செய்தி எண் (ID #) 7380 | | |
சனி, அக்டோபர் 15, 2011 |
உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 5243 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (55) <> கருத்து பதிவு செய்ய |
|
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைமைக்குப் போட்டியிடும் வேட்பாளரான எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவை ஆதரித்து, காயல்பட்டினம் காக்கும் கரகள் அமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் அழைப்பின் பேரில் பேச வந்த தான் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புள்ள காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த 14.10.2011 வெள்ளிக்கிழமை மாலையில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில், நகராட்சித் தேர்தல் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பேசுவதற்காக காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில் நானும் அழைக்கப்பட்டேன்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை எடுக்கும் எந்த முடிவுக்கும் கீழ்ப்படியும் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) பொதுச் செயலாளராக அக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன்.
ஐக்கியப் பேரவையின் வேட்பாளரை ஆதரித்து பேசச் சென்ற என்னை மரியாதைக்குரிய சகோதரர் அப்துர்ரஷீது (அவ்லியா) அவர்களும், ஜனாப் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் காக்கா அவர்களும், “உன்னை யார் பேச அழைத்தது? முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் பேசிய பின்பு நீ பேசுவது முறையா?? என்று கேட்டனர்.
இவ்வாறு அவர்கள் கேட்டதால் நான் பேசக்கூடிய மனோநிலையை இழந்து மனமுடைந்து சென்றேன். பின்னர், “கண்ணியத்திற்குரிய உவைஸ் ஹாஜியார் அழைக்கிறார்கள்; வந்து பேசுங்கள்!” என்று கேட்டுக்கொள்ளப்பட்டதையடுத்து மீண்டும் பேச வந்தேன்.
“3 நிமிடம்தான் பேச வேண்டும்!” என்றார்கள். நானும் பேசத் துவங்கினேன். நான் பேசத் துவங்கி, 3 நிமிடங்கள் முடிவதற்கு முன்பே “முடி, முடி!” என ஜனாப் காயல் அமானுல்லாஹ் அவர்கள் தொடர்ந்து என்னிடம் கூறி, அரைகுறையாக நான் பேசும் வாய்ப்பை முடித்தார்கள்.
எனது பேச்சுக்களில் எனது உருவாக்கத்தில் கவிதைகள் இடம்பெறுவது வழமை. அவற்றைப் படிக்க எனக்கும் எத்தனையோ மேடைகள் உண்டுதான்! இப்படி என்னைப் பேச அழைத்துவிட்டு, தயவுகூர்ந்து என் மனதைக் காயப்படுத்தாதீர்கள்!
இனி தாங்களே அரசியல், பொதுநலங்களில் ஈடுபடுங்கள். நான் எமது இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) மூலம் மட்டும் இனி பொதுத் துறையில் ஈடுபடுகிறேன். புதிதானவர்களை வளர விடுங்கள்!
என்றுமே ஐக்கியப் பேரவைக்குக் கட்டுப்படும் YUF சங்கத்தை ஏன் இவ்வாறெல்லாம் அவமதிக்கிறீர்கள்?
வல்ல நாயன் எல்லோரும், எல்லோரையும் மதிக்கும் நிலைமையை நமதூரில் தருவானாக, ஆமீன்.
மிகவும் காயப்பட்ட மனதுடன்,
உங்கள் அன்பு YUF செயலர்,
(ஒப்பம்)
எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர்.
இவ்வாறு இளைஞர் ஐக்கிய முன்னணி செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
{இளைஞர் ஐக்கிய முன்னணி செயலர் தந்த கடிதம் அந்நிர்வாகம் தொடர்பானவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இச்செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது. (19.10.2011) ] |