காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் நியமனம் செய்யப்பட்ட நகர்மன்றத் தலைவர் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது வேட்பாளரான ஹாஜ்ஜா எல்.எஸ்.எம். முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா, வரும் நகர்மன்றத் தேர்தலில், தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் தன்னை ஆதரிக்குமாறு நகர பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பார்ந்த காயல் மாநகர வாக்காளர் பெருமக்களே! வல்ல இறைவனின் நல்லருள் நம் அனைவரின் மீதும் நிலவுமாக!
நடைபெறவுள்ள காயல்பட்டணம் நகராட்சித் தேர்தலில் நகராட்சித் தலைவர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட, ஜமாஅத்துக்கள் மற்றும் பொதுநல அமைப்புக்களின் அங்கீகாரத்தோடும், சகோதர சமுதாய மக்களின் ஆதரவோடும், அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்போடும் ஊரின் பொது வேட்பாளராக நான் நிற்கின்றேன்.
பாரம்பரியமும், வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வூரில் வாழும் மக்களுக்கு தொண்டாற்ற, உங்களின் உடன்பிறந்த அன்புச் சகோதரியாகக் கருதி எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்.
உங்களின் ஆலோசனையுடன் என்னால் இயன்ற அளவு ஈடுபாட்டுடன் இவ்வூருக்காக உழைப்பேன். உங்களின் வாழ்த்தையும், வரவேற்பையும், பாராட்டையும் பெறம் வகையில் பாடுபடுவேன்.
இறைவனருளால் உங்கள் பேராதரவோடு நான் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், குடும்பத் தலையீடு மற்றும் தவறான நடவடிக்கைகளுக்கு உட்படாத, ஊழலற்ற, தூய்மையான நிர்வாகத்தைத் தருவேன் என உறுதியளிக்கிறேன்.
எனவே, இத்தேர்தலில் தயவுகூர்ந்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
உரிமையோடு வேண்டுகிறேன்!
ஊருக்கு உழைக்க உத்தரவிடுங்கள்!!
இவண்,
ஹாஜ்ஜா எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரியா பி.காம்.
30.09.2011
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை அச்சிடப்பட்ட பிரசுரம், நகரின் இரண்டு ஜும்ஆ பள்ளிகளிலும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. |