எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைமைக்குப் போட்டியிடும் வேட்பாளரான எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவை ஆதரித்து, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்ட நிகழ்வுகள் பின்வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் சார்பில், நகர்மன்றத் தலைமைக்கு ‘பேருந்து‘ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் 10.10.2011 திங்கட்கிழமை இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். ஐக்கியப் பேரவை பொருளாளர் ஹாஜி சேகு முஹம்மத் அலீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவுக்கு ஆதரவு கோரி நகரின் அரசியல் கட்சியினர், பகுதி பிரமுகர்கள், மார்க்க அறிஞர் என பலர் உரையாற்றினர்.
கருத்துரை:
துவக்கமாக. ஜெயலலிதா பேரவையின் நகரச் செயலாளர் ஹாஜி எல்.எஸ்.அன்வர் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பாகும். இதில் எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் நமது ஊர் கட்டுப்படும்.
இதையறியாமல் இன்று சில புதுப்புது இயக்கங்களை பல பெயர்களில் துவங்கி, ஊரில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்களின் இந்த முயற்சி எடுபடாது.
ஐக்கியப் பேரவையின் முடிவை மதித்து, எங்கள் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரான எங்கள் அம்மாவே எங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த நினைக்காதபோது, இவர்கள் ஊர் ஒற்றுமைக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு ஹாஜி எல்.எஸ்.அன்வர் தனதுரையில் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
தலைமைக்குக் கட்டுப்பட வேண்டியது மிகவும் அவசியம். இல்லையெனில் சமுதாயம் சீர்கெட்டு விடும். உஹதுப் போரில் நபிகளார் அவர்களின் கட்டளையைக் கவனத்தில் கொள்ளாமல் நபித்தோழர்கள் நடந்த காரணத்தால்தான் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இங்கே நமது ஐக்கியப் பேரவை பொது வேட்பாளராக எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவை நிறுத்தியுள்ளது. எதிரணியில் முக்கியமாகப் பேசப்படும் வேட்பாளர், தான் தலைமைப் பொறுப்பிற்குப் போட்டியிடவுள்ள செய்தியை அறிவித்ததுமே, ஐக்கியப் பேரவைக்கு அவர் விருப்ப மனு அளிக்க நான்தான் அவருக்கு அறிவுரையே வழங்கினேன்.
இவ்வாறு அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில், வேட்பாளருக்கு ஆதரவு கோரி பேசுமாறு நிகழ்ச்சி நெறியாளர் கேட்டுக்கொண்டார்.
இன்று தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் 1,32,467 பதவிகளுக்கு, 4,11,177 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது ஜனநாயக உரிமை.
19,646 பேர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுதான் ஊர் கட்டுப்பாடு. அந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டு வரத்தான் ஐக்கியப் பேரவை முயற்சி செய்துகொண்டிருக்கிறது.
நடப்பு உள்ளாட்சித் தேர்தலில், செல்வந்தர்கள் சிலரும், பொதுநலப் பணிகளில் ஈடுபடும் சிலரும் போட்டியிடுகின்றனர். உண்மையில் சந்தோஷப்படுகிறேன். ஆனால், ‘படிக்காத மேதை‘ காமராஜர் போல, எழுதப்படிக்கத் தெரியாத சிலரும் போட்டியிடுவதுதான் வியப்பாக உள்ளது. உண்மையிலேயே அவர்களும், காமராஜர் படிக்காதவராக இருந்தாலும் எப்படி தன்னலமற்று அரசியல் நடத்தினாரோ, அதுபோல மக்கள் நலப்பணிகளை செய்தால் அதுவும் சந்தோஷமே...
இவ்வாறு மன்னர் பாதுல் அஸ்ஹப் உரையாற்றினார்.
தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
ஐக்கியப் பேரவை பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆதரவளித்து எங்கள் கட்சியின் சார்பில் கையெழுத்திட்டதற்கு, எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் எங்கள் மாவட்டச் செயலாளர் மூலம் விளக்கம் கேட்டிருந்தார்கள். ஊர் கட்டுப்பாடு இங்கு உள்ளது. அதனை மதித்து நடக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளேன். அவர்களும் புரிந்துகொண்டார்கள்.
நமது ஐக்கியப் பேரவையின் இந்த அணியில் ஒற்றுமை உள்ளது, ஒருமைப்பாடு உள்ளது. எதிரணியை ஒரு சில கொள்கை குதர்க்கவாதிகள்தான் வழிநடத்தி வருகின்றனர். அவர்கள் மாற்று வேட்பாளருக்கு தவறான வழிகாட்டிக் கொண்டிருக்கின்றனர். நமதூர் வெப்சைட்டில் பல பொய்யான, அசிங்கமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை நான் அடையாளம் காட்டுவேன். அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி என்னால் பல விஷயங்களை தெரிவிக்க முடியும்...
இவ்வாறு அவர் உரையாற்றிக்கொண்டிருக்கையில், வேட்பாளரை ஆதரித்து மட்டும் உரையாற்றுமாறு நிகழ்ச்சி நெறியாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவருக்கு ஆதரவு கேட்டு தனதுரையை முடித்துக்கொண்டார் மு.த.ஜெய்னுத்தீன்.
அடுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. வேட்பாளர் மிஸ்ரிய்யாவுக்கு ஆதரவு கோரியதோடு அவர் தனதுரையை முடித்துக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஷாஜஹான் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
ஐக்கியப் பேரவையின் அரசியல் தந்திரம் தனித்துவம் வாய்ந்தது. அது நிறுத்தியிருக்கும் பொது வேட்பாளர் ஒரு நல்லவர், பொது நல ஆர்வலர். அவரை எதிர்த்து களம் கண்டிருப்போருக்கு அவர்கள் குடும்பத்திலேயே ஆதரவு கிடையாது.
ஓட்டுப் போடும் விஷயத்தில் மத்திய காயல் பகுதியினரை விஞ்சிட யாராலும் முடியாது. 10 நிமிடங்கள் போதும்... அவர்கள் பெட்டியையே நிறைத்து விடுவார்கள்...
இங்கே நாங்கள் உரையாற்ற முன்வந்தது வேட்பாளருக்கு ஆதரவு கேட்க அல்ல. அது அவர்களுக்கு தானாகவே கிடைக்கும். ஊரில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியதற்கு நன்றி தெரிவித்து பேசவே நாங்கள் வந்துள்ளோம்.
எதிரணியில் களம் காணும் வேட்பாளர்களே... இன்னும் கூட காலம் கடந்து விடவில்லை. யாருடைய தூண்டுதல்களாலோ நாங்கள் தவறான முடிவுகளை எடுத்துவிட்டோம் என்று வருத்தம் தெரிவித்து, போட்டியிலிருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவியுங்கள். உங்களை பேரவை மதிக்கும், இந்த ஊர் மதிக்கும்.
எதிரணியினரை தூண்டுபவர்கள் யார் யார் என்ற பட்டியல் எங்களிடம் உண்டு...
இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், நிகழ்ச்சி நெறியாளர் அவரிடம், வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு உரையாற்றச் சொன்னார். அவரும் ஆதரவு கோரி தனதுரையை முடித்துக்கொண்டார்.
அடுத்து, காயல்பட்டினம் கொம்புத்துறை என்ற கடையக்குடி பகுதி மக்கள் சார்பாக சாச்சா ஜோஸப் ராஜ் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.
அவர், காயல்பட்டினத்தில் மதுக்கடை, சினிமா தியேட்டர், காவல் நிலையம் இல்லை என்பது பல்லாண்டுகளாக உள்ள தனிச்சிறப்பு...
நான் கொம்புத்துறை ஊரைச் சார்ந்தவன். நாங்கள் குமரி மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். சில நேரங்களில், எங்கள் ஊரிலிருந்து பேருந்தில் இங்கு வந்து நள்ளிரவில் இறங்குவோம். எங்கள் இல்லத்திற்குச் செல்ல ஆட்டோ எதுவும் இல்லாத நிலையில், இங்குள்ள முஸ்லிம்கள் எங்களை தங்களது வாகனங்களில் இல்லம் வரை அழைத்துச் சென்று விடுவதை இந்நேரத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
இங்கே, அனைத்து ஜமாஅத் சார்பாக மிஸ்ரிய்யா என்ற பெண்மணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அனைத்து ஜமாஅத் சார்பாக அவர் தேர்வாகியிருப்பதே அவர் ஒரு நல்ல பெண்மணி என்பதற்கு போதுமான அடையாளமாக உள்ளது.
எங்கள் ஊர் சப்போர்ட் இந்த வேட்பாளருக்குத்தான்.
இவ்வாறு கடையக்குடியைச் சார்ந்த ஜோஸப் ராஜ் உரையாற்றினார்.
அடுத்து, சிங்கித்துறை என்ற கற்புடையார் பள்ளி வட்டம் சார்பில் தஸ்னேவிஸ் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.
எங்கள் சிங்கித்துறை பகுதியில் வாக்கு கேட்க இந்த வேட்பாளர் சார்பில் வந்தார்கள். அவர்கள் எங்கள் ஊருக்குள் வருவதற்கு முன்னர் எங்கள் தேவாலயத்தில் பங்குத்தந்தையைச் சந்தித்துதான் முதலில் வாக்கு கேட்டுள்ளார்கள். அதன் பின்னர்தான் எங்களிடத்தில் வந்துள்ளார்கள்.
அனைத்து ஜமாஅத்துகள் இணைந்து தேர்ந்தெடுத்துள்ள இந்த வேட்பாளர் நிச்சயம் நல்லவராகத்தான் இருப்பார். எனவே, அவரை ஆதரிப்போம்.
இவ்வாறு தஸ்னேவிஸ் உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, அதிமுக கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
இம்முறை காயல்பட்டினம் நகராட்சித் தலைவர் பதவிக்கு எங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆயத்தமாக இருந்தோம். எங்கள் மாவட்டச் செயலாளரும், மாநில அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
இந்நிலையில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததை அறிந்தோம். பெரும்பாலான அரசியல் கட்சிகள் இம்முடிவுக்கு ஆதரவு தெரிவித்து, தங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளதையும் அறிந்துகொண்டோம்.
பேரவை நிர்வாகிகளால் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்ததன் அடிப்படையில் எங்கள் மாவட்டச் செயலாளர் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அம்மாவிடம் தயக்கத்தோடு இதைத் தெரிவித்தார். அம்மாவும், ஊரே ஒன்றுபட்டு முடிவெடுத்துள்ள ஒரு விஷயத்தில் நாம் தலையிடத் தேவையில்லை... எனவே நம் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
எங்களுக்கு ஒரு கண் எங்கள் கட்சி என்றால் மற்றொரு கண் இந்த ஊர். எனவே, பேரவையின் இந்த பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கிறோம்.
ஒரு மாபெரும் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநில முதல்வருமான எங்கள் அம்மாவே எதிர்த்து ஆள் நிறுத்தாத நிலையில், சில பேர் இந்த பேரவையின் பொது வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடுவதைப் பார்க்கும்போது, எங்கள் அம்மாவின் பெருந்தன்மை எங்களை பெரிதும் மகிழ்ச்சி கொள்ளச் செய்துள்ளது.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாங்கள் இந்த ஊருக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய ஆவலாகவே உள்ளோம். என்றாலும், இரண்டாவது பைப்லைன் திட்டம், துணை மின் நிலையம், ஒருவழிப்பாதை, கடற்கரை அழகுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.
எனவே, நகர்மன்றத் தலைவருக்கு அடுத்த பதவியையாவது இந்த பேரவை எங்கள் கட்சிக்கு வழங்க வேண்டும்... அவ்வாறு வழங்கினால், அவரை முன்னிறுத்தி, செய்ய வேண்டிய வேலைகளை இன்னும் விரைவாக செய்திட இயலும்.
இவ்வாறு அதிமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உரையாற்றினார்.
அடுத்து பேசிய நிகழ்ச்சி நெறியாளர், அவரது பெருந்தன்மையான கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டிய நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலித்து முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.
பின்னர், ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் துணை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ தொலைபேசி வழியே உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
அவருடைய உரை ஒலிவாங்கியில் சரியாக கேட்கவில்லை என்று கூறி, இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
அடுத்து சமூக நல ஆர்வலர் காயல் மவ்லானா உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம் வேட்பாளர் அறிமுகம்தான். இங்கு பேரவையால் நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துமே ஜனநாயக அடிப்படையிலேயே நடைபெற்றுள்ளது.
அனைத்து ஜமாஅத்துகளிட்மும் கருத்து கேட்கப்பட்டு, முறையாக ஓட்டெடுப்பு நடத்திய பின்புதான் சகோதரி மிஸ்ரிய்யா நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, இந்த ஊர் மக்களின் ஒட்டுமொத்த தேர்வுதான் இந்த வேட்பாளர் தேர்வு என்பதை புறநகர் மக்களும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
ஐக்கியப் பேரவையின் இந்த பொது வேட்பாளரை எதிர்த்து தமிழக முதல்வரே தன் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தவில்லை. ஆனால் இங்கே சிலர் தூண்டுதல் காரணமாக சில வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். அவர்களை விட இவர்கள் அறிவாளிகள் என்று தங்களைத் தாங்களே நினைத்துக்கொண்டுள்ளனர்.
ஊரில் ஒரு பிரச்சினை என்றால் அவ்விடத்தில் ஐக்கியப் பேரவைதான் முன்னிற்கும். அதன் பேச்சு மட்டும்தான் எடுபடும். இதுதான் உண்மை.
இந்த வேட்பாளர் வென்றால் அது ஐக்கியப் பேரவைக்கு வெற்றி, இந்த ஊர் மக்களுக்கு வெற்றி. அல்லாஹ் காப்பாற்றட்டும்! முடிவு மாற்றமாக அமைந்துவிட்டால், அது பேரவைக்குத் தோல்வி... இந்த ஊருக்கும் தோல்வியாக அமைந்துவிடும்.
சரி, ஒருவேளை எதிர்த்துப் போட்டியிட்டவர் நகர்மன்றத் தலைவரானால், நாளை முதல்வரை எவ்வாறு அணுகுவார்? நீ யார் என்று அவர் கேட்டால், நான் ஊரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றவள் என்று சொன்னால், அம்மா அவரது கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள மாட்டார்களா?
எனவே, எதிரணியில் உள்ள சகோதரிகள் தயவுசெய்து நாங்க இப்ப வாபஸ் வாங்கிக்கிறோம் என்று சொல்லி போட்டியிலிருந்து விலகினால், உங்களை இந்தப் பேரவை மதிக்கும்... ஊரும் மதிக்கும்.
பாவம், இந்த வேட்பாளர்கள் அப்பாவிகள். சாதாரணமாக அரசியல் கூட்டங்களில் புதிதாக உரையாற்றும் ஒருவருக்கு 10 பேர் கை தட்டுவார்கள். பின்னர் 20, 30, 50, 100, 500 என்று கை தட்டு வந்துவிட்டால் அவருக்கு அரசியல் போதையாகிவிடும். அதுபோன்றுதான் இந்த அப்பாவி வேட்பாளர்களும் உள்ளனர்.
இனிப்பு என்று எழுதி நக்கிப் பார்த்தால் இனிக்காது. உண்மையான இனிப்பு ஐக்கியப் பேரவையிடம் உள்ளது.
நான் இந்த வேட்பாளர் மிஸ்ரிய்யாவுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்... நீங்கள் வெற்றி பெற்றால், பொறுப்புணர்ந்து. ஐக்கியக் பேரவைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
இந்த வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு உண்டு என்பதை வெளிக்காட்டுவதுதான் இந்தக் கூட்டம். இவர்களெல்லாம் விவரமற்றவர்களா...?
இவ்வாறு காயல் மவ்லானா உரையாற்றினார்.
அடுத்து, தே.மு.தி.க. கட்சியின் சார்பில் அதன் நகரச் செயலாளர் எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
எனக்கு முன் பேசியவர்கள் அனைத்தையும் பேசிட்டாங்க... நான் என் கட்சியின் நிலை பற்றி மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த ஐக்கியப் பேரவை பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக எங்களை அழைத்தது. நாங்கள் எந்த நிபந்தனையுமின்றி அவர்களது முடிவுக்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டுவிட்டு வந்தோம்.
எங்கள் கட்சியின் சார்பில் எங்கள் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தமிழகம் முழுக்க சுமார் ஒரு லட்சம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையிலும், இந்த ஊர் ஒற்றுமைக்கு மதிப்பளித்து இங்கு வேட்பாளரை நிறுத்தவில்லை.
பக்கத்திலுள்ள திருச்செந்தூர், ஆறுமுகநேரியில் கூட எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இங்கு மட்டும்தான் நிறுத்தப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ் உரையாற்றினார்.
அடுத்து, வேட்பாளர் மிஸ்ரிய்யாவின் சகோதரர் வழக்குறைஞர் எல்.எஸ்.எம்.ஃபைஸல் உரையாற்றினார்.
எங்கள் சகோதரி 25 ஆண்டுகளுக்கு முன்பு பி.காம். படித்து முடித்துவிட்டு, சமூகப்பணியாற்றத் துவங்கியவர். கிரண்பேடி உள்ளிட்ட பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, பொதுநலப் பணிகளாற்றியவர்.
அவரது கணவரும் பல்லாண்டுகளாக சமூக நலப்பணிகளில் உள்ளவர்.
அவரது மூத்த சகோதரர் வழக்குறைஞர் காதர் சாகிப், திருச்சியில் வழக்குறைஞராகவும், நோட்டரி பப்ளிக்காகவும் செயல்பட்டு வருகிறார்.
நான் 13 ஆண்டுகளாக வழக்குறைஞராக உயர்நீதி மன்றத்தில் பணியாற்றி வருகிறேன். மத்திய அமைச்சர் பி.சிதம்பரத்துடன் நல்ல தொடர்பு எனக்குண்டு. அவரது மனைவி நளினி சிதம்பரத்திடம் ஜூனியராக பணியாற்றியுள்ளேன்.
எங்களுக்கு முன்னாள் - இந்நாள் அமைச்சர்களோடெல்லாம் நல்ல அறிமுகம் உள்ளது. இந்த தொடர்புகளைப் பயன்படுத்தி நமதூருக்குத் தேவையான அனைத்து நல்லவற்றையும் எங்களால் செய்ய இயலும்.
இவ்வாறு வழக்குறைஞர் எல்.எஸ்.எம்.ஃபைஸல் உரையாற்றினார்.
அடுத்து, சென்னையிலுள்ள காயல்பட்டினம் ஐக்கிய சங்கத்தின் செயலாளர் ஏ.கே.பீர் முஹம்மத் உரையாற்றினார்.
நான் இந்த ஐக்கியப் பேரவையின் வேட்பாளருக்காக சென்னையிலுள்ள காயலர்களிடம் வாக்கு சேகரித்தேன். அவர்களெல்லாம் நல்ல ஆதரவு தெரிவிக்கின்றனர்.
நமதூருக்கு துணை மின் நிலையம் அமைக்க இந்த ஐக்கியப் பேரவை நிதி வசூல் செய்தது. சென்னையில் நான் வசூலித்தேன். இந்த பேரவை, வேட்பாளர் மிஸ்ரிய்யா மூலம் ஊருக்கு நிறைய செய்யவுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். அடுத்து கருத்து தெரிவித்த நிகழ்ச்சி நெறியாளர், இந்த துணை மின் நிலையத்திற்கு இடம் வாங்குவதற்காக இந்த பேரவையிலுள்ளவர்கள் தம் பங்கில் பல லட்சங்களையும் தந்து, சுமார் 25 லட்சம் ரூபாயை திரட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இப்படியொரு அமைப்பு இருந்தால்தானே இதையெல்லாம் செய்ய இயலும்? என்றார்.
அடுத்து, மார்க்க அறிஞர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தின் நோக்கம் குறித்து முன்னர் பேசிய அனைவரும் தெரிவித்துள்ளனர். நான் ஒற்றுமை குறித்து உரையாற்ற வந்துள்ளேன்.
ஒற்றுமை நமது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒன்று. ஒற்றுமையைப் பேணுவதால் நமது கண்ணியம் காக்கப்படும்... பெரியவர்களுக்குக் கட்டுப்படுவதும், அவர்களை முந்திக்கொண்டு நாம் பேசாதிருப்பதும் நமது மார்க்கம் நமக்கு வலியுறுத்திய அம்சங்கள்...
ஒற்றுமைக்கு இணக்கமாக செயல்படக் கூடியவர்களுக்கு நன்மைகள் உள்ளதைப் போல, அதற்கெதிராக செயல்படுவோருக்கு கடும் தண்டனையும் உள்ளது. அவர்கள் அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் மாறு செய்தவர்களாவார்கள்...
என மவ்லவீ பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளைத் தொகுத்து வழங்கி உரையாற்றினார்.
நிறைவாக, நிகழ்ச்சி நெறியாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
மூத்தோர் சொல்லும், முதுநெல்லிக்கனியும் முதலில் கசக்கும், பின்பு இனிக்கும்... என்பது முதுமொழி.
இந்த ஐக்கியப் பேரவையின் தினசரி நிகழ்வுகளில் நான் தொடர்புடையவன் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். அது செய்யும் நல்லவற்றில் நானும் இணைந்து பணியாற்றுவேன். எனக்கு கருத்து வேறுபாடுள்ள அம்சங்களில் ஒதுங்கிக்கொள்வேன்.
இன்று இந்தப் பேரவையில் செயலாளராகப் பணியாற்றும் ஹாஜி பிரபு சுல்தான் அவர்களையே நான்தான் முன்மொழிந்தேன். அவர் மறுத்தும் கேட்காமல், ஹாஜி எஸ்.அக்பர்ஷா அவர்கள், இப்பொறுப்பை தாங்கள்தான் ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, அன்று முதல் இவர்கள் அப்பொறுப்பில் உள்ளார்கள். சில நேரங்களில் அவர்களே, “நீதான்ப்பா என்னை இப்டி வம்புல மாட்டி விட்டுவிட்டாய்!” என்று சொல்வதுண்டு.
பேரவை நிர்வாகம்:
இந்தப் பேரவை அனைவருக்கும் சொந்தம். இதன் நிர்வாகம் ஓர் அழகிய கட்டமைப்பில் அமைந்ததாகும். நம் நகரின் ஒவ்வொரு ஜமாஅத்துக்கும் இரண்டு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் தேர்வில்தான் இந்த நிர்வாகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், கருத்து வேறுபாடுகளை மனதில் வைத்துக்கொண்டு, முக்கியமான நேரங்களில் கோட்டையை விட்டுவிடக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தப் பேரவையின் நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழுவில் இடம்பெறாத ஒரு பள்ளியின் நிர்வாகிகளுள் முக்கியமான ஒருவரை நான் நேரில் சந்தித்து, பிரச்சினையை பேசித் தீர்ப்போம், வாருங்கள்... நானே மீடியேட்டராக இருந்து சரிசெய்ய முயற்சிக்கிறேன் என்று தெரிவித்தேன்.
அதற்கு அவர், “இந்த தலைமையின் கீழ், இந்த நிர்வாகத்தின் கீழுள்ள பேரவையால் எடுக்கப்படும் எந்த முடிவிலும் எங்களுக்கு உடன்பாடில்லை” என்றார். இது எனக்கு மிகுந்த வியப்பையளித்தது.
கருத்து வேறுபடுவோர்:
கருத்து வேறுபாட்டால் பேரவையை விட்டும் பிரிந்து நிற்கின்றனர் ஒரு சாரார்...
பேரவையில் நிர்வாகச் சீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி விலகி நிற்கின்றனர் இன்னொரு சாரார்...
வதந்திகளை மட்டுமே நம்பி பிரிந்து நிற்கின்றனர் மற்றொரு சாரார்... வதந்திகள் என்றுமே ஆதாரங்களாகி விடாது.
சரி, பேரவையின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து சில கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
நமதூரில் வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் இப்பேரவை எந்தத் தலையீட்டையும் வைக்க விரும்பவில்லை.
வலைதள ஆக்கங்கள்:
நகர்மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் 25 பேர் மேல் நியமனம் என்பது தீர்மான முன்வடிவு மட்டுமே! ஆனால் அதை விமர்சித்து வெப்சைட்டில் பக்கம் பக்கமாக எழுதினார்கள்.
அந்த 25 பேர்:
கடந்த காலங்களில் எப்படி நமதூர் பெரியவர்கள் செயல்பட்டார்களோ அந்த அடிப்படையில்தான் இந்த 25 நகரப் பிரமுகர்களும் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு வாக்குரிமை இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது. ஓட்டே இல்லை... பின்பு ஏன் உள்ளே வரனும்? என்று பிறகு கேட்டார்கள். நாம் இதற்கு என்ன சொல்வது?
இதோ இப்போது துணை மின் நிலையத்திற்காக வசூலிக்கப்பட்ட 25 லட்சம் ரூபாயில் பெரும்பாலான தொகைகளைத் தந்து உதவிய அந்தப் பெரியவர்களை மேடையில் இதுபோன்று வைத்து அழகு பார்ப்பது கூடவா தப்பு?
முச்சரிக்கை:
அடுத்து முச்சரிக்கையை ஏதோ அடிமை சாசனம் எழுதிக் கேட்டது போல எழுதி முடித்தார்கள். பேரவைக்கு விருப்ப மனுவை அளித்தால், அதைப் பேரவைதான் பரிசீலிக்கும். அதன் முடிவுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். இதில் என்னங்க தப்பு? இதில் விருப்பம் இல்லையேல் மனு கொடுக்கவே கூடாது.
எதிரணியில் நிற்கும் வேட்பாளர் தனது கடிதத்தில், “வேறு ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் எனது எண்ணங்கள் அப்படியாகிவிடும், இப்படியாகிவிடும்” என்று தெரிவித்திருக்கிறார்.
நம்முடைய வேட்பாளர் மிஸ்ரிய்யா அவர்களும் பேரவைக்கு விருப்ப மனு கொடுத்தார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பும் நான் விருப்ப மனு அளித்தேன். அன்று என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. இன்றாவது என்னைத் தேர்ந்தெடுங்கள் என்று உரிமையோடு கேட்டுள்ளார்.
நாச்சித்தம்பியை கொண்டு வந்துவிடுவாங்க... வஹீதாவை கொண்டுவந்து விடுவாங்க... என்றெல்லாம் பல பேச்சுக்கள்...
“ஓட்டெடுப்பு உண்டா? என எழுத்தில் தந்தால்தான் நாங்கள் விருப்ப மனு தருவோம்” என்று ஒரு வேட்பாளர் தெரிவித்தார். “நீங்கள் விருப்ப மனு தரவும் வேண்டாம்... நாங்கள் அதைப் பரிசீலிக்கவும் தேவையில்லை” என்று நாங்கள் தெரிவித்துவிட்டோம்.
கையெழுத்திட மறுத்த எதிரணி வேட்பாளரிடம் கையெழுத்தைப் பெறுவதற்காக இரண்டு நாட்கள் நானே அலைந்தேன்... அவர் சார்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் மூலம் அணுகினோம்... அவரது நெருங்கிய தோழியர் மூலம் அணுகினோம். எதற்குமே அவர் வளைந்து கொடுக்கவில்லை.
நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் தேர்வுக் கூட்டம் மாலை 06.00 மணிக்கு நடக்கிறது என்றால், 05.45 மணிக்கு அவர் ஒரு கடிதம் கொண்டு வந்தார். அதிலும் தான் ஏன் கையெழுத்திடவில்லை என்பதற்கான தன்னிலை விளக்கத்தை மட்டுமே கூறியிருந்தார்.
நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் தேர்வு:
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில், “பேரவையின் முச்சரிக்கையில் கையெழுத்திட்டவர்கள் 4 பேர். கையெழுத்திடாதவர்கள் 3 பேர்... அனைவரின் பெயர்களையும் வாக்கெடுப்பில் சேர்க்கலாமா? அல்லது கையெழுத்திட்டவர்களின் பெயர்களை மட்டும் பரிசீலனைக்கு எடுக்கலாமா?” என்று அக்கூட்டத்தை நெறிப்படுத்திய நான் கேட்டேன். அனைத்து ஜமாஅத்தாரும் ஒருமித்து, “கையெழுத்திட்டவர்களை மட்டுமே பரிசீலிக்க வேண்டும்” என்றனர். இருந்தும் நான், “இதில் மாற்றுக்கருத்து உள்ளதா?” என்று கேட்டேன். ஐந்து நிமிடங்கள் வரை மவுனமே நீடித்ததால், “உங்கள் அமைதியை அனுமதியாக எடுத்துக்கொள்கிறேன்” என்று கூறி, பின்புதான் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அங்கு கூடியவர்களில் ஒரு ஜமாஅத்தின் பிரதிநிதி மட்டும், பரிசீலனைக்கு எடுக்கப்படும் வேட்பாளர்களின் முழு விபரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதையும் செய்தோம்...
இவையனைத்தையும் நேரடியாகக் கண்ட பலர் இங்கே சாட்சிகளாக இருக்கிறீர்கள். வராதவர்களுக்கு வீடியோ பதிவு ஆதாரமாக உள்ளது.
இதே முச்சரிக்கையில் கையெழுத்திட்ட வஹீதா அம்மா அவர்கள் எவ்வளவு கண்ணியமாக ஒதுங்கிவிட்டார்கள்...?
