செய்தி எண் (ID #) 7338 | | |
செவ்வாய், அக்டோபர் 4, 2011 |
உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 15225 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (109) <> கருத்து பதிவு செய்ய |
|
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடும் ஆபிதா காயல்பட்டினம் நகர மக்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குமுரிய காயல்பட்டினம் நகர பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 17.10.2011 அன்று நடைபெறவுள்ள காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில், நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்கு உங்கள் யாவரின் மேலான நல்லாதரவையும் எதிர்பார்த்தவளாக, மக்கள் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன்.
முக்கியம், 03.10.2011 அன்று (நேற்று) நான் சார்ந்துள்ள புதுப்பள்ளி ஜமாஅத் பெயரில், அதன் தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் அவர்கள் இணையதளத்திற்கு (செய்தி எண்: 7336) ஓர் அறிக்கையை அளித்திருந்தார்கள். அந்த அறிக்கையில், நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடும் முன் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையுடனான எனது நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது.
பேரவையுடன் தொடர்பான எனது நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு எப்படியேனும் தெரிவித்தேயாக வேண்டும் என்று என் மனம் தூண்டியபோதெல்லாம் என்னை நான் கட்டுப்படுத்திக்கொண்டு, நாமாக ஏன் மக்களிடம் முந்திக்கொண்டு சொல்ல வேண்டும்... பின்னர் அதை ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் ஒரு செயலாக மக்கள் எடுத்துக்கொள்வார்களே... என்ற எண்ணத்தில் இதுகுறித்து எதையும் இதுவரை தெரிவிக்காமலிருந்தேன்.
ஒருபுறம் நல்லெண்ணத்துடன் நான் இவ்வாறு என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க, மறுபுறம் ஓர் ஊடகத்தில் இவ்வாறு விமர்சனத்தை வெளியிட்டு, ஊர் உலகறியச் செய்துள்ளதால், என் தொடர்பாக பேரவையுடன் என்ன நடந்தது என்று ஏராளமான மக்களும் கருத்துப்பதிவு செய்துள்ளனர். எனவே, நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்:-
நான் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிட முடிவெடுத்தவுடன், 20.09.2011 அன்று மதியம் 01.00 மணியளவில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு பின்வருமாறு எனது விருப்ப மனுவை அளித்தேன்:-
என்னைப் போலவே நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடும் பிறரும் விருப்ப மனுவை பேரவைக்கு அளித்திருந்தனர்.
நமதூரின் அனைத்து ஜமாஅத்தாரும் இதனை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்குடன், நகர பள்ளிவாசல்களின் முத்தவல்லிகளுக்கும் அவர்களின் இல்லங்களுக்கு நானே நேரில் சென்று, ஐக்கியப் பேரவைக்கு நான் அளித்த விருப்ப மனுவின் நகலுடன், பின்வருமாறு தனிக்கடிதம் அளித்தேன்.
இந்நிலையில், ஐக்கியப் பேரவைக்கு நான் விருப்ப மனுவை அளித்த அன்றிரவே அதன் சார்பாக ஒருவர் என்னைச் சந்தித்து பேரவையின் சார்பில் இரணடு பக்க மடலை என்னிடம் தந்து, அதில் இரண்டாவது பக்கத்தில் உடனடியாக கையெழுத்திட்டு, அன்றைய தினமே பேரவையில் ஒப்படைக்குமாறு என்னிடம் வலியுறுத்திக் கூறினார். “மடலில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை படித்து, சிந்தித்து முடிவெடுக்க அவகாசம் தராமல் அவசர கதியில் கையொப்பம் கேட்கலாமா?” என்று நான் கேட்டதால், “சரி, நாளைக்கு நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்; கையெழுத்திட்டு வை!” என்று கூறி, எனது பதிலை எதிர்பார்க்காமலேயே சென்றுவிட்டார். அந்த இரண்டு பக்க மடல் பின்வருமாறு:-
இது இவ்வாறிருக்க, நான் பேரவைக்கு மேற்படி விருப்ப மனு அளித்த நேரத்திலிருந்து எனக்கு மாற்றி மாற்றி பலர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கையெழுத்திட வற்புறுத்திக் கொண்டே இருந்தனர். சிலர் நேரிலும் என்னைச் சந்தித்து வற்புறுத்தினர். இது என் மனதில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மறுநாள் 21.09.2011 அன்று மதியம் 01.30 மணியளவில், ஏற்கனவே பேரவை சார்பில் என்னைச் சந்தித்த நபரும், மற்றொருவரும் என்னை நேரில் சந்தித்து, பேரவையின் மேற்படி மடலில் கையெழுத்து கேட்டனர்.
“நான் நகர்மன்றத் தலைவரானால் இதைச் செய்வேன்... அதைச் செய்ய மாட்டேன்...” என்ற அமைப்பில் ஏதேனும் வாசகங்களைப் பதிவு செய்து அதனடியில் கையெழுத்து கேட்டிருந்தால் அதில் கையெழுத்திடுவதில் எனக்கு எந்த தயக்கமும் இருந்திருக்காது. “எந்த விபரமும் தெரிவிக்கப்படாமல் மொட்டையாக அமைந்திருந்த அந்த மடலில் கையெழுத்திட என் மனம் ஒப்பவில்லை” என்று நான் அவர்களிடம் தெரிவித்தேன்.
அதன்பிறகு, அவர்களில் முதலாமவர் தொலைபேசியில், “சரி, நீங்கள் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடும் செய்தியை (நகரப் பிரமுகர் ஒருவரின் பெயரைச் சொல்லி) இன்னாருக்கு தொலைபேசியில் தெரிவித்து விடுங்கள்!” என்று என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு அவர் சொன்னது, பேரவையின் மேற்படி மடலில் கையெழுத்திடுவது குறித்த எனது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.
இதற்கிடையே, நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பாத பலரிடமும் வலியுறுத்தி மனு பெறப்பட்டதாகவும், பேரவையின் நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே, “இன்னாரைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்...” என்ற ரீதியில் பெறப்பட்ட செய்திகளும் என்னை பெரிதும் சிந்திக்க வைத்துவிட்டது.
இறுதியாக, “இம்மடலில் நான் கையெழுத்திட மாட்டேன்...” என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துவிட்டேன். அதன்பிறகு, தொலைபேசியில் பலர் என்னைத் தொடர்புகொண்டு கையெழுத்திட வலியுறுத்தியபோதும் நான் எனது மறுப்பை தெளிவாகத் தெரிவித்துவிட்டேன்.
26.09.2011 அன்று இரவு பேரவையின் நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழுக் கூட்டம் நடைபெறவிருப்பதை அறிந்தேன். இதற்கு இடைப்பட்ட காலத்தில், நான் ஊர் பெரியவர்கள் அடங்கிய பேரவையை மதிக்கவில்லை என்றும், ஊர் ஜமாஅத்துகளுக்குக் கட்டுப்படவில்லை என்றும், ஊர் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிப்பவள் போலவும் என்னைப் பற்றி ஊர் முழுக்க செய்திகள் பரப்பப்பட்டு வந்ததால், நான் கையெழுத்திட மறுத்ததற்கான காரணத்தை நாகரிகமாகப் பதிவு செய்து, கூட்டம் நடைபெறவிருந்த 26.09.2011 அன்று மதியம் பேரவை அலுவலகத்திற்கு நேரில் சென்று, பேரவை நிர்வாகிகள் பலர் முன்னிலையில் ஜனாப் காயல் அமானுல்லாஹ் அவர்களிடம் பின்வருமாறு எனது கடிதத்தை அளித்தேன்:-
“இது எனது தன்னிலை விளக்கம்... பேரவையின் மடலில் நான் கையெழுத்திடாமல் இருந்தமைக்கான காரணம் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது... இன்றிரவு நடைபெறும் கூட்டத்தில் அனைவரும் அறியும் வகையில் இக்கடிதத்தைப் படித்துக் காட்டுங்கள்...” என்று தெரிவித்தேன். “சரி, படிப்போம்...” என்று அவர் தெரிவித்தார். ஆனால் அன்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் நான் பேரவையின் மேற்படி மடலில் கையெழுத்திடவில்லை என்று மட்டும் தெரிவித்துவிட்டு, விருப்பமனு அளித்த வேட்பாளர்களின் பெயர்பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்படாமலேயே வாக்கெடுப்பு நடந்துள்ளதை அறிந்துகொண்டேன்.
இதுதான் நடந்த உண்மை நிகழ்வுகள் என்பதை அல்லாஹ்வை சாட்சியாக்கி உங்களிடம் திறந்த மனதுடன் தெரிவித்துள்ளேன்.
இவ்வாறிருக்க, நான் சார்ந்துள்ள புதுப்பள்ளி ஜமாஅத் பெயரில் அதன் தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில அம்சங்களுக்கு விளக்கமளிப்பது நன்று என்று கருதுகிறேன்.
“அதன்படி பேரவையின் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்ட நமது ஜமாஅத் தலைவரும் நமது ஜமாஅத் வேட்பாளரையே தெரிவு செய்யும்படி சிபாரிசு செய்திருக்கிறார்கள். இந்த சிபாரிசிற்கு பேரவையின் பல உறுப்பினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் இருந்தது...” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறிருந்தால், எனது விருப்ப மனுவை மட்டும் போதுமாக்கிக் கொண்டிருக்கலாமே...? ஏன் எதையும் தெரிவிக்காமல் மொட்டையான வாசகங்களடங்கிய ஒரு மடலில் என்னிடம் கையெழுத்து கேட்டனர்...? ஊர் நன்மைதான் முக்கியம் என்று பெரியவர்கள் கருதினால், நான் மட்டுமல்ல; அனைத்து போட்டியாளர்களும் அளித்த விருப்ப மனுவை மட்டுமே போதுமாக்கிக் கொண்டிருக்கலாமே...? அல்லது நான் ஏற்கனவே தெரிவித்தபடி, “ஊழலுக்குத் துணை போக மாட்டேன்... நேர்மையாக நடப்பேன்...” என்பன போன்ற சில நிபந்தனைகளைப் பதிவு செய்து அதனடியில் கையெழுத்து கேட்டிருக்கலாமே...?
நான் பேரவையையும், அதிலுள்ள பெரியவர்களையும் மதித்த காரணத்தால்தான் எனது 20.09.2011 அன்று எனது விருப்ப மனுவை பேரவையிடம் வழங்கினேன்.
நான் நமதூரின் அனைத்து ஜமாஅத் பொதுமக்களையும் மதித்த காரணத்தால்தான், அனைத்து பள்ளிவாசல்களுக்கும் / பள்ளிவாசல்களின் முத்தவல்லிகளது இல்லங்களுக்கும் நேரடியாகச் சென்று விருப்ப மனுவை அளித்தேன்.
மேற்சொன்ன அதே காரணங்களுக்காகத்தான், “பேரவையை மதிக்கவில்லை... பெரியவர்களை மதிக்கவில்லை...” என்றெல்லாம் செய்திகள் பரப்பப்பட்டவுடன் எனது தன்னிலை விளக்கத்தை 26.09.2011 அன்று பேரவையில் உடனடியாக வழங்கினேன்.
பேரவையில் எனது தன்னிலை விளக்கத்தை அளித்தபோதும், பேரவையின் நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழு கூட்டத்தில், பொதுவேட்பாளர் என்று ஒருவர் தேர்வு செய்யப்பட்ட பின்னரும், “உன்னைத்தான் தேர்ந்தெடுக்க எல்லோரும் நாடியிருந்தோம்... இப்படி தேடி வந்த சீதேவியை எட்டி உதைத்துவிட்டாயே...?” என்று பலர் என்னிடம் நேரிலும், தொலைபேசியிலும் தெரிவித்தனர். இப்போது எனக்கு இருக்கும் சந்தேகமெல்லாம், ஆபிதாவாகிய என்னைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தால், ஏன் மற்றவர்களிடமெல்லாம் விருப்ப மனு கேட்டனர்...? எதற்கு இந்த பொது வேட்பாளர் தேர்தல்...? இது எனக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
பேரவை தொடர்பான எனது நடவடிக்கைகள் குறித்து அறிய இந்த விளக்கம் போதுமானதாக இருக்கும் என்று கருதி, உங்கள் யாவரின் மேலான ஆதரவை எதிர்பார்த்து நிறைவு செய்கிறேன்.
வரும் 17.10.2011 அன்று நடைபெறவுள்ள காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் எனக்கு “புத்தகம்” சின்னத்தில் வாக்களித்து, அமோக வெற்றிபெறச் செய்யுமாறும், ஊருக்கு வெளியில் இருப்போர் அவசியம் வாக்களிக்க வருமாறும், உங்கள் குடும்பத்தாரிடம் சொல்லி வாக்களிக்கச் செய்யுமாறும் அன்புடனும், பணிவுடனும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, ஜஸாக்குமுல்லாஹு கைரா!
அனைத்தையும் நன்கறிந்தவன் அல்லாஹ் ஒருவனே! அவனே எனக்குப் போதுமானவன்!!
இவ்வாறு நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடும் ஆபிதா தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |