தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கியது. இம்மாதம் 29ஆம் தேதி (நாளை) வரை வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பு இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டுகளைப் பொருத்த வரை, 14ஆம் வார்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கும், 02, 03, 04, 08, 09 ஆகிய வார்டுகள் பொதுவாக பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டுகளைத் தவிர்த்து, 01, 05, 06, 07, 10, 11, 12, 13, 15, 16, 17, 18 ஆகிய ஆண்களும், பெண்களும் போட்டியிடும் பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கி, 29.09.2011 வரை நடைபெற்றது.
இந்நிலையில், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவை உள்ளடக்கிய 07, 08, 09ஆம் வார்டுகளில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதிப்பதற்காக பள்ளியின் பொதுக்குழு 15.09.2011 அன்று கூட்டப்பட்டது.
09ஆம் வார்டில் மரைக்கார் பள்ளி, அப்பா பள்ளி ஜமாஅத்தினர் அதிகளவில் இருப்பதைக் கருத்திற்கொண்டு, அவ்விரு ஜமாஅத்துகள் சார்பில் அறிவிக்கப்படும் பொது வேட்பாளரை ஆதரிப்பதென அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சொளுக்கார் தெரு, கொச்சியார் தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு, தேங்காய் பண்டக சாலை, மாட்டுக்குளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 08ஆம் வார்டு மற்றும் தீவுத்தெரு, கீழநெய்னார் தெரு, கற்புடையார் பள்ளி வட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 07ஆம் வார்டு ஆகிய இரண்டு வார்டுகளிலும் பள்ளியின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக, 9 பேர் குழு அக்கூட்டத்தில் நியமிக்கப்பட்டது. அவ்விரு வார்டுகளுக்குமான பொது வேட்பாளரை - பெறப்பட்ட விருப்ப மனுக்களின் அடிப்படையில் அக்குழுவினர் பரிசீலித்து, இறுதி முடிவை பள்ளி நிர்வாகத்திற்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டுமென பணிக்கப்பட்டனர்.
அதனையடுத்து, 07ஆவது வார்டுக்கு, சொளுக்கார் தெருவைச் சார்ந்த முஹம்மத் ஜிஃப்ரீ என்பவரின் மகன் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், 08ஆவது வார்டுக்கு கொச்சியார் தெருவைச் சார்ந்த எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் ஆகியோர், பள்ளியின் சார்பில் பொது வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வரும் நகர்மன்றத் தேர்தலில், அறிவிக்கப்பட்ட இந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு ஜமாஅத்தாருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. |