சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் குடும்ப சங்கமம் நிகழ்ச்சிகள் இம்மாதம் 01, 02 தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள் 01.10.2011 அன்று மாலை 04.45 மணிக்கு, சிங்கப்பூர் Fairy Point Chalet 1 இல் துவங்கின.
துவக்கமாக அசர் தொழுகை ஜமாத்தாக நடைபெற்றது. சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ தொழுகையை வழிநடத்தினார்.
தேனீர் விருந்து:
மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் தம் குடும்பத்தினருடன் அன்று மாலையில் குறித்த நேரத்தில் கூட்டம் நடைபெறுமிடத்தை வந்தடைந்தனர். பயணித்து வந்தோரின் களைப்பைப் போக்கும் விதமாக துவக்கமாக தேனீர், வெங்காய பக்கோடா பரிமாறப்பட்டது.
கிரிக்கெட் விளையாட்டு:
தேனீர் பரிமாற்றம் நிறைவுற்றதும், மன்ற உறுப்பினர்களும், குழந்தைகளும் க்ரிக்கெட் விளையாடினர்.
அதே நேரத்தில் உறுப்பினர்களுக்கான இரவு உணவு ஏற்பாடுகள் மறுபுறம் விமரிசையாகவும், பரபரப்போடும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பின்னர் மக்ரிப் தொழுகைக்கு பிறகு பொதுக்குழு கூட்டம் ஆரம்பமானது.
கூட்ட நிகழ்வுகள்:
இரவு 07.45 மணிக்கு கூட்டம் முறைப்படி துவங்கியது. கூட்ட நடவடிக்கைகளை திரைமறைவிலிருந்து அவதானிக்கும் வகையில் பெண்களுக்கும் இடவசதி செய்யப்பட்டிருந்தது.
ஹாஃபிழ் செய்யது அகமது, இறைமறை குர்அனின் இனிய வசனங்களை தனதினிய குரலில் கிராஅத்தாக ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
மன்ற அறிவுரையாளரின் வரவேற்புரை:
மன்றத்தின் அறிவுரையாளர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
. அழைப்பையேற்று பெருந்திரளாக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் தனது வரவேற்புரையில் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இயந்திரத்தனமான சிங்கை வாழ்வில் இதுபோன்ற குடும்ப சங்கம நிகழ்ச்சிகளின் அவசியத்தை அவர் தனதுரையில் வலியுறுத்திப் பேசினார்.
மன்றத் தலைவரின் உரை:
இக்கூட்டதிற்கு சிறப்பு விருந்தினர்களாக மும்பையிலிருந்து ஜனாப் K.S. ஜைனுல் ஆப்தீன், மலேசியாவிலிருந்து ஜனாப் ஷாகுல் ஹமீது, Eduquest International Institute, Singapore எனும் நிறுவனத்திலிருந்து ஜனாப் இத்ரீஸ் மாலிம் மற்றும் ஜனாப் முஹம்மது ரபீக் மற்றும் Understand Quran Academy எனும் நிறுவனத்திலிருந்து ஜனாப் முஹைதீன் கஸ்ஸாலி ஆகியோர் கலந்துகொண்டனர். பொதுக்குழு கூட்ட தலைவரும், மன்ற தலைவருமான எம்.ஆர்.ரஷீத் ஜமான் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
புதிய உறுப்பினர்ளான ஜக்கரியா மௌலானா, அஹ்மத் மூஸா, நவீத் ஹசன், சிராஜ் மற்றும் மலேசியாவிலிருந்து வந்திருந்த ஷாகுல் ஹமீது ஆகியோர் தங்களை அறிமுகப்படுதிகொண்டனர்.
காயல்பட்டினம்.காம் மிற்கு நன்றி:
மலேசியாவின் ஜோஹோர் பஹ்று பகுதியில் கடந்த 9 வருடங்களாக வசித்து வரும் சகோதரர் சாகுல் ஹமீது அவர்களை தொடர்புகொள்ள காயல்பட்டினம்.காம் மின் கருத்து பகுதி உதவியது என்றும் அதற்காக காயல்பட்டினம்.காம்-மிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அவர் பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பயண ஏற்பாடுகளை உறுப்பினர்கள் சாளை நவாஸ் மற்றும் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை ஆகியோர் செய்திருந்தனர்..
மன்ற செயல்பாடுகள் விளக்கம்:
மன்ற செயல்பாடுகள் குறித்த சுருக்கமான விவரத்தை விளக்ககாட்சி மூலம் செயலாளர் மொகுதூம் முஹம்மத் தெரிவித்தார். ஆதரவற்ற மக்களுக்காக மன்றத்தால் வழங்கப்பட்டு வரும் அத்தியாவசிய சமையல் பொருட்கள் (Groceries for Needy Kayalites - GNK) திட்டம் பற்றிய உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு மன்றத்தலைவர் விளக்கமளித்தார்.
உறுப்பினர் செய்து லெப்பை காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறியும் குழுவான (Cancer Fact Finding Committee – CFFC) அவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையை சிங்கபூரில் உள்ள இந்திய தூதரகத்தில் சமர்ப்பித்த பிறகு அவர்களிடமிருந்து பதில் ஏதும் வந்ததா? என்று கேட்டார். தற்போது வரை எந்த பதிலும் இல்லை என்றும் இதுபற்றி விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. திரைமறைவிலிருந்து கூட்டத்தை கேட்டுகொண்டிருந்த பெண்கள் நகரில் கைபேசி கோபுரங்களை ஊரில் ஒதுக்குபுறமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுகொண்டனர்.
சிறுவர், சிறுமிகளுக்கான குர்ஆன் ஓதும் போட்டி:
சிறுவர், சிறுமிகளுக்கான குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்றது. கலந்துகொண்ட அனைத்து சிறுவர்களும் குர்ஆனை அழகாக ஓதினர். பின்னர் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்தனர்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது. அல்ஹம்துலில்லாஹ், கடந்த வருடங்களை விட இந்த வருடம் அதிகமாக நிதியுதவி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கும், பங்களிப்பிற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
செயலாளரின் கருத்து:
மன்றத்தின் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்காக உறுப்பினர்கள் அனைவரும் தங்களது, வருடத்தின் ஒரு நாள் சம்பளத்தை மன்றத்திற்கு அளிக்கலாம் என்று செயலாளர் மொகுதூம் முஹம்மத் யோசனை கூறினார். இதுபற்றி வரும் செயற்குழு கூட்டத்தில் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டது.
குர்ஆன் பயிற்சி:
குர்ஆனை எளிய வழியில் புரிந்துகொள்ளும் விதமாக Understand Quran என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினர் ஜனாப் முஹைதீன் கஸ்ஸாலி சிறிது நேரம் பயிற்சியாற்றினார்.
ஜாமிஆ சூலியா பள்ளியின் செயலாளருக்கு பாராட்டு:
சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.ரஷீத் ஜமான் அவர்களை மன்றத்தின் அறிவுரையாளர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் பாராட்டினார்.
Eduquest International Institute, Singapore, பற்றி விளக்கம்:
சகோதரர் இத்ரீஸ் மாலிம் Eduquest International Institute, Singapore, பற்றியும், அது சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு செய்து வரும் சேவைகளை பற்றியும் விவரித்தார்.
உண்டியல் திறப்பு:
அடுத்த உண்டியல் திறப்பு வரும் நவம்பர் மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், அனைத்து உறுப்பினர்களும் தமது உண்டியல்களை வெற்றிடமின்றி எடுத்து வருமாறும் கேட்டுகொள்ளபட்டது.
இரங்கல் அறிக்கை:
உறுப்பினர்கள் ஷேக் அப்துல் காதர் மற்றும் ஜக்கரியா மௌலானா அவர்களின் தந்தைவழி அப்பாவாவும், ‘மலேஷியா வாப்பா‘ என எல்லோராலும் அழைக்கப்பட்டவருமான மவ்லவீ அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் நூ.கு.ஷெய்கு அப்துல் காதிர் ஸூஃபீ ஹஜ்ரத் அவர்களின் வபாத் செய்தி அறிந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. எல்லாம்வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக.
புனித ஹஜ் பயண வாழ்த்து:
இவ்வாண்டு தன் குடும்பத்துடன் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக மன்ற செயற்குழு உறுப்பினர் ஸூஃபீ ஹுஸைன் கூட்டத்தில் தெரிவித்தார். இதற்காக அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களது ஹஜ் கிரியைகள் அனைத்தும் அல்லாஹ்வால் முழுமையாக ஒப்புக்கொள்ளப்பட கூட்டம் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தது.
நன்றியுரை:
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும், அனைவரது ஒற்றமை-ஒருமைப்பாட்டிற்காக பிரார்த்திக்கும் அனைவருக்கும் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளவதாகக் கூறினார்.
விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவுமில்லா நிலையில், மவ்லவீ நஹ்வீ ஏ.எம்.முஹம்மத் இப்றாஹீம் மஹ்ழரீ துஆவுடன் கூட்டம் இரவு 10.15 மணி அளவில் நிறைவுற்றது.
பின்னர் இஷா தொழுகை கூட்டாக நிறைவேற்றப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் தொழுகையை வழிநடத்தினார்.
பின்னர், இரவு உணவு விருந்துபசரிப்பு துவங்கியது. அனைவருக்கும் ஸஹன் முறையில் காயல்பட்டினம் களறி சாப்பாடு பரிமாறப்பட்டது. முற்கால நடைமுறைப்படி ஸஹனுக்கு மூவர் முறையில் விருந்துபசரிப்பு நடைபெற்றது.
மகளிருக்கான வினாடி-வினா போட்டி:
இரவு உணவு விருந்துபசரிப்பு நிறைவுற்றதும், மகளிருக்கான வினாடி-வினா நிகழ்ச்சி இரவு 11.30 மணிக்கு நடைபெற்றது. உம்ராஹ், ஹஜ், குரான், இந்திய அரசாங்கத்தின் நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு ஆகிய தலைப்புகளில் கேள்விகள் அமைந்திருந்தது. வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மன்ற உறுப்பினர்களும், விருந்தினர்களும் அன்றைய இரவுப் பொழுதை Chaletஇலேயே கழித்தனர்.
02-October-2011 அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள்:
நள்ளிரவு 1 மணி அளவில் பார்பிகூ எனும் சுட்ட கோழிகறி மற்றும் நண்டு தயார் செய்து உறுப்பினர்கள் அனைவரும் உண்டு இரவை மகிழ்வுடன் கழித்தனர்.
உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் அதிகாலையில் சாங்கி பீச் கிளப்பில் நடைபயிற்சி செய்தனர். காலை உணவிற்கு இட்லி, சாம்பார் மற்றும் சட்னி பரிமாறப்பட்டது.
காலை 10 மணி அளவில் உறுப்பினர்களுக்கான அதிர்ஷ்ட குலுக்கல் போட்டி நடைபெற்றது. K.S ஜைனுல் ஆப்தீன் மற்றும் V.N.S முஹைதீன் தம்பி முஹ்ஸின் ஆகியோர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
ஒருபுறம் உறுப்பினர்கள் கிரிக்கெட் விளையாட மறுபுறம் மதிய உணவிற்கு மீன் மற்றும் இறால் பிரியாணி தயாரானது.
பகல் 1 மணிக்கு லுகர் தொழுகை நடைபெற்றது. ஹாஜி பாளையம் முஹம்மது ஹசன் தொழுகையை வழிநடத்தினார்.
பகல் 1.30 மணிக்கு மதிய உணவும் மாலை 4 மணிக்கு தேநீரும் பரிமாறப்பட்டது.
அசர் தொழுகை 4.30 மணிக்கு நடைபெற்றது. ஹாஜி பாளையம் முஹம்மது ஹசன் தொழுகையை வழிநடத்தினார்.
மாலை 5 மணிக்கு மன்ற உறுப்பினர்கள் மனநிறைவுடன் கலைந்து சென்றனர். அவர்களை பல்வேறு பகுதிகளிலுள்ள அவரவர் தங்குமிடங்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய உறுப்பினர்களுக்கும், பொதுக்குழு ஏற்பாட்டு குழுவிற்கும் நன்றி. இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் இதைவிட சிறப்பாக செய்வோமாக!!!
நெஞ்சம் மறப்பதில்லை...
மொத்தத்தில் இப்பொதுக்குழு நிகழ்வுகள் மன்ற உறுப்பினர்களின் - குறிப்பாக மகளிரின் நினைவுகளில் நீங்கா இடம்பெற்றுவிட்டது. நிகழ்வுகள் அனைத்திலும் ஆண்களை விட மகளிர் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த நேரத்தில் சாப்பாடு தயார் செய்து, சுவையான உணவு, மகளிருக்கு முதல் முக்கியத்துவம் என்ற அடிப்படையில் அளித்த ஆண்களுக்கு அவர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
இதுபோன்று மகளிர் அனைவரும் தங்களது இல்லதரசர்களை புரிந்து கொண்டு அவர்களை சிறப்பாக கவனிக்கவேண்டும் என்று ஆண்கள் அனைவரும் கேட்டுகொண்டனர். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அணைத்து நற்செயல்களையும் ஏற்று மகிழ்ச்சியான வாழ்கையும் சாலிஹான குழந்தைகளையும் தந்தருள்வானாக...ஆமீன்..
இவ்வாறு சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மொகுதூம் முஹம்மத்,
செயலாளர்,
காயல் நல மன்றம்,
சிங்கப்பூர். |