நகர்மன்றத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிய அரசாணைக்கு எதிராக, MEGA வின் பிரதிநிதி பாலப்பா ஜலாலி இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்த MEGA சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நிறைவான அருளன்பின் இறைஎகன் திருப்பெயரால்!
அன்பிற்கினிய காயல் சொந்தங்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!
எதிர்வரும் அக்டோபர் 17 ஆம் நாள் அன்று காயல்பட்டண நகர்மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நகராட்சித் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பு செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியானது.
செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று வெளியான அரசாணையில், நமது நகர்மன்றத் தலைமைப் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதாக அரசாணை ஒன்று வெளியானது.ஏற்கனவே, 1996 ஆம் ஆண்டு முதல் 2006 வரை, நமது நகர்மன்றத் தலைமைப் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. 2006 முதல்,இந்தப் பதவிக்கு ஆண்களும் போட்டியிடலாம் என்று மாற்றப்பட்டது. சுழற்சி முறையில் இன்னும் ஐந்தாண்டு காலத்திற்கு ஆண்கள்
போட்டியிட முடியும் என்ற நகர மக்களின் நம்பிக்கைக்கும், எதிர்பார்ப்பிற்கும் மாறான அரசாணை, மக்கள் மத்தியில் அதிருப்தி மற்றும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது.
மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற, அவர்களின் உணர்வை மதித்து, நகராட்சித் தேர்தல் வழிகாட்டும் நமது MEGA அமைப்பின் பிரதிநிதியும், மக்கள் சேவாக்கரங்கள் அமைப்பின் நிறுவனருமான சமூக ஊழியர் பாலப்பா ஜலாலி அவர்கள், பெண்களுக்கு தலைமைப் பதவியை ஒதுக்கிய அரசின் ஆணையை எதிர்த்து, இன்று (திங்கள் கிழமை) மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு வெகுவிரைவில் விசாரணைக்கு
வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் இதே ஆணையால் அதிருப்தியடைந்த கீழக்கரை, கடையநல்லூர், நெல்லிக்குப்பம் போன்ற ஊர்களில் இருந்து நமக்கு முன்னரே வழக்கு தொடர்ந்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லதோர் நகர்மன்றத்தை அமைக்கும் பணியில், அல்லாஹ்வை முன்னிறுத்தி தனது பயணத்தை துவக்கிய MEGA தனது இலக்கை நோக்கிய பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லை இன்றைய தினம், பொதுமக்களின் பேராதரவுடன் கடந்துகொண்டிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கவிமகன் காதர்,
செய்தித் தொடர்பாளர், MEGA.
|