குவைத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழு கூட்டம் வெள்ளியன்று (அக்டோபர் 14) நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
குவைத் காயல் நல மன்ற பொதுக்குழுக்கூட்டம் 14-10-11 அன்று Fahaheel கடற்கரையில் வைத்து நடைப்பெற்றது. ஜனாப் நளீம் தலைமை தாங்கினார். ஜனாப் L.T. அஹமது முஹியத்தீன் கிராத் ஓதினார். புதிய உறுப்பினர் ஜனாப் முஹம்மது அலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. ஊராட்சி தேர்தல் விஷயத்தில் நம் ஊரில் ஏற்பட்டுள்ள, ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் விரும்பத்தகாத சூழ்நிலைக்குறித்து மிகுந்த
கவலையை உறுப்பினர்கள் வெளிப்படுத்தினர். இது சம்பந்தமாக தெளிவான முடிவு எடுக்கப்பட்டு நமதூர் மக்களுக்கு குவைத் காயல் நல
மன்றம் தாழ்மையான வேண்டுகோள் விடுக்கின்றது.
போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர் களுமே நமது முஸ்லிம் சகோதரிகள்தாம். அவர்கள் இருவருடைய நோக்கமும் நமது ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற நல்ல நோக்கம்தான். நமக்குள் சண்டைப்போட்டால் அது நமக்குள் விரிசலையும் பகைமையையும் அதிகரிக்குமே தவிர வேறு எந்த பலனையும் அளிக்காது . நமது வலைத்தளத்தில் நடக்கும் கருத்துப்பதிவுகளைப்பார்க்கும்போது மிகவும் கவலை அளிக்கின்றது. முஸ்லிம் சகோதரர்கள் ஒருத்தரையொருத்தர் வரம்பு மீறி விமர்சிப்பது மிகுந்த வேதனை அளிக்கின்றது.
குவைத் காயல் நல மன்றத்தின் நோக்கம் யாரையும் குறை கூறவோ அல்லது குற்றம் கண்டு பிடிக்கவோ அல்ல. மாறாக ஊர் ஒற்றுமையை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு இந்த தாழ்மையான வேண்டுகோளை விடுக்கின்றது.
வெற்றியைக்கொடுப்பது அல்லாஹ்வின்வசம் உள்ளது. இரு பிரதான வேட்பாளர்களில் யார் வெற்றி பெற்றாலும் (இன்ஷா அல்லாஹ்), வெற்றி பெற்றவர் காயல் நகர ஒற்றுமை ஒன்றே தமது குறிக்கோளாக கொண்டு, வெற்றி பெறாத சகோதரியோடு நட்பு கொண்டு, எல்லாவற்றிற்கும் மேலாக தேர்ந்தடுத்த மக்களுக்கு மனிதாபிமான முறையில் பாகு பாடில்லாமல் சேவை செய்ய வேண்டும் என்று குவைத் காயல் நல மன்றம் மிகவும் தாழ்மையாக வேண்டுகோள் விடுக்கின்றது.
நமதூர் வலை தளங்களையும், நமதூரில் நடப்பவைகளையும் நாம் மட்டுமல்லாது நம்மைச்சுற்றி உள்ள மற்ற எல்லோரும் பார்க்கின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வைப்பயந்து அனைவரும் அமைதி காக்குமாறும், இனிமேல் யாரும் யாரைப்பற்றியும் தவறான கருத்துப்பரிமாற்றம் செய்யாதிருக்குமாரும் மிகத்தாழ்மையாக குவைத் காயல் நல மன்றம் பொது மக்களை கேட்டுக்கொள்கிறது.
ஒற்றுமை என்னும் கயிற்றைப்பலமாக பற்றிப்பிடுத்து கொள்ளுங்கள் என்னும் அல்லாஹ்வின் கட்டளையை உறுதியாக பின்பற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவனாக ஆமீன்.
2. இக்ராவின் 2011 ஆம் வருட நிர்வாகச்செலவுக்காக ரூ 10,000/- (பத்தாயிரம்) வழங்க தீர்மானிக்கப்பட்டது.
3. ஒரு சகோதரியின் B.Ed படிப்பு வகைக்கு ரூ 5,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் கூட்டம் இனிதே முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.M.T. மொகுதூம் முஹம்மது,
துணைச்செயலாளர், குவைத் காயல் நல மன்றம்.
|