தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கியது. இம்மாதம் 29ஆம் தேதி (நாளை) வரை வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பு இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று (செப்.29) வேட்பு மனு அளிக்க கடைசி நாளாகும். வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று வரை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்கு 07 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் பட்டியல் பின்வருமாறு:-
(1) காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சார்ந்த இறைச்சிக்கடை சுல்தான் ஜமாலுத்தீன் என்பவரின் மனைவி கே.பி.செய்யித் மர்யம்.
(2) ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் என்பவரின் மனைவி முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா.
(3) காயிதேமில்லத் நகரைச் சார்ந்த சிங்கப்பூரார் முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரின் மனைவி எச்.எம்.முஹம்மத் இப்றாஹீம் உம்மா.
(4) மகுதூம் தெருவைச் சார்ந்த ஷேக் அப்துல் காதிர் என்பவரின் மனைவி ஆபிதா ஷேக்.
(5) ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த அபூ முஹம்மத் ஸலாஹுத்தீன் என்பவரின் மனைவி ஆயிஷா பர்வீன்.
(6) ஓடக்கரையைச் சார்ந்த ஆல்பர்ட் நாடார் என்பவரின் மனைவி ஏ.ருத்தம்மாள்.
(7) ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த செய்யித் முஹம்மத் என்பவரின் மனைவி நஃபீஸத்து தாஹிரா.
இவர்களுள், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடிப்படையில் 28.09.2011 அன்று வேட்பு மனு தாக்கல் செய்த, ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் என்பவரின் மனைவி முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா என்பவருக்கும்,
வேட்பு மனு செய்ய கடைசி நாளான 29.09.2011 அன்று (நேற்று), வேட்பு மனுச் செய்ய கடைசி நேரமான மதியம் 03.00 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன் வேட்பு மனு தாக்கல் செய்த அவரது தாயார் - ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த செய்யித் மஹ்மூத் என்பவரின் மனைவி நஃபீஸத்து தாஹிரா என்பவருக்கும் காயல்பட்டினம், திருச்சி (கிழக்கு) ஆகிய இரண்டு இடங்களிலும் வாக்குரிமை உள்ளது.
சட்ட விதிகளின்படி ஒருவருக்கு ஒரு இடத்தில் மட்டுமே வாக்குரிமை இருக்க வேண்டும். இந்நிலையில், இவ்விருவரின் பெயர்களும் காயல்பட்டினம், திருச்சி (கிழக்கு) ஆகிய இரண்டிடங்களிலுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது நேற்று முதல் நகரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, அந்த வேட்பாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, இவர்களின் திருச்சி (கிழக்கு) வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த வாக்குரிமையை நீக்கம் செய்ய விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. |