இம்மாதம் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள காயல்பட்டின நகர்மன்றதிற்கான தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து - காயல்பட்டணம் நல அறக்கட்டளை (Kayalpatnam Welfare Trust) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தேர்விக்கப்பட்டுள்ளதாவது:-
கண்ணியமிகு காயல்மாநகர சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் ! (வரஹ்)
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 17-ந் தேதி அன்று நடைபெறவுள்ள நகராட்சிமன்ற தலைவர் தேர்தலில் காயல்பட்டணம் நல அறக்கட்டளை (KWT) -யாரை ஆதரிப்பது? என்ற நிலைப்பாட்டை அறிவிக்கும் முகமாக முறுவு ன் அதிகாரபூர்வ அறிக்கையாக இதை வெளியிடுகிறோம்!. நமதூர் மக்களின் நலன்கருதி சில உண்மை சம்பவங்களை விருப்பு வெறுப்பின்றி விவரித்துவிட்டு விஷயத்திற்கு வருகிறோம் இன்ஷா அல்லாஹ்!
மக்களே! நகராட்சி தலைவர் தேர்தலில் அனைத்து ஜமாஅத்துகளின் பிரதிநிதியாக நாங்கள் ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டோம் என இன்று பிரச்சாரம் செய்யும் நமதூர் ஐக்கிய பேரவையினரின் வேட்பாளர் தேர்வில் நடந்தது என்ன? அத்தேர்தல் உண்மையான முறையில் நடைபெற்றதா? என்பதை தெளிவாக அறிந்துகொள்ள இப்பிரசுரத்தை தயவு கூர்ந்து இறுதிவரை படியுங்கள்.
ஆலோசனைகள் இல்லாத ஆலோசனை கூட்டம்!
கடந்த மாதம் நகராட்சி தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டத்திற்கு ஐக்கிய பேரவை மூலம் KWT-யும் அழைக்கப்பட்டு நாம் கலந்து கொண்டோம். கூட்டத்தின் துவக்கத்தில் அல்லாஹ்வின் மீது ஆணையாக ஐக்கிய பேரவை அமைப்பில் எந்த உள்நோக்கமும் இல்லை என்ற பீடிகையுடன் நமதூரின் 25 ஜமாஅத்துக்களும்,18 அமைப்புகளும் வந்திருக்கின்றனர் என்றும் அழைக்கப்பட்ட மொத்தம் 111 உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்றும் அறிவித்தார்கள். ஆனால் சுமார் 200 பேருக்கு மேல் அக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். மீதியுள்ளவர்கள் எந்த அமைப்பை சார்ந்தவர்கள் என்பது அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.
ஆலோசனை கூட்டம் என்று எங்களை அழைத்துவிட்டு எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஏற்கனவே எழுதி வைத்திருந்த தீர்மானத்தை ஒருவர் வாசிக்க இடையே நாரே தக்பீர் அல்லாஹ் அக்பர்! என்று தக்பீர் முழங்கி தீர்மானம் ஏகமனதாக நிறைவேறிவிட்டதாக ஒரு பிரம்மையை ஏற்படுத்திவிட்டு கூட்டத்தை கலைத்தும் விட்டார்கள். – மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ்!!
ஏன் அந்த 25 உறுப்பினர்கள்?
கலந்துகொண்ட யாரையும் விவாதிக்க விடாமல் நமதூர் மக்கள் மீது திணிக்கப்பட்ட மேற்படி தீர்மானத்தில் நகராட்சி தலைவரை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு ஜமாத்திலிருந்து இரண்டு பேர்களும், ஒவ்வொரு அமைப்பிலிருந்து ஒரு நபரும்,ஐக்கிய பேரவை சார்பாக 25 உறுப்பினர்களும் சேர்ந்து முடிவெடுப்பார்கள் என்பது முக்கிய நிபந்தனையாகும். மேற்படி போலி தீர்மானத்தில் 25 ஐக்கிய பேரவை உறுப்பினர்கள் நியமத்தை நமது KWT ஏற்று கொள்ளவில்லை. மேலும்,நாங்களும் நமதூரின் மற்ற ஜமாத்தார்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய திருத்தப்பட்ட தீர்மானம் இருந்தால் மட்டுமே மேற்கொண்டு KWT கலந்து கொள்ளும் என்று ஐக்கிய பேரவைக்கு நாம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்து விட்டோம்.
கடந்த 26-09-2011 அன்று தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம். காயல்பட்டினம் நல அறக்கட்டளையிலிருந்து ஒரு நபரின் பெயரைச் சொல்லுங்கள் கடிதமும் தாருங்கள் என்று ஐக்கிய பேரவையிலிருந்து கேட்டார்கள். இவர்களின் கோரிக்கையை KWT பரிசீலித்து யார், யார் வேட்பாளர்கள் என்பதை தெரிந்த பின்னரே வாக்களிக்கும் நபரின் பெயரை சொல்வதென்று முடிவெடுத்து காலம் தாழ்த்தி வந்தோம். தொடர்ந்து எங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாக்களிப்பவரின் பெயரை கேட்டார்கள். வேட்பாளரின் பெயரைச் சொல்லாமல் ஓட்டளிப்பவரின் பெயரைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் அவர்களின் சூட்சமத்தை ஓரளவு புரிந்து கொண்டமையால் நாங்களும் கடைசி வரை வாக்களிப்பவரின் பெயரை சொல்லவும் இல்லை வாக்களிக்கச் செல்லவும் இல்லை.
நகர மக்களை முட்டாள்களாக்கிய செட்டப் தேர்தல்!
தலைவர் தேர்வு வாக்குபதிவு எப்படி நடந்த தென்றால் செப் 26-ந் தேதி பல ஜமாத்துக்கள்ää பல அமைப்புகள் அங்கத்தினர்கள் ஜலாலியா உள்ளே சென்றவுடன் வேட்பாளர்களை அறிவிக்கும் வரை எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளார்கள்? அவர்கள் யார் யார்? என்ற எந்த விபரமும் தெரியாமல் குறிப்பிட்ட சில ஜமாஅத்தார்கள் அங்கு சென்றுள்ளனர் அப்பாவித்தனமாக.. தலைவர் தேர்வுக்கு முந்தைய இரவில் தற்போதைய பேரவை வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள் என்று செய்யப்பட்ட பிரச்சாரம் மேற்படி ஜமாஅத்தார்களுக்கு மட்டும் தெரிவிக்கப்படவில்லை. அதோடு வாக்களிக்கும் கூடத்தில் நுழையும் பொழுதே மேற்படி நபருக்கத்தான் அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று வாசலிலேயே சொன்னார்களாம். இந்த ஊரரிந்த இரகசியத்தை நாமும் உறுதிப்படுத்திக் கொண்டோம்.
ஆக அன்றைய கூட்டத்தில் திடீரென்று ஐந்து வேட்பாளர்களை அறிவித்தவுடன் அதிர்ந்து போன அந்த ஜமாஅத் பிரதிநிதிகள் யாருக்கு வாக்களிப்பது? இவருக்கு போட்டால் நம் ஜமாத்து ஏற்குமா? அல்லது மறுக்குமா? என்ற குழப்பத்திலும் வாசலில் வேண்டியவர்களின் விடாபிடியான வற்புறுத்தலும் உள்ளத்தில் ஊசலாடியது.
சரி ஒருவருக்கு நம் இஷ்டப்படி வாக்களிப்போம் என்ற முடிவோடு தலைவர் தேர்தல் வாக்கெடுப்பு முடிந்திருக்கிறது. முடிவில் பேரவை வேட்பாளர் அவர்களுக்கு 40 வாக்குகள் சகோதரி வஹிதா அவர்களுக்கு 16 வாக்குகள் மற்ற இரு சகோதரிகளுக்கும் தலா 3 மற்றும் 2 என்ற வாக்குகள் கிடைத்து,தற்போதைய பேரவை வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டார்கள்.
வேட்பாளர்களை முதலிலேயே அறிவித்திருந்தால் அந்தந்த ஜமாத்தார்கள் கூடி நீங்கள் இவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் உங்கள் இஷ்டப்படி வாக்களிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருப்பார்கள். ஜனநாயக முறைப்படி தேர்வுநிலை சரி இல்லை என்ற காரணத்தினால் நமதூரின் 4 ஜமாத்துகளும், 3 அமைப்புகளும் ஐக்கியபேரவையின் போலி வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது தனி விஷயம். நகராட்சி தேர்தல் நடைபெறும் முன்னரே நமதூரில் நகராட்சி தலைவரை நாங்கள் தேர்ந்தெடுத்துவிட்டோம் என்ற கொக்கரிப்பவர்களின் லட்சனத்தையும் தலைவர் தேர்வு என்று அவர்கள் செய்த ஜனநாயகப் படுகொலையையும் மக்களே உங்களிடமே சமர்ப்பிக்கின்றோம். இனியும் இவர்களிடம் முட்டாள்களாவதா என்பதை மக்களே நீங்களே முடிவு செய்யுங்கள்.
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் உள்ள ஒரு ஊரில் ஒருசில ஜமாத்து கூட்டமைப்பு என்ற போர்வையில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கக் கூடிய செயலாகிய உண்மைக்கும், மனசாட்சிக்கும், நீதிக்கும், நேர்மைக்கும் மாற்றமான ஒரு தேர்தல் கூத்து நடைபெற்றிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. இவை அனைத்தையும் செய்துவிட்டுத்தான் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறோம் இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று ஐக்கிய பேரவை கூறுகிறது - என்ன வேடிக்கை இது!
பேரவையின் இரட்டை நிலை வேட்பாளரின் அட்டையிலுமா?
இறுதி கட்டமாக வேட்பு மனு தாக்கல் அன்று பேரவை வேட்பாளரான சகோதரி அவர்களுக்கு இரண்டு வாக்குரிமை அட்டை இருப்பது நமதூர் மக்களுக்கு பரவலாக தெரிந்ததை அடுத்து அவர்களது தாயார் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும் அவருக்கும் 2 வாக்காளர் அட்டை இருக்கின்றது என்று இணையதளங்கள் வாயிலாக வெளி வந்ததையும் நம்மால் எளிதில் மறந்து விட இயலாது. இந்த இரட்டை அட்டை விவகாரம் நடுநிலையானவர்களைக்கூட முகம் சுளிக்க வைக்கிறது.
ஜனநாயக முறைப்படி ஒரு அமைப்பின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக அந்த வேட்பாளருக்கு அடுத்துள்ள தகுதி படைத்தவரைத்தான் மனு செய்ய சொல்வார்கள். ஒரு வேளை அதிகார வேட்பாளர் தகுதி நீக்கம் ஆகிவிட்டால் அடுத்த தகுதியில் உள்ள மாற்று வேட்பாளர் தான் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மாறுவார். இதில் அடுத்த நிலை தகுதி படைத்தவர் சகோதரி வஹிதா அவர்களைத் தான் மாற்று வேட்பாளராக நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் பேரவையினரோ தங்கள் வேட்பாளரின் தயாரையே மாற்று வேட்பாளராக நிறுத்தினார்கள். அவ்வாறு நிறுத்தியதில் இவர்களுக்கு உள்நோக்கம் இல்லையாம். கேப்பையில் நெய் வடிகிறது என்று சொல்கிறார்கள் நாம் கேனயர்கள்தானே கேட்டுக் கொண்டேயிருப்போம்!
பாசமிகு காயல்வாசிகளே! இப்படி பேரவை சார்ந்த கசப்பான உண்மைகளை எவரும் மக்கள் மன்றத்திற்கு கொண்டுவந்தால் பார்த்தீர்களா ஐக்கியப் பேரைவையையே இவர்கள் எதிர்க்கிறார்கள் என்று பெரிய பில்டப்புடன் அவதூறு பிரச்சாத்தை ஆரம்பித்து விடுகின்றனர். நமது KWT அமைப்பை பொறுத்தவரை எந்த பேரவையையும், சங்கத்தையும் எதிர்க்கும் அவசியமோ அத்தகைய உள்நோக்கமோ என்றும் இருந்ததில்லை இன்ஷா அல்லாஹ் இனி இருக்கப்போவதுமில்லை. அதே நேரத்தில் உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டும் கடமையை நாங்கள் செய்யத் தவறுவதில்லை. அவ்வாறு சத்தியத்தை நிலைநாட்ட முயற்சிக்கும்போது ஏற்படும் இடர்களையும் சவால்களையும் கண்டு நாங்கள் என்றும் அஞ்சுவதுமில்லை – அல்ஹம்துலில்லாஹ்.
சூழ்ச்சியில் சிக்காத மக்கள் வேட்பாளர்!
அடுத்து மக்கள் வேட்பாளர் என்று அறியப்படும் சகோதரி ஆபிதா அவர்களின் நிலையை சற்று அலசுவோம். ஒரு அமைப்புக்கோ அல்லது சில ஜமாத்துக்கள் அடங்கிய கூட்டமைப்போ கேட்கும் உறுதிமொழி வார்த்தைகளில் உடன்பாடிலில்லை என்று சொன்னால் அந்த வேட்பாளர் தகுதியற்றவர் என்ற தீர்ப்பு எவ்வளவு புத்தி கூர்மை, எவ்வளவு நடுநிலைமை என்று சிந்திப்பீர்களாக!
மேலும் சகோதரி ஆபிதா அவர்கள் தான் ஏன் ஐக்கிய பேரவைக்கு கையெழுத்து இடவில்லை? என்ற தன்னிலை விளக்கத்தையும் நாம் படித்தோம். சகோதரி ஆபிதா அவர்களின் உணர்வுப்பூர்வமான வார்த்தைகளாவது :-
"இறைவன் மீது ஆணையாக எந்த ஒரு சூழ்நிலையிலும் சத்தியத்திற்கும், நியாயத்திற்கும், தர்மத்திற்கும் அனைத்து மக்களின் ஒருமித்த குரலுக்கும் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும், எந்த அதிகார போக்கிற்கும் அநீதிக்கும் ஊழலுக்கும் எதிராக என்றும் குரல் கொடுப்பேன் என்றும், எல்லாம் வல்ல இறைவனின் கிருபையோடு சமுதாய மக்கள், ஜமாஅத்தார்கள், சக உறுப்பினர்கள் என்று அனைவரின் மகத்தான ஒத்துழைப்போடு நல்ல திட்டங்களை செயல்படுத்தி சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்தி நமது ஊரை இன்ஷா அல்லாஹ் ஒரு முன்மாதிரி பட்டடினமாக மாற்றுவேன்" என்று உறுதி அளித்துள்ளார்.
இதுதான் சகோதரி ஆபிதா அவர்கள் செய்த தவறு போலும்.
நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
இறுதியாக நமது காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) நிர்வாகத்தின் முடிவை தெரிவிக்க வருகிறோம்!. தற்போது நகர்மன்ற தலைவர் தேர்தல் களத்தில் இருக்கும் வேட்பாளர்களாகிய அத்தனை சகோதரிகளும் எங்கள் உடன்பிறவா சகோதரிகளே! இதில் எள்ளளவும் எங்களுக்கு சந்தேகம் இல்லை. அவர்கள் அனைவரின் கண்ணியமும்,மரியாதையும் சக முஃமின் என்ற அடிப்படையில் எங்களுக்கு புனிதமானவை என்பதை மிகமிக அழுத்தமாக இங்கு பதிவு செய்கிறோம்.
அத்தகைய வேட்பாளர்கள் அனைவரிலும் தகுதியும்,நிர்வாகத் திறமையும்,அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாத துணிவும் இறையச்சத்தோடு கூடிய சுறுசுறுப்பும் தனது 12 வருடமாக மழலை பள்ளி நடத்தும் அனுபவமும் நகரில் பல மருத்துவ முகாம்களை முன்னின்று நடத்தியவரும்,சிறந்த சமூக சேவகி என்ற நற்பெயரை கொண்டவருமான அன்பு சகோதரியாகிய ஆபிதா அவர்களை ஆதரிப்பதென்று காயல்பட்டினம் நல அறக்கட்டளை KWT முடிவெடுத்திருக்கிறது என்பதை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜனநாயகம் மிளிர, பணநாயகம் வீழ்ந்திட சகோதரி ஆபிதா அவர்களுக்கு புத்தகம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் நமது அறக்கட்டளை சார்பில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
கண்ணியம் கலந்த கலாச்சார கருவூலமாகிய காயல்பதியின் மேன்மையை மெருகூட்டும் காயல் மாநகராட்சியின் ஓர் விடியல் மேற்கு திசையிலிருந்து உதிக்கட்டுமே! இன்ஷா அல்லாஹ்!!
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” அல் குர்ஆன் 3:26
இவண்
நிர்வாகம், காயல்பட்டணம் நல அறக்கட்டளை (KWT),
காயல்பட்டினம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
காயல்பட்டணம் நல அறக்கட்டளை
|