தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கி, 29.09.2011 தேதியுடன் நிறைவுற்றது.
காயல்பட்டினத்தின் நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு 7 பேரும், நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கு ஏராளமானோரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நிலைபாடு குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தாய்லாந்து காயல் நல மன்றத்தின் சிறப்புப் பொதுக் குழு கூட்டம் 02-10-11 ஞாயிறு இஷா தொழுகைக்குப் பின் தாய்நாடு டிராவல்ஸ் இல்லத்தில், மன்றத் தலைவர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் அவர்கள் தலைமையில், மௌலவி அப்துல் வதூத் ஆலிம் ஃபாஸி, ஹாஜி அப்துல் கரீம், ஹாஜி விளக்கு நூர் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
துவக்கமாக ஹாஃபிழ் மிஸ்கீன் ஸாஹிப் கிராஅத் ஓதினார். சகோதரர் அப்துல் வஹாப் அவர்களின் வரவேற்புரைக்குப் பின் கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தோடு கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், நமது காயல்பட்டணம் ஐக்கிய பேரவை, அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து தொண்டு நிறுவனங்கள் சார்பாக தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டிருக்கும் ஜனாபா மைமூனதுல் மிஸ்ரிய்யா என்ற சகோதரியை ஒரு மனதாக ஆதரித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்வதுடன் மற்றவர்கள் ஊர் ஒற்றுமையைக் கருதி தங்கள் போட்டியிலிருந்து விலகுமாறு தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக தாய்நாடு சயீது அவர்களின் நன்றி கூற, மௌலவி அப்துல் வதூத் ஆலிம் ஃபாஸி அவர்கள் துஆவுக்குப் பின் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |