தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலையொட்டி, காயல்பட்டினம் நகர மக்களுக்கு நகர்மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டலை ஏற்படுத்துவதற்காக துவக்கி செயல்படுத்தப்பட்டு வரும், MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பின் சார்பில், நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் 08.10.2011 (நேற்று) இரவு 07.30 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்திற்கு, ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
பின்னர் அனைவரையும் வரவேற்றுப் பேசிய கூட்ட தலைவரும், ‘மெகா‘ செய்தித் தொடர்பாளருமான கவிமகன் காதர், கூட்டத்தின் நோக்கம் குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் விளக்கிப் பேசினார். அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு:-
இத்தேர்தலில் நகர்மன்றத் தலைமைக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர்... ‘மெகா‘ நிலைபாட்டின் படி அவர்களுள் இருவரான - புத்தகம் சின்னத்தில் போட்டியிடும் ஆபிதா, பேருந்து சின்னத்தில் போட்டியிடும் முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா ஆகியோரை நகர பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து, அவர்களில் தங்கள் விருப்பப்படி ஒருவரைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டுவதன் மூலம், நகர பொதுமக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்ற நல்ல நோக்கத்திலேயே இக்கூட்டத்தை ‘மெகா‘ ஏற்பாடு செய்தது.
நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர்களாக இத்தேர்தலில் பெண்களே களத்தில் நிற்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், அவர்களைக் கொண்டு வெளியரங்கில் நிகழ்ச்சியை நடத்துவதை விட, உள்ளரங்கில் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று கருதிய ‘மெகா‘ இக்கூட்டத்தை நடத்திட ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் நிர்வாகத்திடம் இட அனுமதி கேட்டது. ஒருநாள் வரை அவகாசம் எடுத்துக்கொண்ட அவர்கள், தமது ஜமாஅத்தினருக்கு விருப்பமில்லாததால் இட அனுமதி தர இயலாது என்று தெரிவித்துவிட்டனர்.
பின்னர், ஊருக்குள் வேறு உள்ளரங்கங்கள் இல்லாத நிலையில், வள்ளல் சீதக்காதி திடலிலேயே இக்கூட்டத்தை நடத்திட தீர்மானித்து, அதற்கான காவல்துறை அனுமதியையும் முறையாகப் பெற்று, இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொள்ளச் செய்ய ‘மெகா‘ தீர்மானித்திருந்த நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர்களான சகோதரி ஆபிதா, சகோதரி முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா ஆகியோரிடம் அழைப்புக் கடிதத்தை அளித்து, இக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் குறித்து விளக்கப்பட்டதோடு, வேட்பாளர்களிடம் ‘மெகா‘ சார்பில் கேட்கப்படவுள்ள கேள்விகளுக்கு முற்கூட்டியே தேவையான விளக்கங்களை இருவரும் திரட்டி வரும் வகையில் கேள்விகளை முன்னரே தந்துவிடுவோம் என்றும் தெரிவித்தோம்.
அவர்களுள் சகோதரி ஆபிதா இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அவ்விடத்திலேயே சம்மதம் தெரிவித்தார். ஆனால் சகோதரி மிஸ்ரிய்யா அவர்களின் தரப்பில், ஒருநாள் அவகாசம் கேட்கப்பட்டு, அதன் பின்னர் வேட்பாளர் மிஸ்ரிய்யா அவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பவில்லை என அவரது கணவர் ஸலாஹுத்தீன் அவர்கள் கண்ணியமான முறையில் நம்மிடம் தெரிவித்தார்.
அதனையடுத்து, கலந்தாலோசனை செய்த ‘மெகா‘வினர், சிறப்பு அழைப்பாளர்களுள் வருபவர்களைக் கொண்டு கூட்டத்தைத் திட்டமிட்டபடி நடத்துவதென முடிவு செய்ததன் அடிப்படையிலேயே இப்போது இக்கூட்டம் இங்கே நடைபெற்றுக்கொண்டிறது. அதிலும், பெண்களுக்கென முழுக்க முழுக்க தனியிட வசதி செய்யப்பட்டு, அப்பெண்களுக்கு முன்னிலையிலேயே சகோதரி ஆபிதா அவர்களுக்கு மேடை அமைத்துக்கொடுக்கப்பட்டு, அங்கு மறைவிலிருந்தவாறே, தனது சுய அறிமுக உரையாற்றவும், ஆண்கள் பகுதியிலிருந்து ‘மெகா‘ நிர்வாகிகள் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
காயல்பட்டினத்தின் நகர்மன்றத் தலைவரை அனைத்து மக்களும் சுதந்திர உணர்வோடு, ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட வேண்டும் என ‘மெகா‘வின் நிலைப்பாடுதான் இக்கூட்டத்தை நடத்திட முக்கிய நோக்கமாக உள்ளது.
இது ஒருபுறமிருக்க, நகர்மன்றத் தலைமைப் பொறுப்பு நியாயமின்றி இம்முறை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து ‘மெகா‘ தொடர்ந்துள்ள வழக்கு வரும் 10.10.2011 அன்று விசாரணைக்கு வருகிறது. அவ்வழக்கில் வெற்றி கிடைக்க பொதுமக்கள் அனைவரும் துஆ செய்யுமாறு இக்கூட்டத்தின் மூலம் வேண்டுகிறோம்.
இவ்வாறு கவிமகன் காதர் தனதுரையில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘புத்தகம்‘ சின்னத்தில் போட்டியிடும் ஆபிதா, பெண்கள் பகுதியிலிருந்தவாறு அறிமுக உரையாற்றினார்.
பின்னர், ‘மெகா‘ உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் ஆண்கள் பகுதி மேடையிலிருந்து ‘மெகா‘ சார்பில் கேள்விகளைக் கேட்க, பெண்கள் பகுதியிலிருந்தவாறு வேட்பாளர் ஆபிதா பதிலளித்தார்.
நிறைவாக, ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் நன்றி கூற, ‘மெகா‘ உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாஜி காழீ முஹம்மத் நூஹ் துஆவுக்குப் பின், ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தின் வீடியோ ஒளிப்பதிவுகள் விரைவில், வலைதளங்களில் வெளியிடப்படும் என ‘மெகா‘ உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாமித் ரிஃபாய் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள், முஸ்லிமல்லாத மக்கள், ஆண்கள் - பெண்கள் என திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை, ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் தலைமையில், அதன் உள்ளூர் செயற்குழுவினரும், செய்யித் இப்றாஹீம், ஹாஃபிழ் இஸ்ஸத் மக்கீ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
படங்கள்:
‘மெகா‘ சார்பாக,
செய்யித் இப்றாஹீம்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம்.
ஒரு படம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (10.10.2011) |