வார்ட் 16 க்கான வேட்பாளர் தேர்வு குறித்து - புதுப்பள்ளி ஜமாஅத் சார்பாக செய்தி ஒன்று அக்டோபர் 3 அன்று வெளியிடப்பட்டது. அது குறித்து - 16ம் வார்டில் வேட்பாளராக போட்டியிட மனு செய்து வாபஸ் பெற்றுக் கொண்ட கலீபா செய்து முகம்மது லெப்பை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:-
கலீபா செய்து முகம்மது லெப்பை
(16ம் வார்டில் வேட்பாளராக போட்டியிட மனு செய்து வாபஸ் பெற்றுக் கொண்டவர்)
115, தைக்கா தெரு, காயல்பட்டணம்.
Mob : 9487049144
புதுப்பள்ளி ஜமாஅத்தார்களுக்கும், 16வது வார்டு வாக்காளர் பெருமக்களுக்கும் தெரிவிப்பது என்னவெனில், 04-11-2011 தேதியில் புதுப்பள்ளி சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் சகோதரர் ஜனாப். S.A.சாமு சிகாபுத்தீன் அவர்களை 16வது வார்டுக்கான புதுப்பள்ளி ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஒருதலைப்பட்சமாக அறிவித்து இருக்கிறார்கள். மேற்குறிப்பிட்ட ஜனாப் சாமு சிகாபுத்தீன் அவர்களை எந்த முறையில் தேர்ந்தெடுத்தார்கள் என்பதையும் அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.
உண்மையிலேயே நடந்தது என்ன?
விளக்கம் இதோ : -
கடந்த 11-09-2011 அன்று புதுப்பள்ளியில் ஜமாஅத் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்களில் 80% அதிகமானோர், நமது ஜமாஅத் தேர்தல் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்றும், சென்ற தேர்தலில் செய்தது போல ஜமாஅத் நடுநிலை வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இதை புதுப்பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறதெனில் ஜமாஅத் பொறுப்பில் பதவி வகிக்கும் ஒருசிலர் முற்கூட்டியே ஒரு வேட்பாளரை மனதிற்குள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதன்படி செயல்பட்டு இருக்கிறார்கள். ஆதலால் தான் ஜமாஅத்தில் உள்ள 80% பேரின் கருத்துக்கு செவிசாய்க்கவில்லை. பெரும்பாலானோரின் கருத்தை நிராகரித்து விட்டு தன்னிச்சையாக முடிவெடுப்பதற்கு ஜமாஅத் கூட்டம் எதற்கு? இதற்கு ஜமாஅத் பொறுப்பில் உள்ளவர்கள் கூறும் விளக்கம் என்ன?
மேலும் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்பட்டிருந்தால் அந்த தீர்மானங்கள் என்ன என்பதையும் அதற்கு பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டதா? விளக்கம் தரவும்.
இது நாள் வரை நமதூரில் உள்ள எந்த ஒரு ஜமாஅத்தும் (கோமான் ஜமாஅத் நீங்கலாக) காயல்பட்டணம் ஐக்கிய பேரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டு ஒரு பொது வேட்பாளரை அந்தந்த வார்டிலோ, ஜமாஅத்திலோ தேர்ந்தெடுக்கவில்லை. அப்படியிருக்க புதுப்பள்ளி ஜமாஅத் மட்டும் ஏன் ஆரம்பத்திலிருந்தே ஒரு பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது?
11-09-2011 அன்று ஜமாஅத் கூட்டம் நடப்பதற்கு முன் வேட்பாளர்களுக்கு ஒரு முச்சரிக்கை வந்தது. அதில் ஜமாஅத் தேர்ந்தெடுக்கும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஒரு ஜமாஅத்தின் பொதுக்குழுவோ அல்லது நிர்வாகக்குழுவோ கூடி விவாதிப்பதற்கு முன்பே முச்சரிக்கையில் கையெழுத்து வாங்குவது எந்த விதத்தில் நியாயம்? நாங்கள் ஏற்கனவே கூறியது போல ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை முதலிலேயே தேர்ந்தெடுத்து விட்டார்கள். அதனால் தான் அந்த முச்சரிக்கையில் அந்த வேட்பாளர் தைரியமாக கையெழுத்து போட்டிருக்கிறார். மற்ற மூவரும் (M.M.மஹ்மூது, கலீபா செய்யது முகம்மது லெப்பை, பாளையம் செய்து முகம்மது) மறுத்துள்ளார்கள். இந்த காரணத்திற்காக எங்களை ஜமாஅத்திற்குக் கட்டுப்படாதவர்கள் போல் சித்தரித்துள்ளார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்க விசயமாகும். ஜமாஅத்தின் கண்ணியத்தை எப்போதும் காப்பேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
கடந்த 26-09-2011 அன்று மாலை 5 மணிக்கு மேல் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்து 27-09-2011 அன்று காலை ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டது. 21-09-2011 அன்று நடந்த வேட்பாளர் நேர்காணலில் களத்தில் உள்ள ஐந்து வேட்பாளர்களில் மூன்று பேர் (M.M.மஹ்மூது, கலீபா செய்யது முகம்மது லெப்பை, பாளையம் செய்து முகம்மது) இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது மட்டுமல்ல ஓட்டெடுப்புக்கு முந்தைய நாள் 26-09-2011 அன்று புதுப்பள்ளி செயலாளர் ஜனாப் அஷ்ரஃப் அவர்களிடம் நான் உட்பட மற்ற இருவரும் கடிதம் கொடுத்தோம். அதில் இந்த ஓட்டெடுப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எங்கள் மனுவை திருப்பித் தரும்படியும் கேட்டிருந்தோம். மேலும் எல்லா ஜமாஅத்திலும் சம்பிரதாய முறைப்படி வேட்பாளர்கள் பள்ளிவாசலுக்கு மனு கொடுப்பது வழமையான ஒன்று. அந்த முறையையே நாங்களும் பின்பற்றினோம். எங்களைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கவில்லை. விஷயம் இப்படியிருக்க ஒரு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டு ஒரு சிலரின் விருப்பத்திற்கேற்ப தேர்தலை நடத்தி இருக்கிறார்கள்.
சுமார் 1300 ஆண், பெண் வாக்காளர்களைக் கொண்ட இந்த ஜமாஅத்தில் ஏறத்தாழ 100 பேர் மட்டும் வாக்களித்து இருக்கிறார்கள். அதாவது 8% பேர் வாக்களித்த நிலையில் மீதமுள்ள 92% பேர் இந்த வாக்கெடுப்பை விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
ஜமாஅத் பொறுப்பில் உள்ள ஒரு சில நபர்களின் யோசனையின் காரணமாகவே ஒரு தலைப்பட்சமாக பொது வேட்பாளரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இந்த முடிவுக்கு புதுப்பள்ளி ஜமாஅத்தார்களும், 16ம் வார்டு வாக்காளர்களும், வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இதே புதுப்பள்ளி ஜமாஅத்திற்கு கட்டுப்பட்ட மேலப்பள்ளியை உள்ளடக்கிய 15வது வார்டில் ஏன் இன்னும் ஒருமித்த கருத்தை இந்த ஜமாஅத்தில் உள்ளவர்களால் எட்டமுடியவில்லை? 15ம் வார்டில் பொது வேட்பாளரை ஏன் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இதற்கு ஜமாஅத் பொறுப்பில் உள்ளவர்கள் தரும் விளக்கம் என்ன?
முழுக்க முழுக்க ஐக்கிய பேரவையின் ஆலோசனையில் இயங்கும் புதுப்பள்ளி நிர்வாகம், நகர்மன்றத் தலைவி தேர்வுக்கு யாரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்தார்களோ, அவர்களுக்கு ஏன் இந்த ஜமாஅத் வேட்பாளர் ஓட்டு கேட்கவில்லை. இதிலிருந்து புதுப்பள்ளி நிர்வாகத்தின் இரட்டை நிலையை பொதுமக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
ஒரு சிலரின் சுயலாபத்திற்காகவும், தேர்தலுக்காகவும் ஜமாஅத்திற்குள்ளேயும், குடும்பத்திற்குள்ளேயும் பிரிவினை ஏற்படுத்த வேண்டாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பொது வேட்பாளரை தவிர மீதமுள்ளவர்களை எதிரிகள் போல் சித்தரிக்கும் கனவு பலிக்காது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் ஒற்றுமையை கடைபிடிப்போம்.
'ஒற்றுமை என்னும் கயிற்றை பலமாகப் பற்றிப் பிடியுங்கள்' என்ற இறைமறை வசனத்திற்கேற்ப நாம் நடப்போமாக ஆமீன்.
நன்றி. வஸ்ஸலாம்.
இப்படிக்கு,
கலீபா செய்யது முகம்மது லெப்பை.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |