பள்ளிக்கூடங்களில் பயிலும் முஸ்லிம் மாணவியர் தம் தலையை மறைக்கும் முக்காடு (ஸ்கார்ஃப்) அணிய தடையேதுமில்லை என்றும், பிறப்புச் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு பத்தாம் வகுப்பு nominal listஇல் மாணவியரின் பெயர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பரிமளா தெரிவித்துள்ளார்.
காயல்பட்டினம் தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் பயிலும் மாணவியர், அசெம்ப்ளி நேரத்திலும், வகுப்பறையிலும் தலையில் முக்காடு (ஸ்கார்ஃப்) அணிய அனுமதி மறுக்கப்படுவதாகவும், பத்தாம் வகுப்பு மாணவியர் தமது பிறப்புச் சான்றிதழ் அடிப்படையில், பத்தாம் வகுப்பு nominal roleஇல் பெயர் பதிவு செய்ய மறுக்கப்படுவதாகவும் பெற்றோர் சிலர் குற்றம் சாட்டியதாகக் கூறி, காயல்பட்டினம் மக்கள் சேவாக் கரங்கள் அமைப்பின் நிறுவனர் மேல் நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மக்கள் சேவா கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலீ வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமதூர் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி யு.திருமலை அவர்கள் அரசு விதிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுவதாக எமது அமைப்பின் நிறுவனர் என்ற முறையில் பா.மு.ஜலாலி ஆகிய நான், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி தமிழ்ச்செல்வி அவர்களிடமும், முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி பரிமளா அவர்களிடமும் பின்வருமாறு புகார் தெரிவித்திருந்தேன்:-
(1) பிறப்புச் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு பத்தாம் வகுப்பு nominal listஇல் மாணவியரின் பெயர்கள் பதிவு செய்யப்பட வேண்டும்...
(2) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவியர் பெயர் திருத்தம், தந்தை பெயர் திருத்தம் ஆகியவை அரசிதழில் வெளியிடப்பட்டாலும் அதை ஏற்க மறுக்கின்றனர்...
(3) அசெம்ப்ளி நேரத்தில் முஸ்லிம் மாணவியர் தலையில் ஷால் (துப்பட்டா) அணியக்கூடாது என்று தலைமையாசிரியை திருமதி யு.திருமலை அவர்கள் கட்டாயப்படுத்தி வருகிறார். இச்செயல் நிறுத்தப்பட வேண்டும்...
ஆகிய கோரிக்கைகளை மேற்படி இரு அதிகாரிகளிடமும் முன்வைத்தேன். விசாரிக்க வருவதாக இரண்டு அலுவலர்களும் தெரிவித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி பரிமளா அவர்கள் 22.09.2011 அன்று நண்பகல் 12.00 மணியளவில் நமதூர் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளிக்கு வருகை தந்தார்.
புகார் தெரிவித்ததன் அடிப்படையில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, நானும் பகல் 12.00 மணிக்கு அங்கு சென்றேன். புகாரில் தொடர்புடைய இரண்டு பெற்றோரும் வந்திருந்தனர்.
விசாரணைக்குப் பின், முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவித்தவை:-
(1) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு செல்லக்கூடிய மாணவியருக்கு nominal listஇல் பெயர்கள் சேர்க்கவும், பிறந்த தேதியில் திருத்தம் செய்யப்பட வேண்டுமெனில் மாணவியரின் பிறப்புச் சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும்...
(2) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய பின்னர், 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவியர் தமது பெயர்களில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமெனில், அத்திருத்தம் முதலில் அரசிதழில் (gazzette) கண்டிப்பாக வெளியிடப்பட வேண்டும்...
(3) அரசு பொதுத்தேர்வு எழுதும் அறையில் மட்டுமே தவிர, இதர நேரங்களில் பள்ளி வளாகத்தில் எங்கும், எப்பொழுதும் முஸ்லிம் மாணவியர் தம் விருப்பப்படி முக்காடு அணிந்துகொள்ளலாம். அதை தடுக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை...
இவ்வாறு தலைமையாசிரியை பொறுப்பில் இருந்தவரிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி பரிமளா தெரிவித்தார்.
பின்னர், அவ்விடம் வந்த தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் அவர்களிடமும் முதன்மைக் கல்வி அதிகாரி எனது முன்னிலையில் இக்கருத்தைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், மாணவியரின் பெற்றோர் சிலர், பொது நல அமைப்புகள், மக்கள் சேவா கரங்கள் நிறுவனரான நான் உள்ளிட்டோர் இதுபோன்று தொடர் முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி யு.திருமலை பணியிட விருப்ப மாறுதலுக்கு விண்ணப்பித்து வேறு பள்ளிக்கு சென்றுவிட்டதை அறிய முடிந்தது.
இவ்வாறு மக்கள் சேவாக் கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலீ தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |