செய்தி எண் (ID #) 7342 | | |
வியாழன், அக்டோபர் 6, 2011 |
புதுப்பள்ளி நிர்வாகத்தின் உள்ளாட்சி தேர்தல் பற்றிய இரண்டாவது அறிக்கை! |
செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 7821 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (50) <> கருத்து பதிவு செய்ய |
|
புதுப்பள்ளி ஜமாஅத் சார்பாக எதிர்வரும் நகர்மன்ற தேர்தல் குறித்து அறிக்கை ஒன்று - அக்டோபர் 3 அன்று -வெளியிடப்பட்டிருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்த சில விஷயங்கள் குறித்து நகர்மன்ற மன்ற தலைமை பொறுப்புக்கான வேட்பாளர் பி.எம்.ஐ. ஆபிதா - விளக்கம் அளித்திருந்தார்.
புதுப்பள்ளி சார்பாக மீண்டும் ஓர் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இணையதளத்தில் நகராட்சி தேர்தலில் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர் சகோதரி P.M.I. ஆபிதா அவர்களின் அறிக்கையை படித்தோம். அதில் புதுப்பள்ளி ஜமாஅத்தின் தலைவர் ஹாஜி S.M. உஜைர் அவர்கள் இணையதளத்திற்கு அளித்திருந்த தன்னிலை அறிக்கைக்கு பதில் அளித்துள்ளார்கள்.
அவர்கள் அறிக்கையில் இணைப்புகளாக (Attachments) வெளியிட்டுள்ள கடிதங்கள் எதுவுமே ரகசிய ஆவணங்கள் அல்ல. ஐக்கிய பேரவைக்கு சகோதரி எழுதிய கடிதம், ஐக்கிய பேரவையால் விருப்ப மனு தந்த அனைவருக்கும் எழுதியது போல், இந்த சகோதரிக்கும் எழுதிய கடிதம், முச்சரிக்கை (உறுதிமொழி படிவம்) ஆகியவை மட்டும் தான்.
"பேரவையுடன் தொடர்பான எனது நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு எப்படியேனும் தெரிவித்தேயாக வேண்டும் என்று என் மனம் தூண்டியபோதெல்லாம் என்னை நான் கட்டுப்படுத்திக்கொண்டு, நாமாக ஏன் மக்களிடம் முந்திக்கொண்டு சொல்ல வேண்டும்... பின்னர் அதை ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் ஒரு செயலாக மக்கள் எடுத்துக்கொள்வார்களே... என்ற எண்ணத்தில் இதுகுறித்து எதையும் இதுவரை தெரிவிக்காமலிருந்தேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏதோ மிகப்பெரிய அநீதி அவருக்கு இழைக்கப்பட்டிருப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க அறிக்கையின் துவக்கத்திலேயே முயற்சிக்கிறார் என்பது தான் உண்மை.
சகோதரி அவர்களிடத்தில் சில கேள்விகள்:
1) ஐக்கிய பேரவையின் உறுதிமொழிப் படிவம் (முச்சரிக்கை) உங்களுக்கு மட்டும் அனுப்பப்படவில்லை. அனைத்து விருப்ப மனு தந்தவர்களுக்கும் அனுப்பப்பட்டது என்பதாவது தங்களுக்கு தெரியுமா? அதிலுள்ள வாசகம் உங்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எழுதப்படாமல் அனைவருக்கும் பொதுவாக எழுதப்பட்ட ஒரே வாசகம் என்பதாவது தங்களுக்கு தெரியுமா?
2) நமது ஜமாஅத்தைச் சார்ந்த J.A. லரீப், உதவித் தலைவர் S.S.M. புகாரி ஆகியோரும், ஐக்கிய பேரவையின் சார்பில் தேர்தல் பணிகளை மட்டும் கவனிக்கும் காயல் ளு.நு. அமானுல்லாஹ் அவர்களும் தங்களிடம் நேரடியாக உறுதிமொழிப் பத்திரத்தில் (முச்சரிக்கை) கையெழுத்தின் அவசியத்தை வலியுறுத்தி வேண்டிக் கொண்டபோதும் பரிசீலிக்க மறுத்தது ஏன்? நல்லெண்ணத்தோடு அவர்கள் தங்களிடம் விடுத்த வேண்டுகோளை அலட்சியப்படுத்தியது ஏன்?
3) ஜமாஅத்தின் தலைவர் S.M. உஸைர் அவர்கள் தங்கள் கணவர் ஷேக் அவர்களிடம் இந்த முச்சரிக்கையின் அவசியம் குறித்து நீண்ட நேரம் வலியுறுத்திய பின்பும் அவராவது பரிசீலித்திருக்கலாமே!
4) எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, பெயர் குறிப்பிடமுடியாத நிலையில் உள்ள தங்களின் மிக நெருங்கிய தோழியும், தற்போதைய நகராட்சியில் பெண் கவுன்சிலராக இருப்பவருமான ஒருவர் மூலமாக பேரவை சார்பாக வலியுறுத்தி கேட்ட போதும் அதனையும் தாங்கள் அலட்சியப்படுத்தியது ஏன்?
5) நீங்களே உங்கள் விளக்க அறிக்கையில் - நமதூரின் அனைத்து ஜமாஅத்தாரும் இதனை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்குடன், நகர பள்ளிவாசல்களின் முத்தவல்லிகளுக்கும் அவர்களின் இல்லங்களுக்கு நானே நேரில் சென்று, ஐக்கியப் பேரவைக்கு நான் அளித்த விருப்ப மனுவின் நகலுடன், பின்வருமாறு தனிக்கடிதம் அளித்தேன் - என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியானால் நமதூர் அனைத்து பள்ளிவாயில்களின் முத்தவல்லிகளின் ஆதரவை கோரியுள்ளீர்கள். இது தவறில்லை. ஆனால் தாங்கள் முச்சரிக்கையின் கையெழுத்திட்டிருந்தால் ஒருவேளை நீங்கள் ஏற்கனவே பள்ளிவாயில் முத்தவல்லிகளுக்கு கடிதம் மூலமாக அளித்த வேண்டுகோள் பயனளித்திருக்கும் அல்லவா? ஏனெனில் அந்த கடிதங்களுடன் பேரவைக்கு அனுப்பிய விருப்ப மனு காப்பியையும் இணைத்திருக்கிறீர்கள். இப்படியிருக்க தேர்வுக்குழு கூட்டத்தில் தங்கள் விருப்ப மனு மட்டும் வாசிக்கப்படாதது போலவும், அதனால் தாங்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறீர்களே? இது நியாயமா?
6) விருப்ப மனு கடிதத்தையே உறுதிமொழிப் படிவமாக கருதியிருக்கலாமே என்பது தங்களின் கருத்து மட்டும் தான். அதனை தேர்வுக்குழுவினர் ஏற்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?
7) முச்சரிக்கையில் (உறுதிமொழி) கையெழுத்திடாத உங்கள் மனு மட்டும் தான் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லையா? அல்லது மற்ற கையெழுத்திடாத இருவருடைய மனுக்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதாவது உங்களுக்கு தெரியுமா?
8) நீங்கள் உட்பட உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடாத மூவரின் பெயர்களும் அந்த தேர்வுக்குழு கூட்டத்தில் (ஜலாலிய்யாவில்) வாசிக்கப்பட்டது என்பதாவது உங்களுக்கு தெரியுமா?
9) உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடாதவர்களின் மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள தேவையில்லை என்று தேர்வுக் குழுவில் பங்கேற்றோர் தெரிவித்த போது, இதற்கு மாற்றுக் கருத்து உடையவர்கள் யாரேனும் உண்டா? என்று கேட்டு நேர அவகாசம் கொடுக்கப்பட்ட பின்பும், எவருமே அக்கேள்விக்கு ஆதரவாக ஒப்புதல் வழங்கவில்லை என்பதாவது உங்களுக்கு தெரியுமா?
10) உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திடாத மனுக்களை பரசீலிக்க மறுத்தது ஜமாஅத்துக்களின் பிரதிநிதிகளான தேர்வுக்குழுவினரே தவிர, ஐக்கியப் பேரவையினர் இல்லை என்பதாவது தங்களுக்கு தெரியுமா? அக்கூட்டத்தில் ஐக்கியப் பேரவையினர் ஒருங்கிணைப்பாளர்களாகவும் பார்வையாளர்களாகவும் மட்டுமே இருந்தார்கள் என்பதும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் இக்கூட்ட நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் தங்களுக்கு தெரியுமா?
11) ஊழலுக்கு துணை போக மாட்டேன், நேர்மையான நடப்பேன் என்பன போன்ற சில நிபந்தனைகளை பதிவு செய்து அதனடியில் கையெழுத்து கேட்டிருக்கலாமே என குறிப்பிட்டுள்ளீர்கள். நல்ல யோசனை தான். இப்படிப்பட்ட உறுதிமொழிகளை விருப்ப மனு அளித்தவர்கள் அனைவரும் தான் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். அனைவரிடமும் தான் அப்படி கையெழுத்து வாங்க வேண்டியது வரும். ஒருவேளை அந்த மாதிரி சூழ்நிலை ஏற்பட்டு தேர்வுக்குழுவினரால் தாங்கள் தேர்வு செய்யப்படவில்லையென்றால் அப்போது தங்கள் நிலை என்னவாக இருக்கும்?
12) பேரவையில் எனது தன்னிலை விளக்கத்தை அளித்தபோதும், பேரவையின் நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழு கூட்டத்தில், பொதுவேட்பாளர் என்று ஒருவர் தேர்வு செய்யப்பட்ட பின்னரும், உன்னைத்தான் தேர்ந்தெடுக்க எல்லோரும் நாடியிருந்தோம்... இப்படி தேடி வந்த சீதேவியை எட்டி உதைத்துவிட்டாயே...? என்று பலர் என்னிடம் நேரிலும், தொலைபேசியிலும் தெரிவித்தனர். இப்போது எனக்கு இருக்கும் சந்தேகமெல்லாம், ஆபிதாவாகிய என்னைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தால், ஏன் மற்றவர்களிடமெல்லாம் விருப்ப மனு கேட்டனர்...? எதற்கு இந்த பொது வேட்பாளர் தேர்தல்...? இது எனக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. என குறிப்பிட்டுள்ளீர்கள். இதில் ஒன்றும் புதிர் இல்லை. தங்கள் மீது நல்லெண்ணம் வைத்திருக்கும் சில நல்லவர்கள் தாங்கள் முச்சரிக்கையில் கையொப்பமிட்டிருந்தால் ஒருவேளை தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாமோ என்ற நினைப்பில் எழுந்த ஆதங்கத்தின் பிரதிபலிப்பே அது. நீங்கள் குறிப்பிடுவது போல் அதில் புதிரில்லை. தங்களை மதித்து ஆதரவாக தெரிவித்த கருத்தையே பேரவைக்கு எதிராக திருப்பியிருப்பது தான் எங்களுக்கு புதிராக தெரிகிறது.
13) இதுதான் நடந்த உண்மை நிகழ்வுகள் என்பதை அல்லாஹ்வை சாட்சியாக்கி உங்களிடம் திறந்த மனதுடன் தெரிவித்துள்ளேன்.
என தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுக்கு தவறான வழிகாட்டும் சிலரால் பரப்பப்படும் வதந்திகளை நம்பி தயவு செய்து இனி இவ்விசயத்தில் அல்லாஹ்வை சாட்சியாக்காதீர்கள்.
14) ஐக்கிய பேரவையின் ஆதரவு பெற்ற வேட்பாளராக என்னை தேர்ந்தெடுக்காமல் நிராகரித்து விட்டால் நமது செயல்பாடுகள் முடக்கப்பட்டு விடுமோ, நமது நல்ல எண்ணங்கள் நசுக்கப்பட்டு விடுமோ என்ற உண்மையான ஆதங்கத்தின் காரணமாக மட்டுமே எனக்கு கையொப்பமிடுவதற்கு தயக்கமாக இருக்கிறது என தாங்கள் அறிக்கையோடு இணைத்துள்ள (ஐக்கியப் பேரவைக்கு எழுதிய) கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதை ஒரு வாதத்திற்கு சரியென்றே எடுத்துக் கொண்டால், விருப்பமனு தந்த மற்றவர்களும் இதே வாதத்தை முன்வைத்தால் எப்படி தான் மனுக்களை பரிசீலித்து பொது வேட்பாளரை தேர்வு செய்ய முடியும்? தங்களைப் புறக்கணிக்க ஐக்கிய பேரவைக்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும்? அதையாவது சொல்லுங்கள்.
அன்புள்ள நமது ஜமாஅத் சகோதரி அவர்களுக்கு இறுதியாக ஒரு வேண்டுகோள். ஊரின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது வாக்குகள் நம்மிடையே உள்ள பிரிவினையால் சிதையும் போது எதிர்பாராத வருந்தத்தக்க பின்விளைவுகளை சற்று எண்ணிப் பாருங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் நஷ்டப்படுவதில்லை. பெருந்தன்மையாக தாங்கள் முடிவெடுத்தால் காலம் தங்களுக்கு உரிய மரியாதையை வழங்கும். எனவே தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்யுங்கள். ஜமாஅத்துக்களின் பொது வேட்பாளர் இன்ஷா அல்லாஹ் அடையும் வெற்றியில் தங்களின் ஒத்துழைப்பும் இணையட்டும். வருங்கால காயலின் வரலாறு தங்களை வாழ்த்தும். இதனை ஏற்பதும் மறுப்பதும் தங்களின் உரிமை. வல்ல இறைவன் நம்மனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!. ஆமீன்.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு,
S.M. உஸைர் (தலைவர்).
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.A. முஸ்தபா (செயற்குழு உறுப்பினர்) |