செய்தி எண் (ID #) 7339 | | |
புதன், அக்டோபர் 5, 2011 |
‘மலேஷியா வாப்பா‘ என்றழைக்கப்பட்ட ஸூஃபீ ஹஸ்ரத் காலமானார்! குருவித்துறைப்பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 8656 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (44) <> கருத்து பதிவு செய்ய |
|
‘மலேஷியா வாப்பா‘ என்றழைக்கப்பட்ட ஸூஃபீ ஹஸ்ரத் காலமானார்! குருவித்துறைப்பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!!
‘மலேஷியா வாப்பா‘ என எல்லோராலும் அழைக்கப்பட்ட மவ்லவீ அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் நூ.கு.ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூஃபீ அவர்கள் 02.10.2011 அன்று காலை 09.00 மணியளவில் சென்னையில் காலமானார். அன்னாருக்கு வயது 85. ஜனாஸா நல்லடக்கம் காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் மறுநாள் 03.10.2011 காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.
இதுகுறித்து, ஸூஃபீ மன்ஸில்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
காயல்பட்டினம் புனித மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் ஸ்தாபகர்களில் ஒருவரான கண்ணியத்திற்குரிய மர்ஹூம் மவ்லானா மவ்லவீ செ.யி.நூஹ் லெப்பை (வேலூர் ஆலிம்) அவர்களின் மகனாரும், ஷெய்குனா அல் ஆரிஃப் பில்லாஹ் முஹிப்பிர்ரஸூல் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூஃபீ ஹஸ்ரத்ஜீ ஸித்தீக்குல் காதிரிய்யுல் காஹிரீ அவர்களின் கலீஃபாவும், காதிரிய்யா தரீக்காவின் ஷெய்கும், எங்கள் நேசத்திற்கும், பாசத்திற்குமுரிய சங்கை சான்ற கலீஃபாவுமான அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஷ்ஷெய்க் நூ.கு.ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூஃபீ ஹஸ்ரத் என்ற மலேஷியா வாப்பா அவர்கள் 02.10.2011 அன்று காலை 09.00 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
03.10.2011 அன்று காலை 10.45 மணி வரை ஜனாஸா பொதுமக்கள் பார்வைக்காக வீட்டின் முன்புறத்தில் வைக்கப்பட்டிருந்தது.
பின்னர், ஜனாஸா எடுத்துச்செல்லப்பட்டு, அஷ்ஷெய்க் மவ்லவீ டபிள்யு.எம்.எம்.செய்யித் முஹம்மத் ஆலிம் என்ற ஊண்டி ஆலிம் அவர்கள் ஜனாஸா தொழுகையை வழிநடத்த, 03.10.2011 அன்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் வடகீழ்ப் பகுதியிலுள்ள - பள்ளியின் ஸ்தாபர்கள் அடங்கப்பெற்றிருக்கும் கோட்டைக்குள் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு பள்ளி வளாகத்தின் கீழ்ப்புறத்தில், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை கட்டிடத்தை எதிர்நோக்கிய பகுதியில் சிறப்பு பந்தல் அமைக்கப்பட்டு, ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது.
ஜனாஸா நல்லடக்கம் நிறைவுற்றதும், மர்ஹூம் அவர்களின் இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஹாஜி கம்பல்பக்ஷ் மொகுதூம் முஹம்மத் அவர்கள் துவக்கவுரையாற்ற, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ இரங்கல் பேருரையாற்றினார். துஆ பிரார்த்தனையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
ஜனாஸா நல்லடக்கம் மற்றும் இரங்கல் கூட்டத்தில் காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், மலேஷியா, சீனா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும், சென்னை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அன்னாரது பிரிவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். எல்லாம்வல்ல அல்லாஹ், அன்னாரது பிழைகளைப் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் மேலான சுவனபதியில், அண்ணலெம் பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு சேர்த்து அருள் புரிய பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு, ஸூஃபீ மன்ஸில்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
J.A.அப்துல் ஹலீம், B.Pharm.,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |