் பெருமக்கள் - நம் அனைவரின் பாராடுக்குரியவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை
MEGA மக்கள் மன்றம் முன்வைத்த நல்ல பல செயல்திட்டங்களுக்கு தார்மீக ஆதரவு அளித்த காயல்பட்டினம் ஜமாஅத்தார்கள் , உள்நாடு - வெளிநாட்டு காயல் நல மன்றங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆலோசகர்கள், சமுதாய நலன் விரும்பிகள், தன்னலம் பாராது ஊர் நலமே தனது நலம் என்று எந்தவித பிரதிபலனும் எதிர்பாராது எங்களுக்கு தோளோடு தோள் நின்று MEGAவின் கொள்கைகளுக்கு முழு உருவம் கொடுத்த MEGAவின் தூண்களான அலுவலர்கள் - தன்னார்வல தொண்டு நெஞ்சங்கள் அனைவருக்கும், ஆதரவு கொடுத்த எல்லா காயலர்களுக்கும் MEGA தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து மகி்ழ்கிறது.
அன்புடன்,
சாளை ஷேக் ஸலீம்,
பாசுல் கரீம்,
ஒருங்கிணைப்பாளர்கள்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கவிமகன் காதர்,
செய்தி தொடர்பாளர், MEGA. |