சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் டாக்டர் ஷாந்தா 02.10.2011 அன்று காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துமனையில், புற்றுநோய் விழிப்புணர்வு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை நடத்திய புற்றுநோய் காரணிகள் கண்டறியும் குழுவான (Cancer Fact Finding Committee) CFFC சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
டாக்டர் ஷாந்தா வருகை:
சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் 50 ஆண்டு கால தலைவரும், புற்றுநோய் மருத்துவத்தில் உலகப்புகழ் பெற்றவரும், நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி சர். சி.வி.ராமனின் பேத்தியும், நோபல் பரிசு வென்ற சந்திரசேகரின் மருமகளும், பத்மஸ்ரீ, ரேமோன் மகசேசே, பத்மபூஷன் விருதுகளைப் பெற்றவருமான 84 வயது நிறைந்த மருத்துவ மாமேதை டாக்டர் சாந்தா அவர்கள் 02.10.2011 அன்று காயல்பட்டினம் வருகை தந்தார்.
முன்னதாக மருத்துவக் குழுவினருடன் வந்திருந்த டாக்டர் சாந்தா அவர்களை தூத்துக்குடி விமான நிலையத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான CFFC ( Cancer Fact Finding Committee )யின் வரவேற்புக்குழுவினரால் பூச்செண்டு வரவேற்கப்பட்டு, நிகழ்ச்சி நடைபெறும் K.M.T.மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே அவருக்கு மருத்துவமனை செயலாளர் ஹாஜி T.A.S.முஹம்மது அபூபக்கர் பூச்செண்டு வழங்கி வரவேற்றார்.
அமர்வு 1 - மருத்துவர்களுடன் கலந்தாய்வு:
டாக்டர் ஷாந்தா அவர்களை கொண்டு, காயல்பட்டினம் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு ( CFFC ) சார்பில், கே.எம்.டி. மருத்துவமனையில் இரண்டு அமர்வுகளாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முதல் அமர்வு மருத்துவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக - ''Profile of Cancer Victim from Kayalpatnam - காயல்பட்டினத்தில் புற்று நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் பற்றிய மேலோட்ட குறிப்பு '' என்ற தலைப்பில் காயல்பட்டினத்திலுள்ள அனைத்து மருத்துவர்கள், காயல்பட்டினம் மக்களுக்கு பெரும்பாலும் மருத்துவ சிகிச்சையளிக்கும் வெளியூர்களிலுள்ள மருத்துவர்களுடன், காயல்பட்டினத்தின் நோயாளிகள் குறித்து டாக்டர் சாந்தா அவர்கள் கலந்துரையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சி மாலை 05.15 மணிக்குத் துவங்கியது. ஹாஜி எஸ்.ஐ.புஹாரி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.பல்லாக் அப்துல் காதிர் நெய்னா வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து CFFC - யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் A.தர்வேஷ் முஹம்மது, மருத்துவ மாமேதை டாக்டர் வீ . சாந்தா அவர்களுக்கு மலர்ச்செண்டு வழங்கி கவுரவித்தார். அடுத்து அடையாறு புற்றுநோய் மையத்தின் ரேடியேஷன் ஆன்காலஜி துறைத்தலைவர் டாக்டர் செல்வலக்ஷ்மி அவர்களுக்கு ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத், எபிடமோலஜி துறை தலைவர் டாக்டர் சுவாமிநாதன் அவர்களுக்கு M.W.ஹாமீத் ரிபாஈ ஆகியோரும் பூச்செண்டு வழங்கி கவுரவித்தனர்.
காயல்பட்டினத்தில் இதுவரை நடத்தப்பட்டுள்ள புற்றுநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், Cancer Survey - யின் தகவல்கள், மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பரிசோதனைகள் குறித்தும், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நோக்கம், மருத்துவர்கள் தரப்பில் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் CFFC -யின் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் விரிவாக விளக்கிப் பேசினார். அவையனைத்தையும் டாக்டர் ஷாந்தா அவர்கள் மிகவும் உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தார்.
டாக்டர் ஷாந்தா உரை:
இதனைத் தொடர்ந்து எல்லோரின் எதிர்பார்ப்புக்குரிய மருத்துவ மாமேதை டாக்டர் ஷாந்தா பேசினார்.CFFC -யின் முயற்சிகளையும் ஏனைய அமைப்புகளின் சேவைகளையும் டாக்டர் ஷாந்தா வெகுவாகப் பாராட்டினார்.
குறிப்பாக புற்றுநோய் பரவல் குறித்த தகவல் சேகரிப்பில் இக்ராஃ கல்விச் சங்கத்தின் 40 பெண் தன்னார்வத் தொண்டர்கள் 10 தினங்களில் முழுமையான தகவல்களை சேகரித்தது குறித்து வியப்பு தெரிவித்து பாராட்டினார்.
