தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலையொட்டி, காயல்பட்டினம் நகர மக்களுக்கு நகர்மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டலை ஏற்படுத்துவதற்காக துவக்கி செயல்படுத்தப்பட்டு வரும், MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பின் ஆலோசகர்களுள் ஒருவரான – சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஐக்கியமும், பாரம்பரியமும், பண்பாடும், நிறைந்த நமது காயல்பட்டிணம் வரலாற்று சிறப்பும், வளமான சரித்திரமும் நிறைந்தது. இதன் மகிமைகள் இன்று தமிழகம் மட்டுமன்றி பாரதம் கடந்தும் மணம் வீசிக்கொண்டிருக்கிறது. கடந்த ரமலானில் பல தகவல் தொடர்பு ஊடகங்கள் நமதூருக்கு வருகை தந்து ஊரின் அமைப்பு, கலாச்சாரம், உணவு வகைகள், தமிழ்மொழி வளம் போன்றவற்றைக் கண்டு அதிசயித்து பேசின, எழுதின.
ஒரு வருடத்திற்கு முன் சன் டிவி நமதூர் பற்றிய விரிவான செய்திகளை வெளியிட்டதனை நாம் அறிவோம். இவை அனைத்தும் நம் முன்னோர்கள் ஆற்றிய தூய சேவைக்கான அடையாளங்கள். ஆனால் இன்று அத்தாட்சிகள் படிப்படியாக அழிந்து வருவதை நாம் நிதர்சனமாக காண்கிறோம். இதற்கு ஓர் அத்தாட்சி - இன்றைய நகராட்சி தேர்தலில் நம் மக்களின் செயல்பாடுகள்.
நமதூரின் மீது உண்மையான அக்கறையும் அதன் முன்னேற்றத்தில் கூடுதல் ஆர்வமும் கொண்ட பெருமக்கள் இந்நிலைக் கண்டு மிகவும் நெஞ்சம் வருந்துகின்றனர். அது குறித்து விரிவாக பேசமுடியாது என்ற போதிலும், இன்றைய கால சூழ்நிலையில் நகராட்சி தேர்தலே ஓர் போர்க்களமாக இருப்பதால் அது குறித்து சுருக்கமாக இங்கே எழுதுகிறேன்.
நமதூரைப் பொறுத்தவரை அனைத்து ஜமாத்துகளின் கூட்டமைப்பாக இருப்பது ஐக்கிய பேரவைதான். ஊரின் பல்வேறு பிரச்சனைகளை சீர் செய்வதிலும், அதன் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவதிலும் பேரவை தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளது. பேரவையை தவிர்த்து வேறு பல அமைப்புகள் நற்காரியங்களில் ஈடுபடுவதும் அறப்பணி ஆற்றி வருவதையும் மறுக்கமுடியாது.
ஆனால் ஊரின் ஒட்டுமொத்த பிரதிநிதிகளை கொண்டதாக இருப்பது ஐக்கியப் பேரவை என்றால் அது மிகையாகாது. எனவே அதனைத் தழுவியே பெரும்பான்மையான மக்கள் இருக்கின்றனர் என்பதும் உண்மை. இந்நிலையில் நமதூர் நகராட்சியில் கடந்த கால செயல்பாடுகளை மனதில் கொண்டு, சீரான, முறையான, ஊழல் அற்ற திறமையான நகராட்சியினை எழுப்பிட பல சமூக ஆர்வலர்களும், MEGA, தேர்தல் வழிகாட்டி குழு போன்ற அமைப்புகளும் செயல்பட்டு கொண்டு இருப்பதும் வரவேற்கத்தக்கதே.
அதே சமயம் ஒட்டுமொத்த ஜமாத்துகளின் இணையமாகிய ஐக்கியப் பேரவையுடன் ஒன்றுபட்டு செயல்பட்டால் அதுவே வளமான, வலுவான ஓர் நகராட்சியை உருவகப்படுத்த துணையாக அமையும். ஐக்கியப் பேரவையின் சில செயல்பாடுகள் அதிருப்தி தரும் பட்சத்தில், அதை களைந்திட வெளியே நின்று குரல் கொடுப்பதைவிட உடன் இருந்து சுட்டிக் காட்டுவது அத்தவறை நீக்கிட இலகுவான வழியாகும். அதுவே சமயோசிதமும் ஆகும்.
பிரிவுகளை ஏற்படுத்தும், மனக் கசப்புகளை உருவாக்கும் எந்த ஒன்றையும் ஷரீஅத் ஆதரிக்காது. அந்த வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட பலர் வேட்பாளர்களாக நிற்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்றபோதும் அவ்வாறு நிற்பவர்களை ஆதரித்து கூட்டங்கள் நடத்துவது வரவேற்கத்தக்கதல்ல. இதனால் அவசியமற்ற பிரிவினையும், மனக்கசப்புகளுமே பெரிதாக மிஞ்சும். குறிப்பாக பெண்களை முன் நிறுத்தி மேடைகளில் அமர வைத்து அறிமுகம் நடத்துவது ஏற்புடையது அல்ல.
சரி போகட்டும்... தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள இந்நிலையில், விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல், நமதூரில் நல்லாட்சியை மட்டுமே மனதில் கொண்டு ஒருமித்த கருத்துடன் சுய கௌரவம் பார்க்காமல் ஒவ்வொரு நபரும், குறிப்பாக களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் சத்திய இஸ்லாம் காட்டிய வழியில் செயல்பட அன்புகனிந்து வேண்டுகிறேன்.
வல்ல அல்லாஹ் யாவருக்கும் நல்லருள் புரிவானாக...ஆமீன்...
இவ்வாறு அவர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |