காயல்பட்டணம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில், 12.10.2011 அன்று இரவு 7.00 மணிக்கு, வாக்குக் கேட்கும், மகளிர் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் தேர்வு செய்யப்பட்ட நகர்மன்ற தலைமை பொறுப்புக்கான வேட்பாளர் ஹாஜ்ஜா மிஸ்ரியா B.Com. நிகழ்த்திய உரை வருமாறு:
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வை போற்றியவளாக அகிலத்தின் தலைவர் அண்ணல் (நபி) ஸல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்தும், ஸலாமும் கூறியவளாக என் அறிமுக உரையை ஆரம்பம் செய்கின்றேன்.
இந்த இனிய மாலைப் பொழுதில், நடைபெறுகின்ற இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தி வரும் மதிப்பிற்குரிய ஹாஜ்ஜா M.E. அஹமது ஆயிஷா அவர்களே, முன்னிலை வகிக்கக்கூடிய நகரின் ஆலிமாக்களே, ஹாபிழாக்களே, நகரின் அனைத்து பெண்கள் தைக்கா மற்றும் பெண்கள் மதரஸாக்களின் நிர்வாகிகளே, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் பொறுப்பாளர்களே, நகரின் அனைத்து ஜமாஅத்தின் பொறுப்பாளர்களே, பொதுநல அமைப்புகளின் பொறுப்பாளர்களே, மார்க்க அறிஞர்களே, சான்றோர்களே, எனதருமை தாய்மார்களே, சகோதரிகளே, பன்னெடுங்காலமாக பேணி காக்கப்பட்டு வரும் இந்நகரின் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் காக்கும் வகையில் இங்கு குழுமியிருக்கின்ற காயல்பதியின் பெருமக்களே! உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த ஸலாத்தினை உரித்தாக்கி கொள்கின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
பாரம்பரியமிக்க இவ்வூரின் நகராட்சித் தலைவர் பொறுப்புக்கு என்னை பொது வேட்பாளராக தேர்ந்தெடுத்தமைக்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தார் சார்பாகவும் இந்த ஊரின் அனைத்து ஜமாஅத்துக்களுக்கும், பொதுநல அமைப்புகளுக்கும், அரசியல் இயக்கங்களுக்கும், ஆதரவு நல்கி வரும் நமதூர் மற்றும் சுற்றுவட்டார ஊர் மக்களுக்கும் மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்ஹாஜ் அல்ஹாபிழ் L.M.K. செய்யிது மஹ்மூது, ஹாஜ்ஜா சோனா. நபீஸத் தாஹிரா தம்பதியரின் ஏக புதல்வியாகிய நான் ஒரு B.Com. பட்டதாரி. இளமை பருவம் முதலே கல்வியிலும், பொது சேவையிலும் ஆர்வம் கொண்டதாலும், எனது பெற்றோரின் ஆக்கமும், ஊக்கமும் எனக்கு உறுதுணையாக இருந்ததாலும், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே மகளிர் அமைப்புகளில் பங்கேற்று பொது சேவை புரிய ஆரம்பித்தேன்.
Inner Wheel, Lions Club, Round Table, Rotary Club, Exnora International போன்ற பல்வேறு பொது சேவை அமைப்புகளுடன் இணைந்து பல திட்டங்கள் அமுலாக உழைத்திருக்கிறேன். இந்தியாவின் முதல் பெண் IPS அதிகாரியும், இன்றும் பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருபவருமான, திருமதி கிரண் பேடி, IPS அவர்களுடனும், பல IAS, IPS, IFS, IRS அதிகாரிகளுடனும் இணைந்து பல்வேறு பொதுசேவைகளை (நான் கல்வி பயின்ற திருச்சி மாநகரத்தில்) ஆற்றியுள்ள அனுபவம் எனக்கு உண்டு. அவைகளை விளம்பர வெளிச்சமின்றி செய்து வந்துள்ளேன்.
பொதுச்சேவையில் எனக்குள்ள ஆர்வத்தால் பத்து ஆண்டுகளுக்கு முன்னே, ஊரில் தலைவர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்க ஐக்கியப் பேரவைக்கு மனு செய்தேன். அப்போது ஊரின் பெரியவர்கள் என்னை அழைத்து, சகோதரி A. வஹிதா அவர்களை தலைவராகத் தேர்வு செய்திருப்பதாகவும், வரும் காலங்களில் இறைவன் நாடினால் வாய்ப்பு வரும் என சொல்லி எனது மனுவை வாபஸ் பெறச் சொன்னார்கள். நான் சிறிது கூட தயங்காமல் மகிழ்ச்சியுடன் ஊர் பெரியவர்கள் மற்றம் ஜமாஅத்தார்கள் எடுத்த முடிவை ஏற்றுக் கொண்டு எனது விருப்பமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டேன்.
இப்போது கூட வேறு ஒருவரை ஊர் ஜமாஅத்துக்கள் தேர்ந்தெடுத்து இருந்தால், நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு இருப்பேன். உறுதிமொழிப்படிவத்தில் அவ்வாறே கையெழுத்திட்டேன். தற்போது இறைவன் நாட்டப்படி ஊர் ஜமாஅத்துக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் என்னை தலைவர் பொறுப்புக்கு பொது வேட்பாளராகத் தேர்வு செய்திருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
நமது புறநகர் பகுதியில் சகோதர சமுதாயத்தினரும் மனமுவந்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். இதனடிப்படையில் அனைத்து சமுதாயத்தினரையும் உங்களையும் நேரில் சந்தித்து வாக்குகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கால அவகாசம் குறைவாக இருப்பதால் உங்களில் சிலரை நான் நேரில் சந்தித்து வாக்கு கேட்க முடியாமல் போகலாம். தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள். நான் வெற்றி பெற்றால் நகராட்சி வரம்புக்கு உட்பட்ட பணிகள் எவையெல்லாம் உண்டோ அவைகளை தடையின்றி நிறைவேற அயராது உழைப்பேன்.
அனைத்து ஜமாஅத்தார்களின் ஆலோசனைகளைப் பெற்று, ஊர் மக்களின் முழு ஆதரவுடன் நமதூரின் இரண்டாவது குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தி, சீரான குடிநீர் வினியோகம் கிடைக்க முனைந்து போராடுவேன். அமையவிருக்கும் துணை மின் நிலையம் மூலம் நமதூரில் மின் பற்றாக்குறை தீரும் என நம்புகிறேன். அதன் மூலம் இன்னும் அதிகமான தெரு மின் விளக்குகள் அமைக்க முயல்வேன். சாலை வசதிகள் சீராக அமைய பாடுபடுவேன்.
சரித்திரப் புகழ் கொண்ட காயல்பதியை எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் முதன்மை நகராட்சியாக ஆக்குவதற்கு அமைச்சர் பெருமக்கள,
அரசு துறை அதிகாரிகள், நமதூர் பெரியவர்கள் மற்றும் உங்கள் அத்துணை பேருடைய ஆதரவுடனும் செயல்படுவேன். இந்நகரின் வளர்;ச்சிக்கு அரும்பாடுபடுவேன்.
We do what we say. We say what we do! சொன்னதைச் செய்வோம்! செய்வதையேச் சொல்வோம்!!. பொய்யான வாக்குறுதி தந்து உங்களை ஏமாற்ற விருப்பவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் உங்களுடைய ஆதரவுடன் வெற்றி பெற்றால், எனது குடும்பத்தில் எந்த ஒரு தனிநபரது தலையீடும் நிர்வாகத்தில் இருக்காது என உறுதி கூறுகிறேன். தூய்மையான நிர்வாகத்தை தருவேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.
எனது கணவர், ஹாஜி N.T. அஹமது ஸலாஹுத்தீன் அவர்கள் அல் அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். பல்வேறு இரத்தத்தான முகாம்கள், ஏழை எளிய நலிவடைந்தோர்க்கு அரசு உதவி நலத் திட்ட நிகழ்ச்சிகள் ஆகியவைகளை முன்னின்று நடத்தியவர். முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சிவகாமி ஐயுளு அவர்கள் மூலமாகவும் மற்றும் பிற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மூலமாகவும் அன்னாட்களில் அதிமான நன்மைகளைப் பெற்றுத் தந்தவர்.இப்போதும் பொதுப் பணியோடு தொடர்புடையவர்.
எனது மூத்த சகோதரரான, ஹாஜி டு.ளு.ஆ. முஹம்மது காதர் சாகிபு அவர்கள் 26 ஆண்டுகளாக வழக்கறிஞராகவும், Notary Public ஆகவும், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக இருந்து வருகிறார்கள். எனது இளைய சகோதரரான, L.S.M. ஹஸன் பைசல் அவர்கள் 13 ஆண்டுகாலமாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் மத்திய உள்துறை அமைச்சரான திரு.ப.சிதம்பரம் அவர்களிடமும், அவர்களது துணைவியார் திருமதி நளினி சிதம்பரம் அவர்களிடமும் ஜூனியராக பணியாற்றி இருக்கிறார்.
மேலும் கடந்த 5 ஆண்டு காலமாக சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். தலைமைச் செயலக அலுவலர்களுடனும், அரசு பல்வேறு துறை அதிகாரிகளுடனும் நல் உறவை தொடர்ந்து வருகிறார். நகராட்சியில் எழும் சட்டரீதியான விஷயங்களை அவர்களின் சட்ட ஆலோசனையுடனும் தீர்த்து வைப்பேன். அவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசின் நல நிதிகளை நம் நகராட்சிக்குப் பெற முயற்சி செய்வேன்.ஆட்சியாளருடனும், அதிகாரிகளுடனும், அரசியல் பிரமுகர்களுடனும் சுமூகமான நல்லுறவைப் பேணி ஊருக்கு நன்மைகளைப் பெற முயல்வேன்.
இன்ஷா அல்லாஹ் நான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், உங்களது ஊழியனாகத் தான் என்னை கருதுவேன். கற்று அறிந்த உங்களிடம் பெற்றுக் கொள்ள வேண்டிய அறிவை, அனுபவத்தை, ஆலோசனைகளைப் பெற்றவளாக பணிவுடன் நடந்து கொள்வேன்.
இந்நகரின் கண்ணியத்தையும், ஊரின் பாரம்பரியத்தையும், ஊரின் ஒற்றுமையையும், நம் முன்னோர்கள் கட்டிக் காத்த மரபையும் பேணி, நமக்குள்ளே இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து, உங்கள் அனைவரின் மேலான ஆதரவைத் தாருங்கள். பஸ் சின்னத்தில் வாக்கைப் பதிவு செய்யுங்கள். உங்கள் அன்புச் சகோதரியாகிய என்னை தலைவர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.
வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நல் அருள்புரிவானாக ஆமீன்!
இவ்வாறு நகர்மன்ற தலைமை பொறுப்புக்கான வேட்பாளர் உரையாற்றினார்.
தகவல்:
காயல் எஸ்.ஈ. அமானுல்லாஹ் |