காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா நிறுவனத்தில், ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் 146ஆவது நினைவு தின நிகழ்ச்சிகள் 13.10.2011 அன்று துவங்கி, 19.10.2011 வரை நடைபெறுகிறது.
இந்நாட்களில் தினமும் இரவு 08.15 மணி முதல் 09.15 மணி வரை, மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றன.
இறுதி நாள் நிகழ்ச்சிகள் நாளை (19.10.2011) காலை 09.00 மணிக்குத் துவங்குகிறது. தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான கலீஃபத்துஷ் ஷாதுலீ மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றுகிறார். பின்னர், கல்லூரி மாணவர்களின் உரைகள் இடம்பெறுகின்றன.
அதனைத் தொடர்ந்து, கலீஃபத்துல் குலஃபாயிஷ் ஷாதுலீ மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ, ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் அப்துல் காதிர் ஃபாஸீ ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
19.10.2011 அன்று கந்தூரி தினத்தை முன்னிட்டு, காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் வழீஃபா திக்ர் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து திருக்குர்ஆன் ஓதப்பட்டு, காலை 07.00 மணிக்கு தமாம் செய்யப்படுகிறது. அன்று மாலை 04.15 மணிக்கு மனாக்கிப் ஷரீஃப் (மவ்லித்) ஓதப்படுகிறது.
மஃரிப் தொழுகைக்குப் பின் வழீஃபா யாக்கூத்திய்யா எனும் ஸலவாத் ஓதப்படுகிறது. இஷா தொழுகைக்குப் பின், திக்ர் ஹல்கா நடைபெறுகிறது.
பின்னர், “ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் சரித்திரம்” என்ற தலைப்பில் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ உரையாற்றுகிறார். இரவு 09.15 மணிக்கு நேர்ச்சை வினியோகிக்கப்பட்டு, துஆ ஜலாலாவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுறுகின்றன.
தினமும் இரவில் நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் அனைத்தும் ஜாவியா வலைதளத்தின் நேரலை பக்கத்தில் கேட்க அந்நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
www.kayal.tv வலைதளத்தில், ஜாவியாவின் சிறப்பு பக்கத்திலும் இந்நேரலையைக் கேட்கலாம். |