புற்றுநோய் நிரந்தர பதிவகம்:
மேலும் காயல்பட்டினத்தில் புற்றுநோயை அடியோடு ஒழிப்பதில் தாம் கவனம் செலுத்தப் போவதாகவும், காயல்பட்டன மக்களை புற்றுநோய் இறப்பிலிருந்து பாதுகாத்திட தம்மால் இயன்ற உதவிகளை செய்வதாகவும், துவக்கமாக Cancer Registry நிரந்தரமாக பதிவு செய்திடுவதற்கான ஏற்பாடுகளை செய்யவிருப்பதாகவும், காயல் நகரின் நாற்பதாயிரம் மக்களிடமும் சென்று தகவல் சேகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், Cancer Screening centre நிரந்தரமாக காயல் நகரிலேயே அமைத்திடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும் இன்று பெருமளவில் பேசப்படும் புகையிலைப் புற்று நோயிலிருந்து மக்களை காத்திடும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும் என்றும், இதற்கு பள்ளி ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது என்றும், ஆசிரியர்கள் மாணவப்பருவத்திலேயே இதன் தீங்கைப் பற்றியும், இதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றியும் விளக்கிட வேண்டும் என்றும், இதன் மூலம் வருங்கால சந்ததியினை இக்கொடிய புற்று நோயிலிருந்து காத்திட முடியும் என்றும் கூறினார்.
தொடர்ந்து மருத்துவர்களுடனான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. பயனுள்ள, ஏராளமான தகவல்கள் பரிமாறப்பட்டன. மருத்துவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் டாக்டர் ஷாந்தா பதிலளித்தார்.
அடையாறு புற்றுநோய் மையத்தின் ரேடியேஷன் ஆன்காலஜி துறைத்தலைவர் டாக்டர் செல்வலக்ஷ்மி, எபிடமோலஜி துறை தலைவர் டாக்டர் சுவாமிநாதன் ஆகியோரும் பல்வேறு வினாக்களுக்கு பதிலளித்தனர்.
டாக்டர் சுவாமிநாதன் அவர்கள் உரையாற்றுகையில் அனைத்து மருத்துவர்களும் தங்களிடம் வரும் புற்று நோயாளிகள் குறித்த தகவல்களை கண்டிப்பாக பதிவுசெய்து வைத்திருக்க வேண்டும் என்றும், அது பல வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இவ்வமர்வில், காயல்பட்டினத்திலுள்ள மருத்துவர்கள், காயல்பட்டினம் வருகை தரும் மருத்துவர்கள், காயல்பட்டினம் மக்களுக்கு பெரும்பாலும் மருத்துவ சிகிச்சையளிக்கும் வெளியூர்களிலுள்ள மருத்துவர்கள் 23 பேர் கலந்து கொண்டனர்.
அனைத்து மருத்துவர்களுக்கும் CFFC -யின் சுருக்கமான விளக்க அறிக்கை -Information Kit வழங்கப்பட்டது. ஜித்தா காயல் நற்பணி மன்றம் வெளியிட்ட ''புற்றுக்கு வைப்போம் முற்று'' குறுந்தகடும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக கலந்து கொண்ட மருத்துவர்கள் அனைவரும் மருத்துவ மாமேதை பத்மபூசன் டாக்டர் ஷாந்தா அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் டாக்டர் ஷாந்தா உள்ளிட்ட மருத்துவக் குழுவினருடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
மருத்துவர்கள் மகிழ்ச்சி:
இதற்கு அழைக்கப்பட்ட பெரும்பாலான மருத்துவர்கள் இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், மிகவும் பயனுள்ள ஒரு நிகழ்ச்சி என்றும், மருத்துவ மாமேதை டாக்டர் ஷாந்தா அவர்களுடன் சந்திப்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றியை தெரிவிப்பதாகவும் கூறினர்.