“62 பேர் மட்டும்தான் ஊர் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்களா...?” என்று ஒரு கேள்வி. பின்ன எப்படித்தான் செய்ய வேண்டும்? வந்து சொல்லுங்களேன்...
நான் இந்த ஐக்கியப் பேரவை நிர்வாகிகளை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த தேர்தலில் இதுபோன்று எந்த நடவடிக்கையிலும் இறங்காதீர்கள்... நீங்கள் எதைச் செய்தாலுமே அதை விமர்சித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற வேதனையால்தான் இதைத் தெரிவிக்கிறேன்.
தாய் - மகள் போட்டி:
“தாய் - மகளை எதிர்த்துப் போட்டி” என்று வெப்சைட்டில் கருத்து எழுதியிருக்காங்க... எல்லாத்தையுமே திறந்தா சொல்ல முடியும்? வாக்குச் சாவடியில் அதிக முகவர்களை வைத்துக்கொள்வதற்காக செய்யப்படும் சில உள்நடவடிக்கைகள்தான் இவை. “ஏன், அதற்கு இரண்டாவது இடத்தில் வந்தவரை வைத்திருக்கலாமே...?” என்று ஒரு கேள்வி. ஒருவேளை அவர் வாபஸ் பெறாமல் விட்டுவிட்டால் வாக்குகள் பிரிந்துவிடுமே என்ற அச்சம்தான் அதற்குக் காரணம்.
இதையெல்லாம் திறந்து சொல்லவே தயக்கமாக உள்ளது. வெப்சைட்டில் திரித்து எழுதி விடுகிறார்கள். இங்கேயும் கூட, அருகிலேயே அமர்ந்திருக்கிறார்கள்...
வேட்பாளருக்கு 2 ஓட்டு என்று வெப்சைட்டில் கேலி, கிண்டல், நக்கல்... “இப்பவே தலை சுத்துது” என்று ஒருவர் கமெண்ட் அடிக்கிறார்... இவர்கள், இந்த செய்திகள் மற்றும் கமெண்ட்ஸ் மூலம் என்னதான் சொல்ல வர்றாங்க...?
ஆனால், கடந்த 30 வருடங்களுக்கு முன்பிருந்த இளைஞர்களை விட இன்றுள்ள இளைஞர்கள் நல்ல விவரமானவர்கள்... அவர்கள் வசிக்கும் பகுதிகளிலெல்லாம் காயல் நல மன்றங்களை நிறுவி, அதன் மூலம் பல நல்ல சேவைகளைச் செய்து வருகிறார்கள்.
அவர்களிலேயே சிலர் ஆர்வக் கோளாறு காரணமாக வேறு விதமாகவும் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு நான் அறிவுரை சொல்லும் அளவுக்கு வயதும், தகுதியும் எனக்கு இருப்பதாகக் கருதினால், தயவு செய்து பெரியோரின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுங்கள்... இன்னும் கூட காலம் உள்ளது. உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்துகொள்ளுங்கள்.
ஹாஜி அக்பர்ஷாவின் நிலைப்பாடு:
இந்த ஐக்கியப் பேரவையின் ஆலோசனைக் குழுவிலுள்ள ஹாஜி அக்பர்ஷா அவர்கள், இந்த வேட்பாளர் தேர்வில் உடன்பாடு இல்லாதவர் என்பது போல செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவர்கள், இந்த வேட்பாளருக்கு தான் முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக இக்கூட்டத்தில் பதிவு செய்யுமாறு தொலைபேசியில் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்.
ஐக்கியப் பேரவையின் இந்த நடவடிக்கைகள் முடிவல்ல, முயற்சி மட்டுமே! உங்களை நான் மன்றாடி, மனம் வருந்திக் கேட்டுக்கொள்கிறேன்... தயவுசெய்து ஊர் மானத்தைக் காப்பாற்றுங்கள்...
இவ்வாறு காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் உரையாற்றினார்.
பின்னர், வரும் 12ஆம் தேதி, வேட்பாளர் மிஸ்ரிய்யா மற்றும் ஆலிமாக்கள் கலந்துகொள்ளும் பெண்கள் கூட்டம் ஜலாலிய்யாவில் நடைபெறும் என அறிவிப்புச் செய்யப்பட்டது.
நிறைவாக, ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் துஆவுக்குப் பின் ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |