நாளை (அக்டோபர் 17) நடைபெறவிருக்கும் காயல்பட்டின நகர்மன்றதிற்கான தேர்தல் குறித்து தைக்கா தெரு, மொகுதூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள் பெயரில் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையிடம் சில கேள்விகள் கேட்டு - நகரில் துண்டு பிரசூரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...
ஊர் ஒற்றுமை என்ற போர்வையில் தங்களது வேட்பாளரை ஆதரிக்கச் சொல்லும் ஐக்கிய பேரவையிடம் எங்கள் மனதில் தோன்றிய சில கேள்விகள்...
கடந்த 26-09-2011 அன்று ஜலாலியாவில் நடைபெற்ற அனைத்து ஜமாத்கள். சங்கங்கள் கலந்து கொண்ட நகராட்சி மன்ற தலைவர் தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஜமாத் பிரதிநிதிகள் அனைவரும் அவர்களது ஜமாத் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்களா?
இந்த கூட்டத்தில் முச்சரிக்கை கையெழுத்திட்ட நான்கு வேட்பாளர்களின் பெயரையும் முற்கூட்டியே எல்லா ஜமாத்களுக்கும் அனுப்பி அவரவர் ஜமாத் பொதுக்குழுவில் விவாதித்து பின்பு ஐக்கிய பேரவை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அவகாசம் வழங்காதது ஏன்?
முச்சரிக்கை கையெழுத்திட்டவர்களை மட்டும் வாக்கெடுப்பில் தேர்ந்தெடுப்பதா அல்லது விருப்ப மனு கொடுத்த அனைவரையும் கருத்தில் கொண்டு விவாதித்து வாக்கெடுப்பு மூலமாக தேர்ந்தெடுப்பதா என்று கூட்டத்தில் தான் முடிவு செய்யப்பட்டது எனில் முற்கூட்டியே நான்கு வேட்பாளர்களின் பெயர்கள் மட்டும் அச்சடிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் கொண்டுவரப்பட்டு ஓட்டெடுப்பு நடந்தது எப்படி?
பொது வேட்பாளரின் தாயார் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததன் மர்மம் என்ன? உங்கள் கூற்றுப்படி அவர்கள் டம்மி வேட்பாளர் என்றால் பேரவை வேட்பாளருடன் சேர்ந்து அல்லவா மனு தாக்கல் செய்திருக்கவேண்டும். அதை விடுத்து வேட்புமனு தாக்கல் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் அவசர கோலத்தில் மனுச் செய்ய வைத்தது ஏன்? அப்படி என்றால் ஒருவேலை பேரவை வேட்பாளர் இரட்டை வாக்குமுறை குற்றச்சாட்டினால் நிராகரிக்கப்பட்டால் அவர்கள் தாயாரை பேரவை வேட்பாளராக அறிவிக்க திட்டமா? இது என்ன நியாயம்?
மற்ற மூன்று வேட்பாளர்களும் முச்சரிக்கையில் கையெழுத்திடவில்லை என்றும் அதனால் தான் ஐக்கிய ஜமாத் தேர்வுக்குழுவால் நிராகரிக்கப்பட்டார்கள் என்று கூறும் நீங்கள் பேரவை வேட்பாளரின் தாயார் ஐக்கிய பேரவைக்கு விருப்ப மனு கொடுத்தார்களா? முச்சரிக்கையில் கையெழுத்திட்டார்களா? ஓட்டெடுப்பில் அவர் பெயர் பரிசீலிக்கப்பட்டதா? பிறகு எப்படி அவர்களை மனு செய்ய வைத்தீர்கள்?
ஆமீனா பள்ளி ஜமாத்தில் நடந்த வேட்பாளர் தேர்வில் மூன்று பேர் போட்டியிட்டதில் 11 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தில் வந்த சகோதரியை எந்த அடிப்படையில் ஐக்கிய பேரவையின் பொது வேட்பாளராக அங்கீகாரம் செய்தீர்கள்.
கடந்த 10-10-2011 அன்று நடந்த ஐக்கிய பேரவை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய பேச்சாளர் ஒருவர் கள்ள ஓட்டு போட்டே ஜெயித்து விடுவோம் என்பது போல் அறைகூவல் விடுத்தார். மேடையில் இருந்த ஐக்கிய பேரவை பெரியவர்கள் அவரின் அந்த பேச்சை ஆட்சேபிக்காமல் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். அப்படி எனில் கள்ள ஓட்டு போடுவதை ஐக்கிய பேரவை ஊக்குவிக்கிறதா? ஆதரிக்கிறதா? கள்ள ஓட்டு போட்டுத்தான் உங்கள் வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன?
அதே கூட்டத்தில் பேசிய ஐக்கிய பேரவையின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் ஏதோ பாதுகாக்கப்பட்ட ஒரு பரம ரகசியத்தை வெளியிடுவது போல் ஒரு கடிதத்தை குறிப்பிட்டு பேசினார்கள். அது என்னவெனில் பேரவை வேட்பாளர் சகோதரி மிஸ்ரிய்யா அவர்கள் ஏற்கனவே கடந்த 2001ம் ஆண்டு தலைவர் பதவிக்கு போட்டியிட பேரவைக்கு விருப்ப மனு அளித்ததாகவும் ஐக்கிய பேரவையின் வேண்டுகோளை ஏற்று சகோதரி வஹிதா அவர்களுக்கு விட்டுகொடுத்து போட்டியில் இருந்து விலகிக் கொண்டதாகவும் தெரிவித்தார்கள்.
இந்த கடிதம் / செய்தி உண்மையெனில் இது பற்றி ஏன் அனைத்து ஜமாத்கள் தேர்வுக்குழுக் கூட்டத்தில் தெரியப்படுத்தவில்லை?
ஐக்கிய பேரவை வெளியிட்ட அறிக்கையில் இதுபற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை.
அந்த கடிதத்தின் நகலை சகோதரி மிஸ்ரிய்யா அவர்கள் அனைத்து ஜமாத்தார்களுக்கும் கொடுத்த விருப்ப மனுவோடு ஏன் இணைத்து அனுப்பவில்லை.
அந்த கடிதம் உண்மையெனில் அது குறித்து பேசிய பேச்சாளரும் அதனை ஆமோதித்த ஐக்கிய பேரவை நிர்வாகிகளும் அல்லாஹ் மீது சத்தியமிட்டு இது உண்மை என உறுதி கூறுவார்களா?
அதே கூட்டத்தில் பேசிய மற்றொரு பேச்சாளர் இது புறநகர் மக்களுக்கு வேட்பாளரை அறிவித்து அறிமுகம் செய்யும் கூட்டம் என்றார். அப்படியெனில் ஏறத்தாள ஏழாயிரம் வாக்குகள் கொண்ட புறநகர் சகோதர சமுதாய பிரதிநிதிகளோடு வேட்பாளர் தேர்வு சம்பந்தமாக ஏதேனும் கலந்து ஆலோசித்தீர்களா? எல்லா சகோதர சமுதாய மக்களின் ஆதரவோடுதான் ஐக்கிய பேரவை வேட்பாளரை அறிவித்தீர்களா?
அதே கூட்டத்தில் புறநகர் சகோதர சமுதாயத்தில் இருந்து இரண்டு பேர் மட்டும் தான் கலந்து கொண்டு பேசினார்கள். அப்படியென்றால் மற்ற சமுதாய மக்களின் பிரதிநிதிகளை அழைக்கவில்லையா? உங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களை மட்டும்தான் மேடை ஏற்றினீர்களா?
மெகா என்ற தன்னார்வ அமைப்பு நடத்திய வேட்பாளர்கள்- வாக்காளர்கள் நேர்காணலுக்கு உங்கள் பேரவை வேட்பாளரை பங்கு கொள்ளச் செய்யாதது ஏன்? மக்களின் நியாயமான கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை என்ற காரணத்தினால் தான் அதை தவிர்த்தீர்களா?
கடந்த 12-10-2011 அன்று ஜலாலியாவில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பெண் வாக்காளர்களை வாகனங்களில் கூட்டிச் சென்றதும், அங்கு தேனீர் மற்றும் திண்பண்டங்கள் வழங்கப்பட்டதும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது அல்லவா?
அங்கு பேசிய பேச்சாளர் ஒருவர் மற்ற வேட்பாளர்களின் பொது சேவை குறித்து குறை கூறி பேசியது ஏன்? தங்களது வேட்பாளரை பற்றி பெருமையாகக் கூறிக்கொள்ள சேவைகள் ஏதும் இல்லை என்ற காரணத்தினாலா?
அதே பேச்சாளர் தான் பேசும்பொழுது நகராட்சி தலைவிக்கு திறமையானவர்கள் தேவையில்லை என்ற கருத்தை கூறியிருக்கிறார். அதனால் தான் திறமையானவர்களை நீங்கள் நிராகரித்தீர்களா? அந்த கூட்டத்தில் பொதுமக்கள் வேட்பாளரிடத்தில் கேள்விகள் கேட்க அனுமதிக்காதது ஏன்? மக்களின் நியாயமான சந்தேகங்களுக்கு உங்களிடம் பதில் இல்லையா?
தேர்தல் களத்தில் உண்மைகள் வெற்றி பெற்றால்தான் நாம் எதிர்பார்க்கும் நேர்மையான நகராட்சி அமையும். பொதுமக்களே! சிந்திப்பீர்! சிந்தித்து வாக்களிப்பீர்!
இவண்,
ஊர் நலன் விரும்பும்...
தைக்கா தெரு, மொகுதூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அப்துல் காதர் நெய்னா,
ஹாரூன் ரசீத்,
ஹிட்லர் சதக்,
ஏ.எஸ்.மெய்தீன்,
ஏ.எஸ்.புகாரி.
|