செய்தி எண் (ID #) 7355 | | |
திங்கள், அக்டோபர் 10, 2011 |
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் அறிக்கை! |
செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 7277 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (56) <> கருத்து பதிவு செய்ய |
|
அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள காயல்பட்டின நகர்மன்றதிற்க்கான தேர்தல் குறித்து காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
அன்புள்ள காயல் மாநகரப் பெருமக்களே! வெளியூர், வெளிநாடுகளில் வாழும் காயல் வாசிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமதூர் உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில், ஊர் கட்சிகளிடையே போட்டி நிலவிய காலத்திற்குப் பின்னால், ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி இனி நமதூரில் தலைவராக வரக்கூடியவர் பொது வேட்பாளராக இருக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
சிறப்பான இந்த முடிவுக்குப் பிறகு முதல் முறையாக ஹாஜி S.S.ஷெய்கு அப்துல் காதர் (பாவலர் அப்பா) அவர்களும், அதன் பிறகு
ஹாஜி L.K. லெப்பைத்தம்பி அவர்களும் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, போட்டியின்றி தலைவராக வந்து சிறப்புற பணியாற்றினார்கள்.
பிறகு பல ஆண்டு காலம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல், அதிகாரிகள் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றது. அதற்குப் பிறகு 1986ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி ஹாஜி V.M.S. லெப்பை அவர்களைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தார்கள். ஆக 1986 வரை ஜமாஅத்துக்கள் தலைவரை தேர்வு செய்யாத நிலையில் ஊர் பெரியவர்கள் எடுத்த முடிவையே இந்த ஊர் ஏற்றுக் கொண்டது.
1991ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிறகு ரத்து செய்யப்பட்டு ஐந்தாண்டு காலம் அதிகாரிகள் ஆட்சியே நடைபெற்றது.
1996ம் ஆண்டு அரசு தேர்தலை அறிவித்து நமதூருக்கு பெண் தலைவர் வேட்பாளர் என குறிப்பிட்டது. உடனே ஜலாலியாவில், ஊர்
பெரியவர்கள் முன்னிலையில், ஜமாஅத் பிரதிநிதிகள் ஒன்றுகூடி ஹாஜ்ஜா K.M.E. நாச்சித்தம்பி அவர்களைத் தலைவராக தேர்வு செய்தார்கள்.
2001ம் ஆண்டு மீண்டும் பெண் தலைவி வேட்பாளர் என்று அரசு அறிவித்தது. அப்போது ஐக்கியப் பேரவை துவங்கிய காலம். இப்போது
போன்றே அப்போதும் பேரவை, ஜமாஅத் பிரதிநிதிகளை அழைத்து கலந்து பேசி ஹாஜ்ஜா A.வஹிதா B.Sc அவர்களை இவ்வூர் உள்ளாட்சி
மன்றத் தலைவராகத் தேர்வு செய்தது. புறநகர் பகுதியில் சகோதர சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி மட்டும் போட்டியிட்டார். அனைவரும் உழைத்து அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஹாஜ்ஜா A.வஹிதா B.Sc. அவர்களை வெற்றி பெறச் செய்தோம்.
பிறகு 2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர்கள் வாக்களித்து தலைவரைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 5வது வார்டில் கவுன்சிலராக வெற்றி பெற்ற, அல்ஹாஜ் வாவு S.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்களைத் தலைவராக்க வேண்டி ஏனைய கவுன்சிலர்களிடத்தில் ஐக்கியப் பேரவை விடுத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டதால் அவர்கள் தலைவரானார்கள்.
தற்போது (2011ம் ஆண்டு) பொதுத்தலைவர் பட்டியலில் இருந்த காயல்பட்டினத்திற்கு ஒரு ஆண் தலைவரைத் தேர்ந்தெடுக்க ஐக்கியப் பேரவை மேற்கொண்ட முயற்சிகளையும், திடீரெனப் பெண் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டதால், குறைந்த கால அவகாசத்தில் ஐக்கியப் பேரவை எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் தாங்கள் அறிவீர்கள்.
பேரவையால் 08.09.2011 அன்று ஜலாலிய்யாவில் ஏற்பாடு செய்யப்பட்டக் கூட்டத்தில் நமதூர் ஜமாஅத் பிரதிநிதிகள்கள் கலந்து கொண்டார்கள். முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. பிறகு அத்தீர்மானத்தின் அடிப்படையில் ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்புகளிலிருந்து தலைவர் தேர்வுக் குழுவிற்கு பிரதிகள் கோரப்பட்டது. அப்பிரதிநிதிகளின் பெயர்களை எழுத்து மூலமாக் தகவலாகத் தந்தார்கள்.
பிறகு (பெண்வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட நிலையில்) 26.09.2011 அன்று ஜலாலிய்யாவில் தேர்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் நகராட்சித் தலைவர் பொறுப்புக்கு ஹாஜ்ஜா L.S.M.முத்து மைமூனத்துல் மிஸ்ரியா, B.Com. அவர்கள் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆக இத்தேர்வு ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்புக்களின் தேர்வாகும்.
இதற்கு முன்னர் இவ்வூரில் பின்பற்றப்பட்ட நடைமுறையைத்தான் இப்போதும் நாம் பின்பற்றியுள்ளோம். மேலும் வேட்பளார் தேர்வில் வாக்கும் அளிக்காமல், கருத்துக்கூட தெரிவிக்காமல், அமைதியான பார்வையாளராக, கூட்ட ஒருங்கிணைப்பாளராக மட்டுமே ஐக்கியப் பேரவை நிர்வாகிகள் நடந்து கொண்டார்கள் என்பதற்கு வருகை தந்த தேர்வுக் குழுவினரே சாட்சி. தேர்வுக்குழு கூட்டத்திற்கு வருகைதர வாய்ப்பில்லாதவர்களுக்கு அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளே சாட்சி.
உண்மை நிலவரம் இப்படியிருக்க, கடந்த காலங்களில் பொது விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், பேரவை மீது தவறான எண்ணம் கொண்டுள்ள சில சகோதரர்கள் வதந்திகளை பரப்புவதும், எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதும் வருந்தத்தக்கது.
இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி இதற்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது வேட்பாளர்கள் போட்டியின்றி தலைவராக வந்திருக்கையில், தற்போது மட்டும் நம்மில் 5 பேர் தேர்தல் களத்தில் நிற்பது சரிதானா? இது நமது ஒற்றுமையை குலைக்காதா? வாக்குகள் சிதறுவதால் விரும்பத்தகாத விளைவுகள் உருவாகாதா? என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுகிறோம்.
பொது வேட்பாளரின் வெற்றி ஜமாஅத்துக்களின் வெற்றி. ஊரின் ஒற்றுமைக்குக் கிடைக்கும் வெற்றி. எனவே பேரவையோடு கருத்து வேறுபாடு உடையோர் அதை தற்காலிகமாவது ஒத்தி வைத்துவிட்டு, நமதூர் உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் நாம் இதுவரை கட்டிக்காத்த நடைமுறையை தொடர்ந்து அமுல்படுத்துவோம்.
உள்ளூரிலிருக்கும் வாக்காளர்கள் தேர்தல் நாளன்று தங்கள் குடும்பத்தினருடன் வந்து பொது வேட்பாளருக்கு பஸ் சின்னத்தில் வாக்களியுங்கள். வெளியூர், வெளிநாடுகளில் இருப்போர் தங்கள் இல்லத்தினருக்கு பஸ் சின்னத்தில் வாக்களிக்கத் தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறேம்.
எல்லாம் வல்ல இறவைன் நமது நன்னோக்கங்கள் நிறைவேற அருள்புரிவானாக!
ஆமீன், நன்றி, வஸ்ஸலாம்.
இவண்,
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
பிரபு M.A. சுல்தான், பொதுச் செயலாளர்.
|