அமர்வு 2 - பொதுமக்களுடன் கலந்துரையாடல்:
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்ச்சி இரவு 07.00 மணிக்குத் துவங்கியது. இது ''காயல்பட்டினத்தில் புற்று நோய் பிரச்சினையை எதிர்கொள்வதில் பொது மக்களின் பங்கு'' என்ற தலைப்பில் மருத்துவ மாமேதை டாக்டர் ஷாந்தா அவர்கள் பொதுமக்ககளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த அமர்விற்கு கே.எம்.டி. மருத்துவமனை செயலாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமை தாங்கினார். தொழிலதிபர் ஹாஜி எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத், அடையாறு புற்றுநோய் மையத்தின் ரேடியேஷன் ஆன்காலஜி துறைத்தலைவர் டாக்டர் செல்வலக்ஷ்மி, எபிடமோலஜி துறை தலைவர் டாக்டர் சுவாமிநாதன், CFFC தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் பல்லாக் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
CFFC - யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் வெள்ளி முஹ்யித்தீன் கிராஅத் ஓதினார். ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, நிகழ்ச்சி அறிமுகம் குறித்தும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டாக்டர் சாந்தா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் குறித்தும் அறிமுகப்படுத்திப் பேசினார். காயல்பட்டினத்தில், புற்றுநோய் பரவல் தடுப்புக்காக இதுவரை செய்யப்பட்டுள்ள செயல்திட்டங்கள், அதனால் கண்ட பலன்கள் குறித்தும் தனதுரையில் விளக்கிப் பேசிய அவர், அடையாறு புற்றுநோய் மையத்தின் மூலம், காயல்பட்டினத்தில் நிரந்தர புற்றுநோய் பதிவகம் உருவாக்கித் தரவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மருத்துவர்களுக்கு சங்கை:
பின்னர், மேடையில் அமர்ந்திருந்த மருத்துவ நிபுணர்களுக்கு கத்தர் காயல் நல மன்ற ஆலோசகர் ஹாஜி சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா, ஜித்தா காயல் நற்பணி மன்ற செயலாளர் சட்னி செய்யித் மீரான், ஹாஜி எல்.டி.இப்றாஹீம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
டாக்டர் ஷாந்தா சிறப்புரை:
பின்னர், டாக்டர் சாந்தா உரையாற்றினார். புற்றுநோயை அதன் துவக்கத்திலேயே கண்டறிந்தால் அதுவும் குணப்படுத்தக் கூடியதே என்றும், புற்றுநோயில் பல வகைகள் உள்ளதால், அதுகுறித்து எதையுமறியாமல் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.
சமீபத்தில் காயல்பட்டினத்தில் மேற்கொள்ளப்பட்ட புற்றுநோய் பரவல் குறித்த தகவல் சேகரிப்பில் 40 பெண் தன்னார்வத் தொண்டர்கள் கலந்து கொண்டு 10 தினங்களில் சேகரித்த விபரம், சற்று முன் நடைபெற்ற மருத்துவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது அறிய வந்ததாகவும், அது தனக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்தியதாகவும், இது ஒரு மிகப்பெரிய விஷயம் என்றும் புகழ்ந்துரைத்து, இதனை முன்னின்று செய்தவர்களை தான் நன்றியுடன் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
அடையாறு புற்றுநோய் மையத்தின் சார்பில் நிரந்தர பதிவகம்:
புற்றுநோய் தடுப்பு முயற்சியில் அளப்பரிய பணிகளைச் செய்துள்ள CFFCயின் வேண்டுகோளை ஏற்று, அடையாறு புற்றுநோய் மையத்தின் சார்பில் காயல்பட்டினத்தில் புற்றுநோய் நிரந்தர பதிவகம் உருவாக்க அனைத்தும் செய்து தரப்படும் என்று அவர் தனதுரையில் அறிவித்தார்.
பின்னர் புற்றுநோய் குறித்த பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவரைத் தொடர்ந்து அடையாறு புற்றுநோய் மையத்தின் எபிடமோலஜி பிரிவு துறைத்தலைவர் டாக்டர் சுவாமினாதன் பொதுமக்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.
CFFC தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பல்லாக் சுலைமான் டாக்டர் சாந்தாவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
நிறைவாக, இலங்கை காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ நன்றி கூற, துஆ பிரார்த்தனையுடன் இரவு 09.00 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகள்:
இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த - பொதுமக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் சுமார் 550 பேர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத், அப்துல் வாஹித், ஹாஜி வி.ஐ.புகாரீ, ஹாஜி எல்.டி.இப்றாஹீம், ஹாஜி மண்டேலா நூஹ், ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், காழீ முஹம்மது நூஹ், எஸ்.கே.ஸாலிஹ், எம்.எம்.ஷாஹுல் ஹமீத், பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, பல்லாக் சுலைமான், கே.எம்.டி.சுலைமான் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இக்ராஃ கல்விச் சங்கம், கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங், ரியாத் காயல் நற்பணி மன்றம், தம்மாம் காயல் நற்பணி மன்றம், ஜித்தா காயல் நற்பணி மன்றம், கே.எம்.டி. மருத்துவமனை, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட், காயல்பட்டினம் வெல்ஃபர் ட்ரஸ்ட் ஆகிய அமைப்புகள் இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பளித்திருந்தன.
இவ்வாறு, CFFC சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |